திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முறப்பநாடு அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நவ கயிலாயத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அதோடு, இந்த ஆலயம் நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கக் கூடியதாகும். முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட சூரபதுமன் பரம்பரையில் தோன்றிய அசுரன் ஒருவன், முனிவர்களுக்கு நீண்ட நாட்களாக பெருந்தொல்லை கொடுத்து வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி, முனிவர்கள் பலரும் இத்தல இறைவனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டனர்.
அதனை ஏற்று சிவபெருமான் அந்த அசுரனை வதைத்து முனிவர்களுக்கு அருள்புரிந்தார். முனிவர்களின் முறையீட்டை ஏற்று அருள்பாலித்ததால் இத்தலம், ‘முறைப்படு நாடு’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் முறப்பநாடு என்றானது.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழ மன்னன் ஒருவன், தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையின் நிலையைக் கண்டு கவலை கொண்டான். பல திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்ட மன்னன், தனது மகளோடு இந்த ஆலயத்திற்கு வந்து, இத்தலத்தில் உள்ள தட்சிண கங்கை தீர்த்தத்தில் நீராடினான்.
அப்போது அந்தப் பெண் குழந்தையின் குதிரை முகம் நீங்கி, அழகான முகத்தோடு மாறியது. இந்தத் தலத்தில் உள்ள நந்தியம்பெருமான், அந்தக் குழந்தையின் குதிரை முகத்தை தாமே ஏற்றுக்கொண்டதாக இக்கோயில் தல வரலாறு கூறுகிறது. எனவேதான், இக்கோயில் சிவபெருமானுக்கு எதிரே உள்ள நந்தியின் சிலை, குதிரை முகத்துடன் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.