இந்த உலகில் வாழும் பலருக்கும் மில்லியனராவது கனவாக இருக்கிறது. அதில் மிகச் சிலர் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். இன்னும் சிலர் தொழிலதிபராகி தங்கள் கனவை அடைய முயற்சி செய்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. பணக்கார தொழிலதிபர்கள் எப்படித் தங்கள் பணத்தை பெருக்குகிறார்கள் என்கிற சூட்சுமத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. பணக்கார தொழிலதிபர்கள் செய்யும் மிக முக்கியமான காரியம், தங்கள் பணம் எங்கிருந்து வருகிறது, அது எங்கே செல்கிறது என்பதைப் பற்றிய தெளிவு கொண்டிருப்பதுதான். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தைப் பற்றிய தெளிவான ரெக்கார்டுகள் அவர்களிடம் இருக்கும். தாங்கள் செய்யும் செலவுகளைப் பற்றியும், அடைந்த வரவுகளைப் பற்றியும் மிகவும் துல்லியமான கணக்குகளை அவர்கள் வைத்திருப்பார்கள்.
2. அவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தங்கள் பணத்தை செலவிடுவது இல்லை. தங்கள் தொழிலில் முதலீடு செய்கிறார்கள் அதன் முன்னேற்றத்தில் கவனம் கொள்கிறார்கள். சேமித்து வைக்கிறார்கள். மிக அதிக விலை உயர்ந்த கார்களோ, வீடுகளோ, ஆடம்பர பொருட்களோ வாங்குவதில்லை. தங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்க அவர்கள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக நீண்ட கால பொருளாதார நிலைப்பு தன்மையில் கவனம் செலுத்துகிறார்கள்.
3. ஒரு மில்லினர் ஒரே வழியில் மட்டும் பணம் வருவதை விரும்ப மாட்டார். அதற்கு பதிலாக பல வழிகளில் முதலீடு செய்து அவற்றின் வழியாக பணம் வருவதை அனுபவிப்பார். பல தொழில்கள் பல வகையான முதலீடுகள் போன்றவற்றில் உறுதியாக இருப்பார்.
4. இந்த உலகின் பெரிதாக வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் ஒரு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். தங்களுடைய பிரத்தியேக மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றம்தான் அது. தொழில் வளர்ச்சி என்பது நீண்டகால செயல்பாடு. அதில் பணத்தை போட்டால் மட்டும் போதாது. தன்னுடைய முழு நேரம், ஆற்றல் எல்லாவற்றையும் அதில் செலவழிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் இன்னும் தங்கள் தொழிலை திறமையாகக் கொண்டு செல்வதற்கு உரிய பயிற்சிகள் பாடங்களைத் தேடிச் சென்று கற்றுக் கொள்வார்கள். அதனால்தான் அவர்களால் புதிய உச்சங்களைத் தொட முடிகிறது.
5. அவர்கள் தங்கள் தொழிலில் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. ரிஸ்க் எடுத்தால் அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஒரு புதிய தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு தேவையான ஆய்வு செய்து, தேர்ந்த நிபுணர்கள், அனுபவசாலிகளின் அறிவுரைகளைக் கேட்டு அறிந்து, மேலும் தற்போதைய ட்ரெண்ட் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்த பின்பே அவர்கள் ரிஸ்க் எடுக்க தயாராகிறார்கள். அதனால் வெற்றியும் அவர்கள் அடைகிறார்கள்.