மருதாணி பெண்களின் கைகளுக்கு அழகு சேர்க்கும் ஒரு சாதனம். விழாக்கள், விருந்துகள், திருமண விசேஷங்களின்போது பழங்காலம் தொட்டே இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொள்வது பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது. கை விரல்களுக்கு சிவப்புத் தொப்பி போட்டது போல அழகுறக் காட்சி அளிக்கும். உள்ளங்கைகளில் பல்வேறு டிசைன்களில் மருதாணி இட்டுக் கொள்ளலாம். மணப்பெண்ணிற்கு கை விரல்கள் மற்றும் முழங்கை வரை ஹென்னா எனப்படும் மருதாணி இடுவது வழக்கம். பல்வேறு டிசைன்களில் அழகழகான மெஹந்தி போட்டுக் கொள்கிறார்கள் பெண்கள். இது அவர்களது அழகை மேலும் கூட்டுகிறது.
அறிவியல் பயன்கள்: மருதாணி குளிர்ச்சித் தன்மை கொண்டது. இவற்றை கைகளில் இட்டுக் கொள்வதால் உடலில் குளிர்ச்சித் தன்மை கூடும். இரத்த ஓட்டம் சீராகும். இதய படபடப்பு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம் குறையும். சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னை இருக்கும். இவர்கள் அடிக்கடி மருதாணி இட்டுக் கொண்டால் தலைவலி சரியாகிவிடும்.
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் உடல் சூடு குறையும். இதனால் சரும நோய்கள் வயிற்று உபாதைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மருதாணி வைத்துக் கொள்வதால் நகத்தின் இடுக்குகளில் சேரும் அழுக்கு மற்றும் அதில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்கிறது.
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க பெண்கள் மருதாணி வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல வெள்ளைப்படுதலுக்கு மருதாணி நல்ல தீர்வாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் மருதாணியை அரைத்து கால்களில் பூசிக் கொண்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால் எரிச்சல் பிரச்னை சரியாகும்.
மருதாணி வைப்பதன் ஆன்மிக ரீதியான பலன்கள்: துளசி செடியைப் போலவே மருதாணியும் மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. வீட்டின் முன் மருதாணி செடியை வளர்த்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
மருதாணியை அரைத்து கைகளில் பூசிக் கொண்டால் பெண்களை துஷ்ட சக்திகள் அணுகாது. நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். மனநோய் பிரச்னையைக் கூட தீர்க்கும். கைகளில் எப்போதும் மருதாணி இட்டுக்கொள்ளும் பெண்களுக்கு செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். காரியத்தடை இருக்காது. அவர்கள் எடுத்த காரியம் எல்லாம் வெற்றியாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
இத்தனை பயன்கள் தரும் மருதாணியை மாதம் ஒரு முறையாவது அரைத்து கை, கால்களில் இட்டுக்கொண்டால் நன்மை கிடைக்கும்.