Do you know the miracle of Kaikeyi's finger turning into Achani? 
ஆன்மிகம்

கைகேயியின் கைவிரல் அச்சாணியாக மாறிய அதிசயம் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. அந்தப் போரில் தேவர்களின் சார்பில் தசரதரும் பங்கேற்றார். அந்த போரில் தானும் பங்கேற்க விரும்பினாள் தசரதனின் மனைவியரின் ஒருவரான கைகேயி. அவள் தேர் ஓட்டுவதில் கெட்டிக்காரி என்பதால் கைகேயியையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார் தசரதர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தசரதனின் தேர் அச்சாணி முறிந்து தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அப்போது கைகேயி தன்னுடைய கட்டை விரலை அச்சாணியாகப் பயன்படுத்தி தேர் நிலை தடுமாறாமல் பாதுகாத்தாள். இதனால் அசுரர்களுடன் தொடர்ந்து போரிட்டு தேவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாள் கைகேயி.

இந்தப் போரில் தன்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த காரணத்தினால் கைகேயிக்கு இரண்டு வரங்களை அளித்தார் தசரதன். ஆனால், அந்த வரங்களை அப்போது பெறாமல், தேவைப்படும்போது அந்த வரங்களை கேட்டு பெற்றுக் கொள்வதாக கைகேயி கூறிவிட்டாள். அந்த இரண்டு வரங்களைத்தான் பின்னாளில் தனது மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ஸ்ரீராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என இரண்டு வரங்களாகக் கேட்டாள்.

இதில் நாம் பார்க்கப்போவது நம் மனதில் எழும் சந்தேகத்திற்கான பதில். பெண்களின் கை மென்மையானது, மலர் போன்றது என்பார்கள். ஆனால், ஒரு தேரின் அச்சாணியாக செயலாற்றும் அளவுக்கு கைகேயின் விரல்கள் இரும்பாக மாறிப்போனது எப்படி என்ற கேள்வி தோன்றும். கைகேயி சிறுமியாக இருந்தபோது நடந்த சம்பவம் அது.

ஒரு சமயம் துர்வாசரை போன்ற முனிவர் ஒருவர் கேகய நாட்டின் அரண்மனைக்கு வந்து தங்கினார். அப்போது கைகேயி சிறுமியாக இருந்தாள். ஒரு நாள் அந்த முனிவர் உறங்கியபோது கைகேயி சிறுபிள்ளைக்கே உரிய குறும்புத்தனத்தால் முனிவரின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திவிட்டாள். தூங்கி எழுந்த முனிவரை கண்ட அரண்மனை பணியாளர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களின் சிரிப்புக்கான காரணத்தை அறிந்ததும் முனிவரின் கோபம் அதிகரித்தது.

அதைக் கண்டு பயந்துபோன கைகேயி, முனிவரிடம் “விளையாட்டுத்தனமாக நான் செய்த செயலை மன்னிக்க வேண்டும்” என்று வேண்டினாள். கைகேயின் தந்தையும் முனிவரிடம் மன்றாடினார். ‘தவசீலரே கைகேயி தங்களுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடுவாள்’ என்றார். அதற்கு முனிவர் ஒப்புக்கொண்டார். அதன்படி கைகேயி பலகாலம் முனிவருக்கு பணிப்பெண் போல இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் முனிவருக்கு செய்து கொடுத்தாள்.

அதுவரை அரண்மனையில் வசித்த முனிவர் பின்னர் காட்டிற்கு தவம் செய்ய புறப்பட்டார். அப்போது தனக்கு இதுநாள் வரை பணிவுடன் பணிவிடை செய்த கைகேயிக்கு வரம் ஒன்றை அளித்தார். அந்த வரம்தான் தேவைப்படும் நேரத்தில் உனது கரங்கள் இரும்பின் வலிமை பெறும் என்பது. அதன்படியே கைகேயியின் விரல் தசரதன் தேருக்கு அச்சாணியாக மாறியது. இப்போது தெரிந்ததா கைகேயியின் கைவிரல் தேரின் அச்சாணியாக மாறியது எப்படி என்பது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT