செல்லப்பிராணிகள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது நாய்தான். மனிதன் முதன்முதலில் பழகிய விலங்கு நாய். ஆடு, மாடு, கோழி எனப் பல செல்லப்பிராணிகள் இருந்தபோதிலும், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு மிகவும் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். அதன் மீது அலாதியான அன்பும் வைப்பதுண்டு.
உங்கள் வீட்டுச் செல்லப்பிராணியாக உள்ள நாய்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவற்றிற்கு கொடுக்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
மீன்:
மீனில் உள்ள சத்துக்கள் நாய்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. மீனில் உள்ள வைட்டமின் பி நாய்களின் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆப்பிள்:
ஆப்பிளில் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது நாய்களின் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கேரட்:
செல்லப்பிராணிகள் கேரட்டைக் கடித்து உண்பதன் மூலம், அவற்றின் பற்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது, நாய்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. கேரட்டை உணவாக கொடுக்கும்போது, அது நாய்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவற்றை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.
பீன்ஸ்:
பீன்ஸில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. இவற்றை சமைத்தோ அல்லது சமைக்காமல் பச்சையாகவோ செல்ல நாய்களுக்கு உணவாக வழங்கலாம்.
தர்பூசணி:
தர்பூசணியில் அதிகளவு நீர்சத்து, வைட்டமின் ஏ, சி, பி-6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. செல்லப்பிராணியான நாய்கள், தர்பூசணியை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, அவற்றிற்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. ஆனால், தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு, பழத்தை மட்டும் நாய்களுக்குக் கொடுப்பது சிறந்தது.
ஒயிட் ரைஸ்:
நாய்களுக்கு ஒயிட் ரைஸ் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இது வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமலும், அவற்றை சரி செய்யவும் உதவுகிறது. முக்கியமாக, நாய்களுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்குப் பிரச்னையை குணப்படுத்துவதில் ஒயிட் ரைஸ் நல்ல தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
மீல் மேக்கர் எனப்படும் சோயா சங்க்ஸ்:
உங்கள் வீட்டுச் செல்லப்பிராணியான நாய்களுக்கு, இறைச்சிக்கு மாற்றாக, மீல் மேக்கரை உணவாகக் கொடுக்கலாம். ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக விளங்கும் மீல் மேக்கரில் புரதங்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
இதுகுறித்து, கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
நாய்கள் வீட்டு விலங்காக வளர்க்கப்படுவதற்கு முன்பு, அவை காடுகளில் வசித்து, தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்ணும் மாமிச விலங்குகளாகத்தான் இருந்தன. அவ்வாறு, அவை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரெட், கால்சியம் போன்ற அவற்றிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.
ஆனால், வீட்டுவிலங்காக வளர்க்கப்படும்போது, அவற்றிற்கு காய்கறிகள், தயிர்சாதம், சாம்பார் சாதம் போன்ற சைவ உணவுகளை மட்டும் உணவாகக் கொடுப்பது தவறு. இது, நாய்களுக்கு உடல்பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, சைவ உணவுகளுடன், தேவையான அளவு மாமிசம் சேர்த்து சமச்சீர் உணவாகக் கொடுப்பது சிறந்தது என்கிறார்.
மேலும், மஞ்சள் மற்றும் வெள்ளைப்பூசணிக்காய், சுரைக்காய், சௌசௌ இவை எல்லாம் நாய்களுக்கு மிகவம் நல்லது. சாதம் கொடுப்பதற்குப் பதில், ஏதாவது மாமிசத்துடன் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொடுக்கலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு நாய்களுக்கு சிறந்த உணவாக இருக்கும்.
இதுபோன்று, சரிவிகித உணவுகளை முறையாக கொடுக்க முடியாத பட்சத்தில், கடைகளில் விற்கப்படும் பிரத்தியேக நாய் உணவுகள் (dog feed) வாங்கிக் கொடுக்கலாம். அவற்றில், எது உங்கள் நாய்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று மருத்துவரிடம் கேட்டு, உங்கள் பட்ஜெட்டுக்குச் சரியாக உள்ள நாய் உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் பிரத்யேகமான நாய் உணவுகளில், நாய்களுக்குத் தேவையான அனைத்து நியூட்ரியன்ஸ்களும் கிடைத்துவிடும்.
மனிதர்களுக்கு ஆரோக்கியமானதாக விளங்கும் உணவுகள், நாய்களின் உடல் ஆரோக்கித்திற்குக் கேடு விளைவைப்பதாக விளங்கலாம். எனவே, நாம் உண்ணும் அனைத்து வகை உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக் கூடாது. அந்த வகையில், சாக்லேட், தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, திராட்சை, மைதாவால் தயாரிக்கப்பட்ட பன், பிரட், பிஸ்கட் மற்றும் காரமான உணவுகளை எப்போதாவது கொஞ்சமாக கொடுக்கலாம். ஆனால், முடிந்தவரையில் தவிர்ப்பது நல்லது. நாய்களுக்கு பால் கொடுக்கவே கூடாது. அதேசமயம், தயிர் அவ்வப்போது கொடுக்கலாம். அதோடு, உங்கள் நாய்களுக்கு எந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும், அவற்றின் உடல்நலம் என்பன குறித்து கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது" என்று கூறினார்.