மனிதன் வாழ்க்கையில் முன்னேற உழைப்பு தேவை. உழைப்பின்றி உயர்வில்லை. உழைப்பே உயர்வு.
காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது காலத்தை வீணாக்காமல் நம் கடமையைச் செய்தால் முன்னேற்றமே.
கடினமாய் உழைப்பவன் காலத்தை வீணாக்குவதில்லை. எறும்பைப்போல் சுறுசுறுப்பாய் உழைத்து உயர்வு பெறுவான் சோம்பேறியின் வாழ்க்கை விரைவில் வற்றிப்போகும்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணாய் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்றார் பாரதி.
"உழைக்காதவன் உடம்பு மூலையில் ஒதுக்கிப் போட்ட துருப்பிடித்த இரும்புக்குச் சமம்" என்றார் கவிமணி அவர்கள்.
எனவே உழைக்காத சோம்பேறியினால், தன் வாழ்வும் கெட்டு நாட்டின் முன்னேற்றமும் தடைப்படுகிறது.
உழைக்காமல் உயர்ந்த வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. இது தொடர்ந்த முன்னேற்றத்திற்குத் தடை.
உழைப்பு என்பது பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமல்ல, மகிழ்ச்சி-இன்பம்-ஆரோக்கியம் தரும் ஆதாரம். தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியும் பெறலாம்.
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தாலும், எஞ்சிய பொழுதில் தொழில் பயிற்சியின் மூலமாக இன்னும் அதிகபட்சமாக உங்களால் சம்பாதிக்க முடியும். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் தான் பெற்ற கல்வி, அந்தஸ்து இவையெல்லாம் பாராமல் உழைத்து முன்னேறுகின்றனர்.
குழந்தைகள் படிக்கும்பொழுதே பெற்றோர்கள் உழைக்கும் மனப்பான்மையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். கடின உழைப்பிருந்தாலே தன்னிறைவான வாழ்க்கை வாழமுடியும்.
கடின உழைப்பால் உலகப்புகழ் பெற்றவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றிபோர்டு, ஆபிரகாம்லிங்கன், காந்தியடிகள், பண்டித நேரு போன்றோர் உழைப்பால் உயர்ந்த உலகப் பெருந்தலைவர்களே.
மேலும் இன்றைக்கு நம் கண் முன்னால் தலைநிமிர்ந்து நிற்கும் நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் படிக்கும் காலத்தில் படிப்பில் அதிக கவனம் செலுத்தியும், தாம் ஏற்ற பணியில் கண்ணும் கருத்துமாய் கடினமாய் உழைத்ததன் பயனால்தான் அவர் நம் பாரத திருநாட்டின் குடியரசுத் தலைவராய் உயர்த்தப்பட்டார்.
தம் படிப்புச் செலவிற்காக ஓட்டலில் பாத்திரம் கழுவிய நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் சுதந்திரன் என்பவர் இன்று கனடா நாட்டில் இட்சால்ட் என்ற நகரை விலைக்கு வாங்கி சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளமையைக் காணும்பொழுது அவருடைய கடின உழைப்பே நம் கண்முன் காட்சியளிக்கிறது. கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை.
அன்பானவர்களே காலமெல்லாம் செழிப்பீர். கடினமாய் உழைப்பீர்.