முக்திக்கு வித்தாகும் மூலப்பரம்பொருள் கணபதியின் வாகனமாக மூஞ்சூறு விளங்குகிறது. மிகப்பெரிய உருவம் கொண்ட கணபதிக்கு மிகக்சிறிய உயிரினமான மூஞ்சூறு எப்படி வாகனமாக அமைந்தது என்பதை விளக்குவதே இந்தப் பதிவு.
தேவேந்திரன் சபையில் வாமதேவர் என்ற பெயரில் தவ முனிவர் ஒருவர் இருந்தார். அந்த அவையில் இருந்த கிரெளஞ்சன் என்ற கந்தர்வன் தனது ஆணவம் காரணமாக, வாமதேவரை சதாசர்வ காலமும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தான். பொறுமை இழந்த வாமதேவர் ஒரு நாள் அவனை மூஞ்சூறு வடிவம் பெறும்படி சாபம் இட்டு விட்டார்.
சாபம் காரணமாக எலியாக மாறிய கிரௌஞ்சன் அதன் பிறகு தனது தவறை உணராமல், வாமதேவரை பழி தீர்ப்பதற்காக சக முனிவர்களையும், சீடர்களையும் கொடுமைப்படுத்தியதோடு, அவர்களது ஆசிரமங்களையும், பூஜை அறைகளையும் தீயிட்டுக் கொளுத்தினான்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த பராசர முனிவர், இதைப் பற்றி விநாயகப்பெருமானிடம் கூறி, பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனைக்கு செவி சாய்த்த கணபதி உடனே கிரௌஞ்சனின் கொட்டத்தையும், ஆணவத்தையும் அடக்கினார். எலி உருவத்தில் இருந்த அவன் மறுபடியும் கந்தர்வனாக மாற விரும்பாமல், தன்னை ஆட்கொண்ட விநாயகருக்கே வாகனமாக இருக்க விரும்பி, தன் மேல் ஆரோகணிக்க வேண்டினான். இப்படியாகத்தான் மூஷிகனாக இருந்த கிரௌஞ்சன், விநாயகரின் வாகனமாகி விட்டான்.