தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தண்ணீரின் முக்கியத்துவத்தை வெயில் காலங்களிலேயே அறிய முடியும். நீரினால் ஏற்படும் பயன்கள் எப்படி அதிகமோ, அதைப்போலவே நீரில்லையேல் உடலில் ஏற்படும் ஊபாதைகளும் அதிகம். அதனாலேயே மருத்துவர்கள் தினமும் நிறைய தண்ணீரை அருந்தச் சொல்கிறார்கள்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் கூறியது போல, ‘நீரின்றி அமையாது உடல்’ என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமென்றால், உடலுக்குத் தேவையான சத்துகள், உடலிலிருந்து அழுக்குகளை வெளியேற்றுவது, உடல் வெப்பநிலை, மூட்டுகள் மற்றும் உறுப்புகளுக்கும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது.
* தண்ணீர் மூட்டுகளுக்கு சக்தியூட்ட பயன்படுகிறது.
* தண்ணீர் எச்சில் உருவாக உதவுகிறது.
* சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு தண்ணீர் பயன்படுகிறது.
* உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை கழிவுகள் மூலமும், வியர்வை மூலமும் வெளியேற்ற தண்ணீர் பயன்படுகிறது.
* உடலில் உள்ள கலோரிகளை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகிறது. முக்கியமாக, உடல் எடை குறைப்புக்கு தண்ணீர் உதவுகிறது.
* நம் உடலில் உள்ள சத்துக்களையும் ஆக்சிஜனையும் எடுத்துச் செல்வதற்கு தண்ணீர் உதவுகிறது.
* தண்ணீர் நிறைய அருந்துவது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.
தண்ணீர் அருந்துவதால் சருமத்தில் ஏற்படும் பயன்கள்:
* தண்ணீர் அதிகம் அருந்துவதால் சருமத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் சருமம் பொலிவாகும்.
* முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து ஈரப்பதத்துடன் இருக்கும்.
* காயங்கள் சீக்கிரமாக ஆற உதவும்.
* உடலில் உள்ள பி.ஹெச்.ஐ சமமாக வைத்திருக்க தண்ணீர் உதவுகிறது.
குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம்தான் ஏற்படுத்தித் தர வேண்டும். பழசாறுகளின் மூலமும் சேர்த்து தரலாம். வயதானவர்களுக்கு அதிகமாக நீரிழப்பு வர வாய்ப்புள்ளதால் கண்டிப்பாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இவர்கள் உணவையே நீர் பதத்தில் எடுத்துக் கொள்ளலாம். நிறைய பழச்சாறுகள் அருந்தலாம்.
எனவே, தண்ணீரின் அவசியத்தை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தண்ணீரை வீணாக்குவதை தவிர்த்து, அதன் தேவையறிந்து பயன்படுத்த வேண்டும்.