நீங்கள் தெளிவின்மை என்று ஏதோ ஒரு விடயத்தை கருதுகிறீர்கள் அல்லவா, அதைப் பற்றிய புரிதல் உங்களிடம் இல்லாத பட்சத்தில், மேலும் அதனை புரிந்து கொள்ள நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க தயாராக இல்லாத பட்சத்தில், இந்த தெளிவின்மையானது உங்களிடம் தொற்றிக்கொள்கிறது.
பேசப் பேசத்தான் ஒரு மொழியை நாம் கற்க முடியும்.
படிக்கப் படிக்கத்தான் எந்த ஒரு விஷயத்தையும் நாம் அறிய முடியும்.
பழகப் பழகத்தான் எந்த கலையாக இருந்தாலும் அதில் நாம் கை தேர முடியும்.
அதேபோன்றுதான் உங்களுக்கு தெளிவில்லை என்று நீங்கள் கருதும் விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முதலில் முயற்சி செய்யுங்கள். அதைப் பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டாலே, நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு புதிய எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும்.
உங்களுக்கு உணர்வுகள் சார்ந்த விஷயங்களில் தெளிவில்லை, யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரியவில்லை என்று கருதினால், அதற்கு மிகப் பெரிய அனுபவமெல்லாம் தேவையில்லை. உங்களை பிறரிடத்தில் வைத்துப் பார்க்கும் மனப்பக்குவம் இருந்தாலே போதுமானது.
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒருவரை காதலிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். "ஐயோ எனக்கு காதலிக்க தெரியாதே. அதைப்பற்றிய தெளிவு எனக்கு இல்லையே. நான் என்ன செய்வது?” என்று நினைத்தால் ஒன்றும் எடுபடாது.
அதற்கு பதிலாக அவள் உங்கள் காதலி என வைத்துக் கொள்வோம், ஒரு பெண் உங்களை முழு மனதுடன் விரும்புகிறாள். அவளுக்கு நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் என நினைத்து பாருங்கள்.
நிச்சயம் அவளை மகிழ்ச்சிப்படுத்த எதுவானாலும் செய்ய வேண்டும்.
அவளிடம் நம்மை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும்.
அவளிடம் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எந்நிலையிலும் அவளைக் கைவிடக்கூடாது.
அவளுக்குரிய இடத்தினை நாம் அளிக்க வேண்டும். ஏனென்றால் அவளுக்கும் கனவுகள், கடமைகள் உண்டு.
அவளிடம் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அவளுக்கும் உணர்வுகள் உண்டு.
ஏற்றத்தாழ்வு இல்லாமல், முதலில் அவளை ஒரு மனுஷியாக மதிக்க வேண்டும்.
என்னுடைய மொத்தமும் நீதான் என்று அவளை உணரச் செய்ய வேண்டும்.
நம்மை அவளுடைய நம்பிக்கையாக மாற்றவேண்டும்.
இதுபோன்ற காதலிப்பது பற்றிய நல்ல சிந்தனைகள் நமக்குள் ஏற்பட்டாலே. அந்த உணர்வுகளுக்குண்டான தெளிவினை நீங்கள் எளிமையாக பெறமுடியும்.
உங்கள் தந்தையின் உணர்வறிய, தந்தையாக மாறுங்கள்.
உங்கள் தாயின் உணர்வறிய, தாயாக மாருங்கள்.
அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மாமன், மச்சான், சொந்த பந்தம், முதலாளி, தொழிலாளி, பணக்காரன், ஏழை,கீழ் சாதி, மேல் சாதி போன்ற அனைவரின் உணர்வறிய அவர்களாகவே மாறுங்கள்.
ஒரு நிமிடம் அவர்களின் இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள். உணர்வுகள் சார்ந்த தெளிவானது அபரிமிதமாக கிடைக்கும். உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாது. உங்கள் எண்ணங்களில் அனைவரும் அழகாகத் தெரிவார்கள். இவ்வுலகை வழிநடத்த அது போதுமே. வேறென்ன வேண்டும்?