மிரரிங் (Mirroring) எனப்படும் பிரதிபலிப்பு ஒரு உரையாடலின்போது ஒரு நபர் மற்றொரு நபரின் உடல் மொழி, பேச்சு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை நுட்பமாக பின்பற்றும் ஒரு தொடர்பு நுட்பமாகும். இது தனி நபர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், தொடர்புகளை உருவாக்கவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
மிரரிங் எப்படி வேலை செய்கிறது?
ஒருவர் மற்றொருவரை பிரதிபலிக்கும்போது அவர்களின் சைகைகள், முக பாவனைகள், குரலின் தொனி அல்லது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கூட பிரதிபலிக்கலாம். உதாரணமாக, ஒருவர் தனது நண்பர் முன்னோக்கி சாய்ந்து உற்சாகமாகப் பேசினால் அவரும் சாய்ந்து அதேபோன்ற உடல் மொழியைப் பின்பற்றலாம். இந்த ஒற்றுமை இருவருக்குள்ளும் ஒரு புரிந்துகொள்ளும் தன்மையை ஏற்படுத்தும்.
உரையாடலில்: நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் உரையாடலில் ஈடுபடும்போது எதிரே உள்ள நபரைப் போலவே புன்னகைப்பது அல்லது முகம் சுளுக்குவது அல்லது அவர்களின் உடல் மொழி அணுகுமுறையை பின்பற்றுவது ஆகியன அடங்கும்.
விற்பனையில்: விற்பனையில் பிரதிபலிப்பு முக்கிய சொற்றொடர்களை மீண்டும் கூறுவது அல்லது பேச்சாளரின் வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத குறிப்புகளை பொருத்துவது ஆகியவை பரிச்சயத்தை ஏற்படுத்தவும் நல்லுறவை வளர்க்கவும் உதவும்.
பிரதிபலிப்பை பயன்படுத்துவதன் நன்மைகள்:
நல்லுறவை உருவாக்குகிறது: பிரதிபலிப்பு மக்களிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த உதவும். யாரோ ஒருவர் தனது சொந்த நடத்தையை பிறரிடம் பிரதிபலிப்பாக பார்க்கும்போது அவர்கள் நெருங்கிய உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தகவல் தொடர்பு மேம்படுதல்: இது தகவல் தொடர்பை மேம்பாடு அடைய செய்கிறது. தன்னைப் போலவே ஒருவர் உடல் மொழியையும் சைகைகளையும் வெளிப்படுத்தும்போது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குகிறது.
அனுதாபத்தை ஊக்குவிக்கிறது: ஒருவரின் உணர்ச்சிகளையும் உடல் மொழியையும் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் உணர்வுகளையும் முன்னோக்குகளையும் ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். இது அதிக இரக்கமுள்ள தொடர்புகளுக்கு வழிவகுக்கும்.
செல்வாக்கை மேம்படுத்துகிறது: பேச்சுவார்த்தைகள் அல்லது உரையாடல்களில் வலியுறுத்தல் தேவைப்படும்போது பிரதிபலிப்பு நன்கு வேலை செய்கிறது. அது நம்பகமானதாகவும் செல்வாக்கை அதிகரிப்பதாகவும் இருக்கிறது.
ஆறுதலை தருகிறது: சமூக அமைப்புகளில் பிரதிபலித்தல் பதற்றம் மற்றும் சங்கடத்தை குறைக்க உதவுகிறது. உரையாடல்கள் மேலும் சீராக நடைபெற உதவுகிறது.
பிரதிபலிப்பை பயன்படுத்துவதன் தீமைகள்: சில சமயங்களில் பிரதிபலிப்பு இயற்கையாக இல்லாமல் சற்று செயற்கையாகத் தோன்றும்பொழுது அது போலியானதாகக் கருதப்படலாம் அல்லது சூழ்ச்சியானதாக நினைக்கப்படலாம். இது ஒருவிதமான அசெளகரியத்தை உருவாக்கும்.
மிகைப்படுத்துதல்: யாராவது அதிகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பிரதிபலித்தால் அது கவனத்தை சிதறடித்து எரிச்சல் ஊட்டும். சில சமயங்களில் தகவல் தொடர்பு முறிவுக்குக் கூட வழிவகுக்கும்.
வெவ்வேறு கலாசாரங்களும், வேறுபாடுகளும்: வெவ்வேறு கலாசாரங்கள் உடல் மொழி மற்றும் சைகைகளை வித்தியாசமாக விளக்குகின்றன. ஒரு கலாசாரத்தில் இயற்கையான செய்கையாக இருப்பது மற்றொரு கலாசாரத்தில் புண்படுத்துவதாகக் கருதப்படும். இந்த வேறுபாடுகளை தவறாகப் புரிந்துகொள்வது எதிர்பாராத எதிர்மறை உணர்வுகளுக்குக் கூட வழிவகுக்கும்.
தவறான விளக்கத்திற்கான சாத்தியம்: ஒரு சூடான விவாதத்தைப் போலவே பிரதிபலிப்பு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் மற்ற நபர் தன்னை கேலி செய்கிறார்கள் அல்லது தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்கிற ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். இது பதற்றத்தை அதிகரிக்கும்.
எனவே, பிரதிபலிப்பு பயனுள்ள கருவியாக இருந்தாலும் அது இயற்கையுடனும் மரியாதையுடனும் சிந்தனையுடனும் பயன்படுத்தும்போது மட்டும்தான் அது ஆழமான தொடர்புகளையும் புரிதலையும் வளர்க்கும். அது மிகைப்படுத்தப்படுவது போல அல்லது நேர்மையற்ற முறையில் பயன்படுத்தும்போது அது தீமையான உணர்வுகளைத்தான் ஏற்படுத்தும்.