நமக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் நம்முடைய முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கிறது என்னும் கூற்று, என்னை அதிகமாக வியக்க வைக்கிறது.
சமீபத்தில் ETERNALS என்ற ஓர் ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். சொல்லும் அளவுக்கு திரைப்படம் நன்றாக இல்லை என்றாலும், அதில் ஒரு விஷயத்துக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. Eternals என்பவர்கள் அதி பயங்கர சக்தி கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பல உலகங்களை Deviants எனப்படும் ஜந்துவினால் ஏற்படும் அழிவிலிருந்து காப்பது அவர்களுடைய வேலை என்று படத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிடுவார்கள்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், உலகை பாதுகாப்பது இவர்களுடைய கடமை என்றால், தானோஸ் இவ்வுலகை அழிக்க முற்படும்போது இவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தான். அவெஞ்சர்களோடு இணைந்து, தானோஸை அழித்திருக்கலாம் அல்லவா?
என் மனதில் இருந்த இதே கேள்வியை அத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் Eternal-களிடம் கேட்கும். அதற்கு அவர்கள் கொடுக்கும் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
"எங்களுடைய வேலை Deviants எனப்படும் ஜந்துவை அழிப்பது மட்டுமே. உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு கண்டால், நீங்கள் எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டீர்கள். இந்த அளவுக்கு வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது" என்று கூறுவார்கள்.
இந்த ஒரு கருத்து உண்மையிலேயே என்னை சிந்திக்க வைத்தது. பெரும்பாலும் நம்முடைய பிரச்சினைகளுக்கு வேறு யாரேனும் வந்து தீர்வு கொடுக்க மாட்டார்களா என்று நினைத்துக்கொண்டே நம்முடைய காலத்தை பலர் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
என் வாழ்வில் இது நடந்தால் நன்றாக இருக்கும். அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று, நம் வாழ்வில் நடக்காத விஷயங்களை கற்பனையில் நினைத்துக் கொண்டு புலம்பித் தள்ளுகிறோம். உண்மையில் இதுபோன்ற சிந்தனைகள் எதுவுமே நமக்கு பலனளிக்கப்போவது கிடையாது.
எதுவாக இருந்தாலும் நாமே முயல வேண்டும்.
கற்க வேண்டும்.
பயிற்சி செய்ய வேண்டும்.
முடிந்தவரை அந்த பிரச்சனைக்கான தீர்வை நாமே கண்டறிந்து செயல்படுத்தினால், அதன் மூலம் பல அனுபவங்களையும், தைரியத்தையும் நாம் பெறமுடியும் என நம்புங்கள்.
இங்கே உங்களைக் காப்பாற்ற எந்த தேவதூதனும் மேலிருந்து வரமாட்டான். நீங்களே உங்களை தேவதூதனாக மாற்றும் முயற்சிகளில் இறங்குங்கள்…