ஒரு சமயம் கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடினர். அதில் பார்வதி தேவி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்துவிட்டார். கலக்கமடைந்த பார்வதி தேவி சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாக பிடித்து வைத்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளது சிறுகுடி திருத்தலம். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தல புராணம் கூறுகிறது. கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால் இந்த ஊருக்கு, ‘சிறுபிடி’ என்று பெயர். அதுவே மருவி தற்போது, ‘சிறுகுடி’ என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அருளும் இறைவன் பெயர் சூட்சுமபுரீஸ்வரர்.
மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால் மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறார். மிகச் சிறிய லிங்கம். ஒரு பிடி அளவே உள்ள மணல் லிங்கம். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. எப்போதும் குவளையை கவசமாகப் போட்டிருக்கிறார்கள். அம்பாளுக்கு மட்டும்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைப்பிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகையே ஆலிங்கனம் செய்து கொண்டதால் இந்தத் தழும்புகள் உண்டானது. சூட்சுமபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான் அம்பாளை ஆசையுடன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டிருக்க, அம்பாள் நாணத்துடன் அருகில் இணைந்திருக்கும் கோலத்தைக் காண முடியும். இதுபோன்ற கோலத்தை வேறு எங்கும் காண முடியாது.
உத்ஸவ மூர்த்திகளில் ஒருவரான சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி அம்பாளின் தோளில் கை போட்டபடி காட்சி தருகிறார். இவர் வருடத்தில் பங்குனி உத்திர நாளில் மட்டுமே காட்சி தருவார். இந்த நாளில் சந்தோஷ ஆலிங்கன மூர்த்திக்கும் மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
அங்காரகன் வழிபட்டு ஈசனிடம் அருள் பெற்ற தலம் என்பதால், செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இத்தல சிவபெருமானை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் கொடி மரம் கிடையாது. நவகிரக சன்னிதியும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. சூரியனும் சனீஸ்வர பகவானும் அருகருகே காட்சி தருகிறார்கள். கோளறு பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இக்கோயிலில் குழந்தை வடிவில் காட்சி தருவது சிறப்பு.