ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் எப்போதும் அவர் சோகம், வருத்தம், சலிப்பு, வெறுப்பு நிறைந்து காணப்படுவது மற்றும் எதன் மீதும் பற்றின்றி அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இருப்பது மனச்சோர்வு இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது.
சூரிய ஒளியை பெறுவது ஏன் உங்களை நன்றாக உணர வைக்கிறது என்பதற்கான அறிவியல் விளக்கம் ஒன்று உள்ளது. சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். மேலும், நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க இது உதவுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உலக மக்களிடையே மனச்சோர்வு (Depression - மனத்தளர்ச்சி) அதிகரித்து காணப்படுகிறது. மனச்சோர்வு என்பது ஒரு வகை மனநிலை கோளாறாக வரையறுக்கப்படுகிறது. உலகளவில் சுமார் 264 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அனுபவிக்கும் மிகவும் பொதுவான மனநலக் கோளாறு மனத்தளர்ச்சி ஆகும்.
இந்தக் கோளாறை அனுபவிக்கும் ஒரு நபர் சோக உணர்வுகளில் சிக்கி தவிக்கலாம் அல்லது ஒருவர் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருந்த விஷயங்களில் அதற்கு நேர்மாறாக ஆர்வமிழந்து காணப்படலாம். அல்லது ஒரே சமயத்தில் மேற்கண்ட இரு அறிகுறிகளையுமே அனுபவிக்கலாம்.
மனச்சோர்வு பெரும்பாலும் சோகம் அல்லது வருத்தத்தின் உணர்வுகளுடன் தொடர்புடையது என்று நாம் குழப்பமடைய கூடும். ஆனால், இரண்டும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். பொதுவாக வாழ்க்கையில் திடீரென அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகள். உதாரணமாக பெரிதும் நேசிப்பவர்களின் மரணம், உறவில் இருந்து பிரிந்து செல்வது, வேலையை இழப்பது, இயற்கை பேரழிவில் இருந்து தப்பிப்பது போன்றவை சோக உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்றாலும் இந்த சம்பவங்களால் ஏற்படும் வருத்தம் குறுகிய காலமாக இருக்கும்.
சோகத்திற்கும் மனச்சோர்விற்கும் உள்ள வேறுபாடு: சோகம் அல்லது வருத்தம் என்பது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தின் விளைவால் ஏற்படுவது. இது ஒரு நபர் அனுபவிக்கும் ஒரே உணர்வு அல்ல. ஒரு நபர் சோகமாக இருப்பதை தவிர சில மகிழ்ச்சியான நினைவுகள் அல்லது மகிழ்ச்சியான உணர்வுகளை எப்போதாவது சந்திக்க நேரிடும். ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்படும் நபர் பெரும்பாலும் எப்போதுமே சோகமாகவே இருப்பார். ஒருவர் அனுபவிக்கும் சோகம் மற்றும் ஆர்வமிழப்பு போன்ற உணர்வுகளை மனச்சோர்வு என வகைப்படுத்த குறைந்தது 2 வாரங்கள் தேவைப்படுகிறது.
ஒரு நபர் சோகத்தில் இருக்கும்போது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள அல்லது தற்கொலை செய்து கொள்ள பெரும்பாலும் நினைப்பதில்லை. அதுவே மனச்சோர்வில் சிக்கி தவிக்கும் நபர் நீண்டகால சோகத்தை சமாளிக்க இயலாமை அல்லது பயனற்ற உணர்வுகள் காரணமாக தற்கொலை செய்து கொள்ள விரும்பலாம். தான் வாழ தகுதி இல்லாத நபர் என்ற எண்ணம் தோன்றுவதால் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவினை நோக்கி செல்வார்கள் மனச்சோர்வு கொண்ட நபர்கள். அதிர்ச்சிகரமான சம்பவத்தால் சோகமாக இருக்கும் ஒருவர் தங்களை பயனற்றவர்களாக உணர மாட்டார்கள். ஆனால், ஒரு நபர் மனச்சோர்வடைந்தால் அவரது சுயமரியாதை மற்றும் சுய மதிப்பு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. சுய வெறுப்பும் மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
மனச்சோர்வின் அறிகுறிகள்: எப்போதும் சோகம், வருத்தம், சலிப்பு, வெறுப்பு நிறைந்து காணப்படுவது மற்றும் எதன் மீதும் பற்றின்றி அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இருப்பது மனச்சோர்வு இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. மனச்சோர்வில் இருக்கும் ஒருவர் பலவிதமான உடல் மற்றும் மன அறிகுறிகள் மற்றும் சோக உணர்வை தவிர பல எதிர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கக் கூடும். ஒருவர் 2 வாரங்களுக்கும் மேலாக கீழ்காணும் அறிகுறிகளை அனுபவித்தால் அவர் மனச்சோர்வில் இருக்கிறார் என்று அர்த்தம்.
