Why hide love for children? https://www.tamil.adaderana.lk/news.
வீடு / குடும்பம்

அன்பை திரை போட்டு மறைப்பது ஏனோ?

எஸ்.விஜயலட்சுமி

ந்தக் காலத்துப் பிள்ளைகள் அதாவது Gen z (2000க்குப் பிறகு பிறந்தவர்கள்) & Alpha (2012க்குப் பிறகு பிறந்தவர்கள்) பிள்ளைகளை சமாளிப்பது சற்றே கடினமான காரியம்தான். பல வீடுகளில் ஒற்றைக் குழந்தை மட்டும்தான் இருக்கிறது. பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதீதமாக செல்லம் கொடுக்கிறார்கள். சிலர் கண்டிப்புடன் வளர்க்கிறார்கள்.

‘நான் உன் அம்மா சொல்றேன். கேக்க மாட்டியா? அப்பாவையே எதிர்த்து பேசுற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டியா? உன் நல்லதுக்குதான் சொல்றேன். ஏன் எதுக்குன்னு எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இருக்க?' என்று பல வீடுகளில் குழந்தைகளை தாய், தந்தையர் மிரட்டுவது சகஜம்.

பெற்றோர் தம் குழந்தைகள் ஒழுங்காக, நல்ல பண்புகளுடன் வளர வேண்டும், நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று நினைப்பதும், பிள்ளைகள் மீது தாம் வைத்திருக்கும் அளவற்ற அன்பால்தான் பிள்ளைகளை கண்டிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், சொல்லும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. அதிகாரமாக சொல்லும்போது சில பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்கவே கூடாது என்று முடிவெடுத்து விடுகிறார்கள். ‘அப்பா, அம்மா சொன்னா கேட்டே ஆகணும்’ என்று சொல்வதை விட, ‘உன் மேல இருக்கிற ஆழமான பிரியத்தினாலும் அன்பாலும் மட்டும்தான் நான் உனக்கு இதை சொல்றேன்’ என்ற கருத்தை பிள்ளைகள் மனத்தில் ஆழமாகப் பதித்து விட்டால் அவர்கள் புரிந்துகொண்டு, தவறு செய்ய யோசிப்பார்கள் அல்லவா?

காரணத்தைச் சொல்லாமல் வெறும் கண்டிப்பு காட்டி பயனில்லை. உள்ளிருக்கும் அன்பை ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என்று புரியவில்லை. அலுவலகத்தில் உயர் அதிகாரி தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, ‘நான் உன் மேல் அதிகாரி. அதனால் நான் சொல்வதை கேட்கத்தான் வேண்டும்’ என்று அதிகாரமாகச் சொல்வது போலத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தங்களது அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இது நிறைய குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. அந்த அதட்டலுக்குப் பின்னால் இருக்கின்ற அன்பை அவர்களால் உணர முடிவதில்லை.

நிறைய தற்காலக் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டாம் என்று சொன்னால், செய்து பார்த்தால் என்ன என்று ஒரு ஆர்வமும் குறுகுறுப்பும் எழும். எனவே, வேண்டாம் என்று சொன்னாலும் அந்தக் காரியத்தை செய்ய முனைவார்கள். அதனால் சொல்ல நினைப்பதை சரியான வார்த்தைகளில் கனிவாக பெற்றோர்கள் சொல்ல வேண்டும். அன்பை திரை போட்டு மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.  பிள்ளைகளுக்காக எத்தனையோ செலவு செய்து தேவைக்கு மேலே வாங்கிக் கொடுத்து பாடுபட்டுதான் வளர்க்கிறார்கள்.

பணம் செலவழிப்பது போல, அன்பையும் கணக்கில்லாமல் காட்ட வேண்டும். தேவையான கண்டிப்பையும், ‘சுகர் கோட்டட் பில்ஸ்’ என்று சொல்வார்களே, அது போல இதமாக, பதமாக சொன்னால் நிச்சயம் பிள்ளைகள் கேட்பார்கள். தாங்கள் தவறு செய்தால் தங்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் பெற்றோரின் பிரியத்தை இழக்க நேரிடுமோ என்ற பயமே அவர்களை தவறு செய்ய விடாமல் தடுக்கும்.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT