கோபப்படும்போதும், சுயநலத்தோடு வாழும்போதும் நீங்கள் நரகத்தில் வாழ்கின்றீர்கள். ஆனால், அன்பில் மூழ்கி அயலாரின் வேதனை அறிந்து, உதவிக்கரம் நீட்டி, பிறரது சேவையில் மூழ்கி இருக்கும்போது சொர்க்கத்தில் சுலபமாக நுழைந்துவிடுகிறீர்கள்.
ஆப்பிள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் ஆப்பிள் என்பது அரிதான பொருளாக இருந்தது. ‘ஒரு ஆப்பிளை ஒரு ஆள் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டால், ஒரு சட்டி ரத்தம் ஊறும்’ என்று நம் குழந்தைப் பருவத்தில் சொல்லிக்கொள்வது வழக்கம். அப்படியே நம் கையில் ஒரு ஆப்பிள் கிடைத்துவிட்டாலும், அதை வீட்டில் இருக்கும் அத்தனை நபர்களுக்கும் கிடைக்கும்படி துண்டுகள் போட்டு, ஆளுக்கு ஒன்றாக சாப்பிடுவோம். அதில் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.
ஒரு சமயம் உடல் நலம் சரியில்லாத எனது உறவுப் பெண் ஒருவரின் கணவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்காக பலர் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் பல்வேறு விதமான பழங்களை வாங்கி வந்திருந்தார்கள். அதில் ஆப்பிள் மட்டும் 40 கிலோ இருந்தது. மற்ற பழங்களை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஜூஸ் பிழிந்து தருவதற்காகப் பயன்படுத்திக்கொண்டார் என் உறவுப் பெண். அந்த 40 கிலோ ஆப்பிளையும் ஒரு பெரிய கோணிப்பையில் போட்டு கட்டி, பள்ளியில் இருந்து வந்த மகனை சீருடை மாற்றச்சொல்லி, ஒரு ஆட்டோ பிடித்து, அதில் அவனையும் அந்த ஆப்பிள் மூட்டையையும் ஏற்றி ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்தார் அந்தப் பெண். கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் பழங்களை எல்லாம் ஆசிரமத்துக்குக் கொடுக்க வேண்டும் என்ற அவரது கருணை உள்ளம் என்னை நெகிழ்வுறச் செய்தது. கூடவே அன்னை தெரசாவை பற்றி படித்திருந்த ஒரு கதையும் நினைவிற்கு வந்தது. இதோ அந்தக் கதை,
ஒரு குடும்பத்தில் அம்மாவும், எட்டுக் குழந்தைகளும் இருந்தார்கள். குழந்தைகளின் அப்பா எப்போதோ இறந்துவிட்டார். அம்மா ஒரு நோயாளி. எனவே, அவளால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. நாட்கணக்காக எல்லோரும் முழு பட்டினி. அழுவதற்குக்கூட சக்தி இல்லாமல் சோர்ந்து கிடக்கின்றன சின்னஞ்சிறு குழந்தைகள். என்ன செய்வதென்று தெரியாமல் அம்மா அளவற்ற துயரத்தில் தவித்தாள். பட்டினியால் குழந்தைகள் இறந்துவிடுவார்களோ என்றுகூட அவளுக்குப் பயமாக இருந்தது.
இந்தக் குடும்பத்தின் கஷ்ட நிலையை யாரோ அன்னை தெரசாவிடம் சொன்னார்கள். இதைக் கேட்டு மனம் வருந்திய அன்னை தெரசா உடனே கொஞ்சம் அரிசியும், அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றார். அந்த நோயாளி தாயிடம் அரிசியையும், பொருட்களையும் கொடுத்தார்.
உடனே அந்தப் பெண்மணி அன்னை தெரசா கொடுத்த பொருட்களை எல்லாம் இரண்டாகப் பங்கு பிரித்தாள். மூத்த குழந்தையிடம் ஒரு பங்கு அரிசியை எடுத்து சோறு சமைக்கச் சொல்லிவிட்டு, இன்னொரு பங்கு பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
அவள் திரும்பி வருவதற்கு சிறிது நேரம் ஆனது. அதுவரை காத்திருந்த அன்னை தெரசா அவள் வந்ததும் கேட்டார். "எங்கே சென்றிருந்தீர்கள்? நாங்கள் உங்களுக்காகக் காத்திருந்தோம்." என்றார்.
அந்த அம்மா சொன்னாள், 'பக்கத்து வீட்டிலும் வறுமைதான். அங்கும் பசியுடன் இருக்கிறார்கள். பாதி அரிசியையும், பொருட்களையும் அங்கே கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தேன்” என்றார்.
இதை சொல்லும்போது அவளது கண்கள் மின்னின. அது கடவுளின் ஒளி போன்று தெரசாவுக்கு தோன்றியது. அந்த அம்மாவின் கண்கள் மூலம் கடவுளே தன்னைப் பார்ப்பதாக அவர் உணர்ந்தார்.
தனது குடும்பமே கொடும்பட்டினியில் துடிக்கும்போதும், பக்கத்து வீட்டு வறுமையை மறக்காத அந்த அம்மாவின் உள்ளம் இருக்கிறதே, அதுதான் இந்த உலகத்திலேயே மிக உயர்ந்தது. பிறர் வேதனை கண்டு துன்புறும் அந்த அன்பிற்கு இணையாக எதுவும் இல்லை! அந்தக் கருணையை எதற்கு ஈடாக ஒப்பிட முடியும்!?
‘விண்ணப்பங்களை மறுப்பது என்பது மனித இயல்பு. முடிந்தவரை அவற்றைப் பரிசீலித்து உதவுவது மனிதப்பண்பு. பண்பு என்பது பக்குவத்தின் விளைவு. மனிதனுக்கு மனிதன் வெளிப்படுத்த வேண்டிய குணம்’ என்கிறார் லேனா தமிழ்வாணன்.
ஆண்டவன் அளித்த செல்வத்தை அன்புடன் கிள்ளிக்கொடுங்கள். எத்தனை கொடுத்தோம், யாருக்கு கொடுத்தோம் என்பதை எண்ணாதீர்கள். இருப்பதைக் கொடுத்து ஏழ்மையைத் துடையுங்கள். உங்கள் உள்ளம் கோயிலாகும்; நீங்கள் தெய்வமாவீர்கள்!