Anjaneyar Deepa worship for marriage and child blessing 
ஆன்மிகம்

திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் ஆஞ்சனேயர் தீப வழிபாடு!

கவிதா பாலாஜிகணேஷ்

ம் ஒவ்வொருவரின் வேண்டுதலுக்கு ஏற்றவாறு, அந்த வேண்டுதலை பூர்த்தி செய்வதற்காக பல வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்கிறோம். சில வழிபாடும், பரிகாரமும் ஒரே நேரத்தில் இரண்டு விதமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயரை நாம் முழுமனதோடு தஞ்சம் அடைந்து வழிபட்டால் அவர் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வார் என்பது நம்மில் பல பேருக்கு அனுபவப்பூர்வமான உண்மையாக இருக்கும். அந்த வகையில் இந்தப் பதிவில் ஆஞ்சனேயருக்கு வாழைப்பழத்தை வைத்து தீபம் எப்படி ஏற்றுவது என்றும் அவ்வாறு ஏற்றும்பொழுது கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

இந்தப் பரிகாரத்தை வியாழக்கிழமையன்று செய்ய வேண்டும். இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமை செய்யலாம். இவ்விரண்டு கிழமையும் இயலாதவர்கள்தான் சனிக்கிழமை செய்ய வேண்டும். நல்ல வாழைப்பழமாக இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் ஆஞ்சனேயர் சன்னிதிக்கு செல்ல வேண்டும். இந்த வழிபாட்டை காலையில் அல்லது மாலையில் என்று இரண்டு வேளைகளில் ஒரு நேரத்தில் செய்யலாம். குளிகை நேரம் வரும் சமயமாக இருந்தால் இந்த பரிகாரம் மிகவும் உத்தமமாக இருக்கும்.

வாழைப்பழத்தை படுக்க வசமாக வைத்து அதற்கு மேல் கத்தியை வைத்து பள்ளம் போல் எடுத்து அந்த பள்ளத்தில் நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபமானது ஆஞ்சனேயரை நோக்கி எரிவது போல் ஏற்ற வேண்டும். இதில் மற்றும் ஒரு முறை இருக்கிறது. நேராக இருக்கும் வாழைப்பழத்தை எடுத்து அதன் காம்பு மற்றும் நுனியை நறுக்கிவிட்டு மீதம் இருக்கும் பழத்தை இரண்டாக நறுக்கி அதற்கு நடுவில் இருக்கும் வாழைப்பழத்தை மட்டும் நீக்கிவிட்டு அதில் நெய்யை ஊற்றி பஞ்சுத்திரியை போட்டு தீபம் ஏற்றியும் வழிபடலாம். நெல்லிக்காய் தீபம் ஏற்றுவது போல் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இவ்வாறு ஏற்றிவிட்டு ஆஞ்சனேயரிடம் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை கூறி, ஆஞ்சனேயரை 11 முறை சுற்றிவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதோடு, ஆண் குழந்தை பிறப்பதற்கு உரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், எப்பேர்ப்பட்ட திருமணத் தடையாக இருந்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விரைவிலேயே மனதிற்குப் பிடித்த வரன் வந்து அமைய ஆஞ்சனேயர் அருள்புரிவார் என்று கூறப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறிய பிறகு ஆஞ்சனேயருக்கு தங்களால் இயன்றளவு அபிஷேகத்திற்குரிய பொருட்கள், வஸ்திரம் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். பிறகு வடைமாலை, துளசி மாலை என்று ஏதாவது ஒரு மாலை அவருக்கு அணிவித்து தயிர் சாதத்தை நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT