எல்லா காலங்களிலும் பெண்கள் மீதான விமர்சனங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இணைய வெளியை ஆக்கபூர்வமாக உபயோகிப்பவரை விட எதிர்மறை கருத்துக்கள்,சிந்தனைகள் என நம்மை திசை திருப்பும், குறை சொல்லும் போக்கு கொண்டோர் தான் அதிகமாக உள்ளனர். நம்மை பற்றி தெரியாதவர்கள் சொல்வதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவது வேண்டாத விஷயம்.
அதற்கெல்லாம் விவாதம் செய்து நம் சக்தியை வீணடிப்பதற்கு பதில் நம் வேலையை பார்க்க போய்விட வேண்டும். விவேகமான ஒரு சொல் அல்லது ஒரு செயலால் தகுந்த பதிலடி கொடுத்து விட்டு நகர்வது புத்திசாலிதனம்.
நம் குறிக்கோளில் உறுதியாக இருந்தால் இயற்கை நமக்கு பல உயர்வான வாழ்க்கையை வாய்ப்பை அளிக்கும். அதை தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்வதில் தான் நம் திறமையை உபயோகித்துக் கொள்ள வேண்டும். புத்திசாலித்தனம் பிறரிடமிருந்து வராது. நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் சுற்றுப்புறத்தை, சமூகத்தை படிக்க கற்றுக் கொண்டாலே நம் பலம் நமக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கித் தரும். நம் சக்தி என்பது நாம் தனியாக செயல்படுவதில் மட்டுமில்லை. செய்யப் போகும் வேலை பற்றி தெரிந்தவர்களிடம் உதவியோ, தொடர்போ கேட்டு பெறுவதில்தான் உள்ளது.
எடுத்துக் கொண்ட பணியே, படிப்போ அதைப் பற்றிய புரிதலை பெற முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் உதவியை, அனுபவத்தை பெறுவதில் தயக்கம் தேவையில்லை. நம் பலவீனத்தையும் பலமாக்கிக் கொள்ள பயிற்சி பெற வேண்டும்.
ஈகோவை விட்டு விட்டு நமக்கு தேவையானதை யாரிடம் கிடைக்குமோ அவர்களிடம் கேட்பதில் தப்பில்லை. தனியாக ஜெயிப்பது வெற்றி என்றாலும் பழகும் வரை எதிலும் குழுவாக இணைந்து உயர வெற்றி வசமாகும்.
சாதித்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் அச்செயலை செய்தவர்களில்லை. பயிற்சியும், முயற்சியுமே முன்னேற்றும். ஏட்டில் படிப்பதை விட வாழ்க்கையை படிப்பது சிறந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகுவதோடு நம் ப்ளஸ் மைனஸ் பற்றிய தெளிவு வந்து விட்டாலே நமக்கான பாதை புலப்பட்டது விடும்.