கொளுத்தும் கோடை வெயில் தொடங்கும் வேளையில், நமது உட்புற சுற்றுச்சூழலை பராமரிக்க AC-ன் தேவை அவசியமாகிறது. இருப்பினும் வீட்டுக்கு சரியான ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். எனவே இப்பதிவின் வாயிலாக, வீட்டிற்கு ஏற்ற சரியான ஏசியைத் தேர்வு செய்ய, பின்பற்ற வேண்டிய உதவிக் குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
உங்களுடைய தேவையை அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ஏசி வாங்குவதற்கு முன், உங்களுடைய தேவையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வீடு இருக்கும் இடம், அறையின் அளவு மற்றும் அறையில் எந்த அளவுக்கு காற்று வெளிய போகாமல் இருக்கும் போன்ற காரணிகளை கவனியுங்கள். இது உங்களுக்கு ஏற்ற சரியான ஏசியைத் தேர்வு செய்ய உதவும்.
ஆற்றல் திறன்: மின்சார செலவு குறைக்கவும், கார்பன் தடத்தைக் குறைக்கவும் ஏசியின் ஆற்றலைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிக ஆற்றல் திறன் விகிதம் (EER) அல்லது அதிக இந்திய பருவகால ஆற்றல் திறன் விகிதம் (ISEER) கொண்ட ஏர் கண்டிஷனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணத்திற்கு 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசிகள் மின்சாரத்தை குறைவாகவே பயன்படுத்துகின்றன.
சரியான ஏசியை தேர்வு செய்யவும்: உங்கள் அறையின் தேவைக்கு ஏற்ப விண்டோ ஏசி, ஸ்பிலிட் ஏசி மற்றும் சென்ட்ரலைஸ்டு ஏசி போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். சிறிய அறைகளுக்கு விண்டோ ஏசியையும், மீடியம் அளவு கொண்ட அறைக்கு ஸ்பிலிட் ஏசியையும், பெரிய இடம் என்றால் சென்ட்ரலைஸ்டு ஏசியைப் பயன்படுத்துவது நல்லது.
இரைச்சல்: அதிக சத்தம் எழுப்பும் ஏர் கண்டிஷனர்கள் உங்கள் வீட்டின் அமைதியை சீர்குலைக்கும். குறிப்பாக படுக்கையறைக்கு ஏசியை நிறுவ திட்டமிட்டால், குறைந்த இரைச்சல் அளவு கொண்ட மாடல்களைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் வாங்கும் ஏசியிலேயே அது எத்தனை dB சத்தத்தை எழுப்பும் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றைப் பார்த்து வாங்குவது நல்லது.
கூடுதல் அம்சங்களை கவனியுங்கள்: இப்போது வரும் நவீன ஏர் கண்டிஷனர்களில் பல புதிய அம்சங்கள் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக வீட்டின் வெப்பநிலையை அறிந்து தானாக இயங்கும் AI மாடல்கள் வருகின்றன. மேலும் ஸ்லீப் மோட், டைமர்கள், ஸ்மார்ட் ஹோம், வைபை இணைப்பு போன்ற பல அம்சங்கள் இப்போது வரும் ஏசி மாடல்களில் உள்ளன. உங்களது தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப அதிக அம்சம் கொண்ட ஏசியைத் தேர்ந்தெடுங்கள்.
சேவை: ஏசி விஷயத்தில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு என்னவென்றால், விலை குறைவாக இருக்கிறது என ஏதோ ஒரு பிராண்ட் ஏசியை வாங்கி மாட்டிவிடுவார்கள். ஆனால் எப்போதாவது அதில் கோளாறு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு விற்பனைக்குப் பிந்தைய சேவை மோசமாக இருக்கும். இதனால் வெளியே யாரிடமாவது சரி செய்யும்போது செலவுகள் அதிகரிக்கலாம். எனவே விற்பனைக்குப் பிந்திய சேவை மதிப்பீட்டில் சிறப்பாக விளங்கும் பிராண்டில் ஏசி வாங்குவது நல்லது.
நீங்கள் ஏசி வாங்கப் போகிறீர்கள் என்றால், யாரோ ஒருவர் உங்களுக்கு பரிந்துரைக்கிறார் என்பதற்காக எந்த குறிப்பிட்ட பிராண்டையும் வாங்க வேண்டாம். இப்போது இருக்கும் இன்டர்நெட் யுகத்தில், நீங்களாகவே எல்லா தகவல்களையும் தேடிப் பார்த்து உங்களுக்கான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே உங்களது தேவை மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில், நல்ல பிராண்ட் ஏசியாக வாங்கிப் பயன்படுத்தும்போது அது எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.