பணம் சம்பாதிப்பதை விட, பட்ஜெட் போட்டு அதை செலவு செய்வதும் சேமிப்பதும் சற்றே சவாலான விஷயம். ஜப்பானிய பட்ஜெட் முறையான ககீபோ (Kakeibo)வைப் பற்றி தெரிந்து கொண்டு எப்படி பணம் சேர்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ககீபோ என்றால் என்ன?
Kakeibo என்ற வார்த்தையின் பொருள் ஜப்பானிய வரவு செலவுத் திட்ட முறையாகும். இது தனிநபர்கள் தங்கள் செலவினப் பழக்கங்களை முறைப்படுத்தவும் சேமிப்பு இலக்குகளை அடையவும் உதவுகிறது.1904ம் ஆண்டு ஜப்பானிய முதல் பெண் பத்திரிகையாளர் ஹனி மோட்டோகோ என்பவர் ஜப்பானிய இல்லத்தரசிகள் தங்கள் மாதாந்திர வீட்டுச் செலவுகளை நிர்வகிக்க உதவுவதற்காக இந்த நுட்பத்தை உருவாக்கினார். இந்த நுட்பம் தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகியுள்ளது.
பண வரவு மற்றும் செலவு ஆகியவற்றை ஒரு லெட்ஜரில் பேனாவால் எழுதும் பயிற்சி முறை. இதில் அனைத்து வருமான ஆதாரங்கள், கட்டாய செலவுகள், விருப்பமான செலவுகள் ஆகியவற்றை கையால் நேர்மையாக எழுத வேண்டும். காகிதத்தில் எண்களை பார்ப்பதன் விளைவாக அது மனதில் வலுவான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எந்தெந்த செலவுகள் தேவையில்லை அவற்றை எப்படி முற்றிலும் தவிர்க்கலாம் என்பதை உணர்த்த இது உதவுகிறது. இது சிக்கனத்தை கற்பிக்கவும் நிதி இலக்குகளை சேமிக்கவும் எதிர்பாராத செலவினங்களுக்காகவும் உதவுகிறது.
ககீபோ பட்ஜெட்டின் நான்கு பிரிவுகள்: ஒரு தனி நபரின் செலவினங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
1. நிலையான செலவுகள்: உணவு, அன்றாடத் தேவைகள், மருத்துவம், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கான பணம் எவ்வளவு என்று அந்த நோட்டில் குறிக்க வேண்டும்.
2. ஷாப்பிங்: இது அத்தியாவசிய தேவை அல்ல. ஆனால், வாழ்க்கையை அனுபவிக்க உதவும் உடைகள், பொருட்களை வாங்குவது, வெளியில் ஹோட்டலில் சாப்பிடுவது போன்றவை இதில் அடங்கும்.
3. பொழுதுபோக்கு: வாழ்க்கையில் கலாசார அனுபவங்களை பெற அனுமதிக்கும் ஒரு கொள்முதல். புத்தகங்கள் வாங்குவதற்கான செலவு, அருங்காட்சியகங்கள், நாடகங்கள், சினிமா போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இதன் கீழ் வரும்.
4. எதிர்பாராத செலவுகள்: அவசியமான, ஆனால் முன்கூட்டியே கணிக்க முடியாத செலவுகள் இதில் அடங்கும். மருத்துவச் செலவுகள், வீட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதடைவது, வண்டி வாகன செலவுகள் போன்றவை இதில் அடங்கும்.
ககீபோவை பயன்படுத்தும் முறை: செலவுகளை குறித்துக்கொள்ள இரண்டு குறிப்பேடுகளை பராமரிக்க வேண்டும். பெரிய குறிப்பேட்டில் மேற்கண்ட அந்த நான்கு வகை செலவினங்களையும் குறித்துக்கொள்ள வேண்டும். சிறிய குறிப்பேட்டை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாரம் முழுவதும் செய்யும் ஒவ்வொரு செலவையும் அதில் குறிப்பிட வேண்டும். பின்பு அந்த சிறிய நோட்டில் உள்ள செலவுகளை பெரிய குறிப்பேட்டில் உள்ள நான்கு வகைகளில் ஒவ்வொன்றின் கீழும் குறிப்பிட வேண்டும். இப்படி எழுதுவதன் மூலம் ஒரு நபருக்கு கூடுதல் செலவுகள் எத்தனை செய்திருக்கின்றோம் என்கிற பொறுப்புணர்வு வருகிறது.
வாழ்க்கையில் ககீபோவை பயன்படுத்தும் முறை: ஒருவர் 50,000 ரூபாய் மாத வருமானமாக பெறுகிறார் என்றால் அவருடைய செலவு மற்றும் சேமிப்பை பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம். அதில் நிலையான செலவுகளுக்கு 20000 ரூபாயையும், சேமிப்பிற்காக பத்தாயிரம் ரூபாயையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு பகுதியை மட்டும், அதாவது 5000 ரூபாயை மட்டும் பொழுதுபோக்கிற்காக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 15 ஆயிரம் ரூபாயில் எதிர்பாராத செலவுகள் போக மீதம் உள்ளதை அப்படியே சேமித்து வைக்க வேண்டும். இது ஒரு தனி சேமிப்பாக வளரட்டும். இதனால் தேவையில்லாத அனாவசியமாக செலவுகள் செய்யத் தோன்றாது. நிறைய சேமித்து வளமாக வாழ முடியும்.