சோகம் அல்லது மன அழுத்த உணர்வு, எரிச்சல், கவலை, அமைதியற்ற அல்லது ஆவேச மனநிலை பிடித்து செய்து வந்த நடவடிக்கைகளில் திடீரென ஆர்வம் இழப்பது, பசியின்மை அல்லது மன அழுத்தம், கோபம், சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அடக்க சாப்பிடுவது, திடீர் எடையிழப்பு அல்லது எடை கூடுவது, பாலியல் ஆசை அல்லது குறைந்த செயல்திறன் நிறைய தூக்கம் அல்லது மிக குறைவான தூக்கம் போன்ற தூக்க முறை மாற்றங்கள், கவனம் செலுத்துவது அல்லது முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் சிக்கல் பயனற்று வாழ்வதாக நினைப்பது, சுய வெறுப்பு, நம்பிக்கையற்ற தன்மை மற்றும் குற்ற உணர்வு, அதீத களைப்பு சுய தீங்கு அல்லது தற்கொலை எண்ணங்கள்.
மனச்சோர்வின் அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால் இந்த அறிகுறிகள் மேலும் மோசமாகி, சோகத்தை தீவிரப்படுத்தக் கூடும். ஒருவரின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மனச்சோர்வுக்கான பொதுவான காரணங்கள்:
மரபணு: ஒருவரது குடும்பத்தில் முன்னோர்கள் மனச்சோர்வு கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் இருந்தால், அவர்களுக்கு மனச்சோர்வு அபாயம் இருக்கும்.
அதிர்ச்சிகர நிகழ்வுகள்: குழந்தைப் பருவத்தில் நிகழும் முக்கிய அதிர்ச்சிகர நிகழ்வுகள் மனச்சோர்வைத் தூண்டும்.
மூளை அமைப்பு: ஒரு நபரின் மூளையின் முன் பகுதியில் குறைந்த செயல்பாடு இருந்தால் அது அவரை மனசோர்விற்கான ஆபத்தில் ஆழ்த்தும்.
மருத்துவ நிலைமைகள்: ஒரு நபர் நாள்பட்ட நோய்கள், பிற மனநல கோளாறுகள் அல்லது மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்படும் காரணத்தால் கூட மனச்சோர்வுக்கு உள்ளாகலாம். மூளையின் வேதியியல் செயல்பாடு, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், சமூக - பொருளாதார, உளவியல், சுற்றுச்சூழல் காரணிகளும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கின்றன.
மேற்சொன்னதைத் தவிர, மனச்சோர்வு இன்னும் பலவிதமான அறிகுறிகளை கொண்டுள்ளது மற்றும் பல்வேறு காரணிகளால் ஏற்படக் கூடும். மனச்சோர்வு என்பது சிகிச்சை பெற்றால் சரியாகக்கூடிய கோளாறுதான். ஆனால், எளிதில் குணப்படுத்த துவக்க நிலையிலேயே இதனைக் கண்டறிந்துவிட்டால் சிறப்பாக இருக்கும். நாட்பட்ட மன அழுத்தம் கூட இறுதியாக மனத்தளர்ச்சி எனும் ஆபத்தான கட்டத்திற்கு அழைத்து சென்று விடும்.
மனச்சோர்வு நீங்காமல் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மனசோர்வு என்பது உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் மனச்சோர்வில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவரை அணுகுவதுதான் ஒரே தீர்வு.