மனிதராய் பிறந்த அனைவருக்கும் இறைவழி வழிபாடு என்பது மிகவும் பொதுவான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள் இருப்பது போலவே இறைவழிபாடும் மிகவும் பொதுவான ஒன்றே ஆகும். சிலருக்கு கடவுள் மறுப்புக் கொள்கைகள் இருந்தாலும் கூட அதற்கு நிகராக வேறொரு கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கிட்டத்தட்ட அதுவும் கூட ஒருவகை வழிபாடு என்றே சொல்லலாம். ஆனால் இறை வழிபாடு ஒன்றால் மட்டுமே மாற்றங்கள் நிகழுமா? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
திருடன் ஒருவன் நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான செல்வங்களை கொள்ளையடித்தும், பல செல்வந்தர்களை மிரட்டியும் பணம் பறித்து வந்தான். அவன் ஒரு நாள் ஒரு காட்டுப்பாதையில் நடந்து கொண்டிருந்தபோது அவனுக்கு திடீரென தாகம் ஏற்பட்டது. தாகம் தீர்த்துக் கொள்வதற்காக பல்வேறு இடங்களில் நீரை தேடினான். ஆனால் எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. தாகத்தோடு கூடவே பசியும் சேர்ந்து கொள்ளவே தூரத்தில் ஓரிடத்தில் இருந்து புகை வெளிவருவதை கண்டான். நிச்சயமாக அந்த இடத்தில் மனிதர்கள் இருக்க கூடும் என நினைத்த அந்த திருடன் அந்த இடத்தை நோக்கி நடக்க தொடங்கினான். வெகு சிரமப்பட்டு அந்த இடத்தை அடைந்த பின்னர், அங்கே சென்று தன் தாகத்தை தீர்த்துக் கொண்டதோடு பசியாறவும் செய்தான்.
அதன் பின் அங்கிருந்த மனிதர்களை உற்றுநோக்கினான். அவர்கள் அனைவரும் மதத்துறவிமார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் காட்டுக்கு நடுவே இருந்த அந்த குடிசையில் செய்யப்பட்டு இருந்தது. அவர்களைப் பார்த்து அந்த திருடன் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டான். அந்த துறவிமார்களோ மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள். திருடன் அவர்கள் கூறியதை கேட்டு கலகலவென சிரித்தான். துறவிமார்கள் "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டனர்.
அதற்குத் திருடனோ, "நீங்கள் எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்? கொஞ்சம் இந்த காட்டை விட்டு நாட்டிற்கு வந்து பாருங்கள். மக்கள் அனைவரும் மூன்று வேளை சாப்பாட்டிற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஒருவேளை உணவுக்காக தங்களது ரத்தத்தையே வியர்வையாக சிந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ இங்கே ஒரு வேலையும் செய்யாமல் வெறுமனே பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டு மக்கள் நல்வாழ்வுக்காக பாடு படுவதாக சொல்கிறீர்கள். எந்த ஒரு செயலும் செய்யாமல் மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்கும் உங்களை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது" என்று கூறி மேலும் சிரித்தான்.
"ஏதாவது ஒரு செயல் செய்தால் தானே அதிலிருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். செயலை முன்னெடுக்காத எந்த ஒரு சிந்தனையும் எப்படி வெற்றி பெற முடியும்?" என்று கேட்டான் திருடன். மறுநாள் அதிகாலையில் தலைமை துறவி எழுந்த போது அங்கிருந்த துறவிமார்கள் அனைவரும் நகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தனர். வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் சிந்தனையோடு சேர்ந்த செயல்பாடுகளால் மட்டுமே நடைபெறும் என்பதை திருடன் மிகவும் தெளிவாக உணர்த்தி விட்டான்.
நம்முடைய உழைப்புக்கான பலன் கிடைப்பதற்கு இறைவனால் அருள் புரிய முடியுமே தவிர உழைப்பின்றி எந்த ஒரு ஆச்சரியத்தையும் நிகழ்த்துவதற்கு நிச்சயம் இறைவனால் முடியாது.