பயிருக்கு முள் வேலியிட்டு பாதுகாப்பது போல, நம்முடைய பணத்திற்கு நாம் செய்த தர்மமே வேலியாக இருக்கும்.
கோபம் வரும் நேரத்தில் கண்ணாடியைப் பாருங்கள். உங்களுக்கே உங்களைப் பார்க்க வெட்கமாக இருக்கும். சாந்தமாகி விடுவீர்கள்.
அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ அவருக்கு மனக்கவலை சிறிதும் இருப்பதில்லை.
டாம்பீகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆயிரமாயிரம் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.
நல்ல நூல்களை நாள்தோறும் வாசிக்கும் பயிற்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கோணலான மனமும் நேராக்குவதற்கு இப்பயிற்சி உதவும்.
தெய்வீக நெறியில் முன்னேற விரும்பினால், ஒழுக்கம் என்னும் கட்டுபாடு மிகவும் அவசியம்.
நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். வாழ்வில் முன்னேறுவதற்கு இதுதான் சிறந்த வழி.வெறும் ஏட்டுக் கல்வியால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் வரும் அறிவே மேலானது.
உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் வாழக் கூடாது. மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெறுவதற்காகவே நாம் பிறவி எடுத்திருக்கிறோம்.
அகிம்சையில் பெரியவர் ராஜேந்திர பிரசாத், அரசியல் அறிவில் பெரியவர் ஜவஹர்லால் நேரு, கல்வியில் பெரியவர் மாளவியா, சமய அறிவில் பெரியவர் ஆசாத், நெஞ்சுரத்தில் பெரியவர் வல்லபாய் படேல், ஆங்கில அறிவில் பெரியவர் சத்தியமூர்த்தி, செல்வத்தில் பெரியவர் பிர்லா, சத்தியத்தில் பெரியவர் மகாத்மா காந்தி. சத்தியத்தில் பெரியவரான காந்தியடிகளுக்கு மற்ற எல்லாவற்றிலும் பெரியவர்கள் சீடர்களாக ஆனார்கள். எல்லோரும் சத்தியத்தை கடைபிடிக்கட்டும்.
மனப்பக்குவம் எப்போது கிடைக்கும்?
நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்தே இருக்கும். அதை நாம் விலக்கிக் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும். இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல் பட வேண்டி வரும். இளமைப் பருவம் உழைப்பதற்கு ஏற்றது, அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுவதுதான் வாழ்க்கைக்கு நல்லது.
வாழ்க்கை செர்க்கமாக இனிக்க கிருபானந்த வாரியார் கூறுகிறார்.
"கிளி போல இனிமையாக பேசு, கொக்கு போல ஒரே எண்ணத்துடன் இறைவனை நினை, ஆடு போல நன்றாக மென்று சாப்பிடு, யானை போல குளி, நாயைப் போல நன்றியுடன் செயல்படு, காகம் போல குறிப்பு அறிந்து இயங்கு , தேனீக்களை போல உழைத்திடு இவ்வாறு செய்தால் வாழ்க்கை செர்க்கமாக இனிக்கும். "
வளைந்த கொடுப்பதே அழகு!
"வாழ்வில் உயர விரும்புவோருக்கு வளைந்து கொடுக்க தெரிய வேண்டும். அவ்வாறு வளைவதால் உயர்வும், மதிப்பும், அழகும் கூடும். புருவம் நேராக இருந்தால் அழகாக இருக்காது. வில்லைப் போன்று வளைந்த உள்ள புருவம் தான் அழகாக இருக்கும். வளைந்த யாழில்தான் விதவிதமான மதுர கானங்கள் எழுந்து, காதுகளில் புகுந்து உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.
தலைமுடி கூட நேராக இருந்தால் அழகாக இருக்காது. அது, வளைந்து, வளைந்து கடல் அலைபோல் இருந்தால்தான் அழகு. இதேபோல் நதி வளைந்து நெளிந்து ஓடுகின்ற போது எவ்வளவு அழகாக இருக்கிறது? பூத்து வளைந்த செடி கொடிகளை கண்டு மகிழாதவர்கள் தான் யார்? நேராக தெங்கவிடும் பூமாலை அழகாக இருக்காது. வளைந்த பூமாலைதான் மிகுந்த அழகு தரும்."