சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தொலைவில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பன் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோயிலுக்குச் செல்வதற்கு நடைமேடை உள்ளது. மஞ்சமாதாவின் கோயில் சென்றதும் முதலில் நாம் வணங்க வேண்டியது ஸ்ரீ கடுத்த சுவாமியைத்தான். மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வம். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்வார்கள். இந்த மணிமண்டபம் மிகவும் அழகாக இருக்கும். இங்கேதான் மகர விளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள். ஜோதி தரிசனத்திற்குப் பிறகு சபரிமலை வரும் பந்தளராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள்.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிப்பட்டு ஐயப்பனை வணங்கி, “நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். எனது சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வர வேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம், “நான் இந்த ஜன்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்” என்று கூற, அந்தப் பெண் தொடர்ந்து வற்புறுத்தவே ஐயப்பனும், “நான் வீற்றிருக்கும் மலையிலேயே நீயும் அமர்ந்திரு. என்றைக்கு ஒரு கன்னி சாமியாவது என்னைக் காண வராமல் இருக்கிறாரோ அன்றைக்கு நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, “உங்களை தரிசிக்க வரும் பக்தர்கள், என்னையும் தரிசிக்க வேண்டும். அப்படி என்னை தரிசிப்பவர்களுக்கும் நீங்கள் அருள்பாலிக்க வேண்டும்” என்று கேட்டு சுவாமி ஐயப்பனுக்கு இடது புறத்திலேயே பிரதிஷ்டையானாள்.
அதன்படி, அந்தப் பெண் சபரிமலையில் மஞ்ச மாதா என்கிற மாளிகை புறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள். அன்றிலிருந்து இன்று வரையிலும் சபரிமலைக்குச் செல்பவர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு, மாளிகைபுரத்து அம்மனையும் வணங்கி விட்டுதான் திருப்பிச் செல்கின்றனர். அதேபோல், இன்று வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பின்போது ஒரு கன்னி சாமியாவது ஐயப்பனை தரிசிக்க வராமல் இல்லை. மாளிகைபுரத்தம்மனும் அன்றிலிருந்து இன்று வரை ஐயப்பனை மணக்க ஆவலோடு காத்திருக்கிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும் அவளது திருக்கோயில் பிராகாரத்தை சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவரது அருளை பெற்று வருகிறார்கள். சில ஐயப்ப பக்தர்கள் ரவிக்கை துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குகிறார்கள். திருமணம் வேண்டிய சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டுகளை கொடுத்து ஒன்றை திரும்பப் பெற்று அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்படி வேண்டுதல் செய்த அடுத்த ஆண்டிலேயே அவர்களது திருமண ஏற்பாடு இனிதே நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும்போதே பக்தர்கள் அனைவரும் இந்த மாளிகைப்புரத்து அம்மனின் பெயரையும் சொல்லியே மாலை அணிந்து கொள்கின்றனர். மாளிகைபுரத்து அம்மனை தரிசிக்காமல் எந்த கன்னி சாமியும் வருவதில்லை.