நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. உங்களுக்கென்று ஒரு சுய கெளரவம் உள்ளது. அதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். எப்போதும் நியாயத்தின் பக்கமே இருங்கள். எது நல்லது என்று தோன்றுகிறதோ அதற்கே ஆதரவு கொடுங்கள், தயங்காதீர்கள்.
உங்களுக்கென்று ஒரு குறிக்கோள் வேண்டும், அது நீண்ட நாள் இலக்கோ அல்லது அவ்வப்போது மாறும் குறிக்கோளோ, இலக்கோ. தினசரி திட்டமிடுதல் வேண்டும். அதை நீங்கள் மதித்து அந்தந்த நேரத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்ய பழகுங்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்தன்மையான வர்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு பிரச்சினை, தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும் அதனால் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்த பயனும் இல்லை.
தினசரி யாருக்காவது, ஏதாவது ஒரு நன்மை செய்து மகிழுங்கள். இதை ஒரு தினசரி குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். எதையும் திறம்பட செய்யமுடியும் என்ற உங்களது தன்னம்பிக்கையே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.
எதிர்பார்த்த நல்லது எதுவும் உடனே நடந்து விடாது. அதற்கு பொறுமையும், கடின உழைப்பு மற்றும் முயற்சியும் தேவை என்பதை உணருங்கள்.எதற்காகவும் விரக்தி அடையாதீர்கள், பதட்டப்படாதீர்கள். எதிலும் முடங்கி விடாதீர்கள், எதையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
நாளை என்பது இன்னொரு நாள் என்பதை உணருங்கள். அதனால் இன்றைய பொழுதில் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் திறமைசாலிகளை பலரும் விரும்புவார்கள்.
எதற்காகவும் அடுத்தவர்களை காயப்படுத்தாதீர்கள். உங்கள் குற்றங்களை நீங்கள் ஒரு போதும் மன்னிக்காதீர்கள். எப்போதும் நீங்கள் தான் வெல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். அடுத்தவர்களும் வெல்வார்கள் என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்படுங்கள்.
பிறருடைய திறமைகளை கண்டு பொறமைப்படாதீர்கள், உங்கள் வாழ்வை திருப்தியாக வாழுங்கள் அதுவே உங்கள் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தும். எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் அதை பெரிதுபடுத்தாதீர்கள், பெருந்தன்மை மற்றும் பாராட்டி பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்கும்.
சட்டென்று எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள், எதற்கும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு யோசியுங்கள். உங்கள் மனது மாறிவிட்டால் அதற்காக வருத்தப்படாதீர்கள். அனைத்திற்கும் நீங்களே காரணம் என்றும், எல்லோரும் உங்களையே குற்றம்சாட்டுகிறார் என்றோ ஒரு போதும் நினைக்காதீர்கள்.
அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் அதனால் உங்கள் முகத்தின் அழகு கூடும். எதையும் கண்மூடித்தனமாக வெறுக்காதீர்கள், ஒதுக்காதீர்கள் பெரியோர்களின் பேச்சை மதியுங்கள்.தவறு செய்தவர்களை மன்னிக்க பழகுங்கள் அதற்காக தொடர்ந்து தவறு செய்ய அனுமதிக்காதீர்கள்.
எது நடந்தாலும் சரி வருத்தப்படாதீர்கள், எதையும் சமாளிக்க எப்போதும் தயாராக இருங்கள், அடுத்தவர் விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள், எப்போதும் உங்களை நம்புங்கள், மற்றவர்களை சிரித்த முகத்துடன் அனுகுங்கள். உங்களின் சிரித்த முகம் உங்கள் பக்கம் மற்றவர்களை திருப்பும் அது உங்கள் மன அழகையும், உடல் அழகையும் அதிகரிக்கும்.
நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே அடுத்தவர்களையும் நடத்துங்கள். மற்றவர்களுடன் பேசும் போதும் சரி, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போதும் சரி கண்ணோடு கண் நோக்கி பேசுங்கள்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியம் அதுவே உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். முடிந்த மட்டும் மற்றவர்களை விட அழகாக இருக்க முயலுங்கள். அது உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் சரி, உங்கள் செயலில் இருந்தாலும் சரி. உங்களை நீங்களே விரும்புங்கள். உங்களை நீங்களே விரும்பினால் தான் எதுவும் நடக்கும்.