நம்மிடையே சிலர் 70 வயதைக் கடந்த பின்னும் குறையாத அறிவாற்றலுடனும், பூரண ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். இதற்கு அவர்களின் நெறி தவறாத வாழ்வியல் முறைதான் காரணம் எனலாம். உடலைப் பாதுகாக்க ஊட்டச் சத்துக்கள் உதவுவதுபோல் புத்திக்கூர்மை குறையாதிருக்க வாழ்வியல் முறைகள் பயன்படுகின்றன. இதற்காக பின்பற்ற வேண்டிய எட்டு வகை பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வாழ்நாள் முழுவதும் கற்றல்: புதுப்புது விஷயங்களையும் கருத்துக்களையும் அறிந்துகொள்வது, ஜிம்முக்குப் போவதால் உடல் ஆரோக்கியம் பெறுவதுபோல், மூளையும் மனதும் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவும். புத்தகம் படிப்பது, புது மொழி ஒன்றை கற்றுக்கொள்ள விழைவது போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இது ஒரு சவாலாகத் தோன்றினாலும் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
2. உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கைவிடாதிருத்தல்: நடைப்பயிற்சி போன்றவை, மூளை உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய உதவும். இதனால் மனம் தெளிவு பெறும். ஞாபக சக்தியும் புத்திக் கூர்மையும் மேன்மையடையும்.
3. ஆரோக்கியமான உணவுப் பழக்கம்: உடல் ஆரோக்கியத்திற்கு என்ன உண்கிறோமோ அதுவே நேரடியாக மூளைக்கும் செல்லும். எழுபது வயதிற்குப் பின்னும் அறிவாற்றலுடன் இருப்பதற்கு ஆரோக்கியம் தரும் உணவே காரணமாகிறது. பழ வகைகள், காய்கறிகள், முழு தானிய வகை உணவு, ஆலிவ் ஆயில், லீன் புரோட்டீன் ஆகியவை அடங்கிய மெடிட்டரேனியன் வகை உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்தும்.
4. சமுதாயத்தில் உள்ளவர்களுடன் இணைந்திருத்தல்: நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் இடைவெளியின்றி தொடர்பில் இருப்பது அறிவாற்றல் மேம்படவும் ஞாபக சக்தி குறையாமல் பாதுகாக்கவும் உதவும். பிரியமானவர்களுடன் அடிக்கடி பேசிச் சிரித்து மகிழ்வது மனதுக்கு சந்தோஷத்தையும் மூளைக்கு உற்சாகத்தையும் தரும். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஆராயாமல் ஆக்கபூர்வமான விஷயங்களைப் பேசுவது மூளையைச் சார்ந்த தசைகளை வலுப்படுத்தும்.
5. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப் பழகுதல்: அனைவருக்கும் வாழ்வில் மாற்றங்கள் உண்டாவது இயல்பு. அவற்றை ஸ்ட்ரெஸ்ஸாகவோ இடையூறாகவோ எண்ணாமல், இன்முகத்துடன் வரவேற்று, வளர்ச்சிக்கு உதவும் சந்தர்ப்பமாகக் கருதி திறமையுடன் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் மூளையும் வாழ்வின் சவால்களையும், நிலையற்ற தன்மையையும் உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படப் பழகிக்கொள்ளும்.
6. தரமான உறக்கம்: சரியான நேரத்திற்கு படுக்கச் சென்று அமைதியான தூக்கம் பெறுவது, அடுத்த நாள் ஒருங்கிணைந்த ஞாபகசக்தியுடன், செய்யும் செயலில் முழு கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் செயல் புரிய உதவும்.
7. மூளைக்கு வேலை தரும் பயிற்சியை செய்தல்: சொடாக்கு, க்யூப், பஸ்ல் (Puzzle), குறுக்கெழுத்து கட்டங்களை நிரப்புதல் போன்றவற்றை ஆர்வமுடன் செய்து வெற்றி காண்பது, சிக்கலான சவால்களை சந்தித்து சிறப்பாக செய்து முடிக்க, மூளைக்கு உற்ற பயிற்சி அளிப்பதாய் அமையும்.
8. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது: நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது நல்லுணர்வு தருவது மட்டுமல்ல, அது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமும் ஆகும். நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நன்றியுடனிருப்போம் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருப்பது சவாலான சூழ்நிலையையும் சமாளிக்க உதவும். மன தைரியமும், கூர்மையான அறிவாற்றல் பெறவும் உதவும்.
மேலே கூறிய எட்டு வாழ்வியல் முறைகளை தவறாமல் கடைபிடித்து வந்தால், வயது எண்பதை தாண்டினாலும் ஒவ்வொரு நாளும் புத்தியும் சக்தியும் குறையாத புது நாளாய் மலரும்.