தென்காசிக்கு அருகில் ஆய்க்குடி எனும் தலத்தில் அமைந்துள்ளது அருள்மிக பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயில். ஒரு காலத்தில் பொதிகைமலைக்கு அருகில் இருந்த மலைக்குன்றம் எனும் பகுதியை ஆய் எனும்அரசன் ஆண்ட வந்தான். அதனால் இப்பகுதி ஆய்க்குடி எனப்பட்டது. இங்கு மல்லிபுரம எனும் இடத்தில் இருந்த ஒரு குளத்தை தூர் வாரும்பொழுது ஒரு பெட்டியில் முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை எடுத்துச் சென்ற மல்லன் என்பவர் தனது வீட்டு ஆட்டுத் தொழுவத்தில் வைத்து வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், அரசும் வேம்பும் அமைந்த இடத்தில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும், அதற்கான இடத்தை தொழுத்தில் இருக்கும் ஒரு ஆடே வழிகாட்டும் என்றும் கூறினார்.
அதன்படியே ஒரு ஆடு வழிகாட்ட அரசும் வேம்பும் இணைந்து செழித்திருந்த ஒரு இடத்தில் அந்த முருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்து, அங்கு சிறிதாக ஒரு குடிசையும் எழுப்பி வழிபாட்டுக்குரியதாக்கினார். பிற்காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பலராலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டது. இக்கோயிலில் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களுடனும் அருள்பாலிக்கிறார்.
மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடி முருகன் கோயிலுக்கு வந்து, தமக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் முருகப்பெருமானுக்கு வைர வேல் சாத்துவதாக வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுதல் பலித்து அந்த பட்டு வணிகருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால், அந்த வணிகர் தனது வேண்டுதலை மற்ந்து போனார்.
ஒரு நாள் முருகப்பெருமான், அந்த வணிகர் மனைவியின் கனவில் தோன்றி, அந்த வேண்டுதலை நினைவூட்டினார். அதை அந்தப் பெண் தனது கணவரிடம் கூற, அந்த வணிகர் முருகப்பெருமானிடம் மன்னிப்புக் கோரியதுடன் வைர வேலையும் சாத்தினார். அதோடு, தாம் இருக்கும் வரை ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்கு படிப்பாயசம் நிவேதனம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இன்றும் இக்கோயிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆய்க்குடி முருகன் கோயிலின் படிப்பாயசம் பிரசித்தி பெற்ற பிரசாதம் ஆகும். இத்தலத்து முருகன் குழந்தைப் பருவத்தினன் ஆதலால், சுக்கு, சீரகம் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படுகிறது இந்தப் பாயசம். இதை அனுமன் நதிக்கரை படித்துறையில் அமர்ந்து அருந்தினால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டி, முருகனை தரிசித்து வழிபட்டு, படிப்பாயசம் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். இந்தப் பாயசத்தைப் பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானும் அருந்துவதாக ஐதீகம்.