How to deal with teenagers 
வீடு / குடும்பம்

தடுமாறும் பதின் பருவப் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தின் பருவம் என்பது மகிழ்ச்சியும் துள்ளலும் நிறைந்தது. அந்தப் பருவத்தில் பிள்ளைகளுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அச்சங்கள், குழப்பங்கள், எதிர்பாலினத்தவர்களிடம் உள்ள  ஈர்ப்பை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் திணறிப்போவது போன்றவை ஏற்படும். தவறான நட்பு வட்டம், தேர்வு பயம், மொபைல் அடிக்ஷன் என ஏகப்பட்ட கவனச்சிதறல் நிறைந்த பருவம் இது. மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்கள் பொறுப்பு.

சில குழந்தைகள், ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று பெற்றோரிடம் கூறுவதும், வெறுப்பை உமிழ்வதும் இந்தப் பருவத்தில்தான் நடைபெறுகிறது. சில குழந்தைகள் நம்மை புண்படுத்துவதற்காகவே இப்படிச் சொல்வார்கள். அதனால் அவர்கள் விரும்புவதை நம்மிடமிருந்து பெற முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. மிகவும் மென்மையாக நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிய வைக்க வேண்டும். அவர்களை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

கருத்துகளுக்கு மதிப்பளிப்பது: பிள்ளைகள் ஏதாவது சொல்ல வரும்பொழுது, ‘உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாமல் இரு’ என்று அடக்காமல் சுதந்திரமாக அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் பதற்றத்தைப் போக்க நட்பான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைத் திட்டுவதோ, கேலி செய்வதோ கூடாது. அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும் வரை பொறுமை காக்க வேண்டும்.

தனியுரிமையை மதிப்பது: பிள்ளைகளுக்கு சுதந்திரத்தை வழங்குவது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. டீன் ஏஜ் மனப்பான்மை பெரும்பாலும் தனி உரிமையின் தேவையிலிருந்துதான் உருவாகிறது. அவர்களின் தனி உரிமையை நாம் மதிப்பதாக உணரும்போது அவர்கள் நம்மை மீறி செல்வதில்லை. நம் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

சுதந்திரமுடன் செயல்பட உதவுங்கள்: அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் குறை கூறுவதும், நச்சரிப்பதும், வாக்குவாதம் செய்வதையும் தவிர்த்து விட வேண்டும். அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது? என்பதை தெளிவுபடுத்துவதுடன் நிறுத்திக் கொண்டு அவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அவர்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அடக்கு முறையை கையாள்வதும் தவறு. நியாயமான வரம்புகளுக்குள் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும்.

உற்ற நண்பராய் இருப்பது: டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஆற்றல் அதிகம் இருக்கும். இளமையின் வேகம் அவர்களுக்கு அந்த ஆற்றலைத் தருகிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருவதும், நல்ல விஷயங்களில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள அவர்களின் கவனத்தை திருப்பி விடுவதும் நல்லது. உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் உடற்பயிற்சி, விளையாட்டு, தற்காப்புக் கலை, நடனம் போன்றவை அவர்களின் வேகத்தையும், கோபத்தையும் சமாளிக்க உதவும். உற்ற நண்பராய் இருந்து அவர்களுடைய எனர்ஜியை நல்ல வழியில் திசை திருப்பி விடுவது நல்லது.

கவனிப்பு அவசியம்: சிக்கலில் மாட்டிக்கொள்ளும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஏராளமான வருத்தங்களை உருவாக்கி விடுவார்கள். எனவே, கடினமான பதின் பருவத்தை கையாள அவர்களின் நடவடிக்கைகளை உற்று நோக்குவது அவசியம். ஏதேனும் பிரச்னை வருவதற்கு முன்பு அதனை சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களையும் மனம் திறந்து பேசச் சொல்லி, அவர்களுடைய எண்ணங்களை புரிந்துகொண்டு ஆக்கப்பூர்வமான வழிகளை கண்டறிய வேண்டும்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT