புளிச்சக்கீரையை கிராமங்களில் பித்தளை, வெண்கலப் பாத்திரங்களைத் தேய்ப்பதற்கு உப்புடன் சேர்த்து பயன்படுத்துவர். இதனால் பாத்திரங்கள் பளிச்சிடும் என்பது உண்மை.
சிலர் அதை சமையலில் புளிக்குப் பதிலாகப் பயன்படுத்துவர். சிலர் துவையலாக அரைத்து சாப்பிடுவர். மற்றும் சிலர் அதற்கு வாயுத் தன்மை அதிகம் என்று கூறி அதைப் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் பலர், வீட்டில் வளரும் இக்கீரையை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவார்கள். நம் மாநிலத்தவர்கள் இதை அதிகம் விரும்பாததற்குக் காரணம் இதன் அதிகமான புளிப்புச் சுவையே.
ஆனால், இந்தக் கீரையை தெலுங்கு மக்கள், 'கோங்குரா' என்று அழைத்து தங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பச்சடி, ஊறுகாய், துவையல், கடைசல், பப்பு கூரா என்று கூறி விதவிதமாய் அனைத்திலும் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். நாம் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றாலும் தப்பாமல், தவறாமல் இதைப் பறிமாறுவார்கள்.
புளிச்சக்கீரையின் விதை, பூ, இலை, தண்டு அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டவை:
நரம்பு சம்பந்தமான நோய்கள், இரத்த அழுத்தம், வாத நோய், மலச்சிக்கல், கரப்பான், பித்த வாந்தி, குடற்புண், செரிமான கோளாறு போன்றவற்றிற்கு இக்கீரை அரிய மருந்து.
இதய நோய்க்கும், சிறுநீரகக் கோளாறுகளுக்கும் புளிச்சக்கீரை தலைசிறந்த மருந்தாகும். இதைக் கடைந்து உண்டாலும், எண்ணெயில் வதக்கி பொறியலாக சாப்பிட்டாலும் பயன் தரும்.
இதைத் துவையலாக சாப்பிடுபவர்களும் உண்டு. மற்ற துவையல்கள் அரைக்கும் பொழுதும், புளிப்புச் சுவைக்காக இதில் சில இலைகளை வைத்து அரைப்பதும் உண்டு. இதன் புளிப்புச் சுவையை மாற்றுவதற்கு கொஞ்சம் வெந்தயம், மஞ்சள் பொடி மிளகாய், பூண்டு இவற்றை எண்ணெயில் வதக்கி, சிறிது உப்பு ஆகியவை சேர்த்தால் இதன் சுவை அசத்தலாக இருக்கும்.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இதில் அரிய மருந்து இருக்கிறது. வயிற்று வலியை போக்குவதில் இக்கீரை தனித்தன்மை வாய்ந்தது. உடலுக்கு குளிர்ச்சியை உருவாக்கினாலும், செரிமானத்தை இது அதிகப்படுத்துகிறது. பித்தத்தை தணிக்கிறது. இது ஒரு சிறுநீர் பெருக்கி.
இக்கீரையில் சுண்ணச் சத்து போலவே மணிசத்தும், இரும்புச் சத்தும், கந்தகச் சத்தும், குளோரின் மற்றும் ஆக்சாலிக் அமிலமும் இருக்கின்றன. இதில் ஏ வைட்டமின் அதிகம் உண்டு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, வனப்பு உருவாகும்.
இல்லறத்தின் அடிப்படையான உயிர் சக்தியை உருவாக்குவதில் புளிச்சக்கீரைக்கு இருக்கிற சக்தி அதிகம். இரத்தத்தை சுத்திகரிப்பதற்கு பலவிதமான கீரைகள் பேசப்பட்டாலும் புளிச்சக்கீரைக்கு ஈடாக வேறொன்றை சொல்ல இயலாது. ஆகவேதான், எல்லாவற்றிற்கும் தெலுங்கு மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். புளிச்சைக் கீரையின் பெருமையை ஆந்திரா மக்கள் அறிந்து கொண்டது போல, இக்கீரை நம் வீடுகளில் வளர்ந்தாலும் அதை அவ்வளவாகப் பயன்படுத்தி அதன் பயன்களை அதிகம் பெறவில்லை என்பதே உண்மை.
மேலும், ஆந்திர மக்களிடம் இந்த புளிச்ச கீரையைப் பற்றி பேசினால் அதன் மருத்துவப் பயன்களை அடுக்கடுக்காகக் கூறிக் கொண்டே போவதைக் காணலாம். இதேபோல் மற்ற கீரைகளில் உள்ள சத்துக்களை கூறி கேட்க முடியாது. அந்த அளவுக்கு அந்த மக்களுடன் இந்தக் கீரை இரண்டற கலந்து விட்டது என்பதே உண்மை.