Narayaniyam Day https://www.youtube.com/
ஆன்மிகம்

குருவாயூரப்பனே தலையை அசைத்து அங்கீகரித்த நாராயணீயம் தினம்!

நளினி சம்பத்குமார்

குருவாயூர் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது குருவாயூரப்பனும், நாராயணீயமும்தான். ஸ்ரீமத் பாகவதத்திற்கு இணையாகப் போற்றப்படும் நாராயணீயம், நாராயண பட்டத்திரியால் குருவாயூரப்பனின் சன்னிதியில், குருவாயூரப்பன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட , இயற்றப்பட்ட ஒரு புனிதமான நூல். நூறு தசகங்கள் (1036 ஸ்லோகங்கள்) கொண்ட நாராயணீயத்தை பட்டத்திரி குருவாயூரப்பன் மீது பல நாட்களாகத் தொடந்து பாடி முடித்த தினம் இன்றுதான்.

மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்யுத பிஷாரதியின் வாத நோய் தீர தனது குருவிடமிருந்து அந்த வாத நோயை தான் பெற்றுக்கொண்டார். தனது குருவின் மீதும் குருவாயூரப்பனின் மீதும் அளவுக்கதிகமான பக்தி கொண்டவர் நாராயண பட்டத்திரி. வாத நோயின் பீடியில் கடும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த பட்டத்திரி, அவ்வூரில் வசித்து வந்த எழுத்தச்சன் என்பவரிடம் அந்த வாத நோயிலிருந்து விடுபட வழி கேட்க , அவர் நாராயண பட்டத்திரியை குருவாயூருக்குச் செல்ல சொன்னார்.

‘மீன் தோட்டுக் கூட்டுக’ என்று பெருமாளிடமிருந்து உத்தரவு வந்ததாகவும் எழுத்தச்சன் தெரிவிக்க, அதன் அர்த்தம் என்னவென்றால், ‘பெருமாளின் தசாவதாரங்களின் தொடக்கமான மத்ஸ்ய அவதாரம் முதற்கொண்டு தசாவதார பெருமைகளை பறைச்சாற்றும்படியாக அந்த நூலை எழுதிடுக’ என்பதே.

இந்த நாராயணீயத்திற்கு முக்கியான மூன்று பெருமைகள் இருக்கிறது. நூலை இயற்றியவரின் பெருமை, அந்த நூலில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றிய பெருமை மற்றும் க்ரந்த பெருமை என்று பல பெருமைகளைப் பெற்ற ஒரு புனிதமான நூல் நாராயணீயம். பாகவதத்தின் சாரமாக, குருவாயூரப்பனையே காவிய தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நாராயணீயத்தின் பெருமையை இந்தப் புண்ணிய நன்னாளில் நினைத்துப் பார்த்தாலே, அந்த குருவாயூரப்பனின் பரிபூரண அருள் நமக்குக் கிடைத்து விடும்.

மேல்பத்தூரில் கடுமையான வாத நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நாராயண பட்டத்திரியை பத்து நபர்கள் ஒரு பல்லக்கில் சுமந்து கொண்டு மேல்பட்டூர் எனும் இடத்திலிருந்து குருவாயூருக்குக் கொண்டு சென்று அங்கே இருந்த, ‘நாராயண சரஸ்’ எனும் குளத்தில் இவரை நீராட வைத்து, குருவாயூரப்பனின் சன்னிதியில் இறக்கி விட்டு சென்று விட்டார்களாம். இன்றளவும் குருவாயூரப்பனின் சன்னிதிக்கு எதிரே, ‘பட்டத்திரி மண்டபம்’ என்று பெயரிடப்பட்ட அந்தத் திண்ணையை நாம் பார்க்கலாம். அந்தத் திண்ணையில்தான் பட்டத்திரி நாராயணீயத்தைப் பாடி முடித்தார்.

வாத நோயின் பிடியிலிருந்த நாராயண பட்டத்திரியால் குருவாயூரப்பனை கண்கொண்டு கூட, தமது கழுத்தைத் திருப்பி தரிசிக்க முடியாமல் இருந்ததால் கண்ணீர் விட்டு அழுதாராம். பக்தனின் கண்ணீரைப் பார்த்து தனது சன்னிதியிலிருந்து, ‘ஏன் அழுகிறீர்கள்?’ என கணீர் குரலில் பெருமாள் கேட்க, ‘அப்பா குருவாயூரப்பா, உன்னைப் பற்றி பாட வேண்டும் என்று வந்திருக்கிறேன். ஆனால், இந்த நோயால் என்னால் உன்னை பார்க்கக் கூட முடியாமல் போய்விட்டதே. எனது கழுத்தையோ, முகத்தையோ உன்னை நோக்கி திருப்ப முடியாமல் போய் விட்டதே’ என்று தேம்பித் தேம்பி அழுதாராம்.

உடனே குருவாயூரப்பன், ‘உங்களால்தான் என்னைப் பார்க்க முடியாதே தவிர, என்னால் உங்களை நன்றாக தலையை சாய்த்து பார்க்க முடியுமே. நீங்கள் பாடுங்கள் நான் என் தலையை சாய்த்து அசைத்து உங்கள் பாடலைக் கேட்கிறேன். எனது திருமுக தரிசனத்தையும் உங்களுக்கு அளிக்கிறேன்’ என்று தன் திருமுகத்தை அவர் பக்கம் திருப்பி காண்பித்தார் குருவாயூரப்பன்.

நாராயணீயத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் சாட்சாத் அந்த குருவாயூரப்பனே தமது தலையை ஆட்டி அங்கீகாரம் செய்தான் என்றால் இதன் பெருமையை என்னவென்று சொல்வது? ‘ஸாந்த்ரானந்தா’ என்று தொடங்கும் முதல் ஸ்லோகத்தில் ஸாந்த்ரா என்ற பதத்தை எடுத்துக் கொடுத்ததே குருவாயூரப்பன்தான். நூறு நாட்கள் தொடர்ந்து பாடிட, அதை பெருமாளும் தலையை அசைத்துக் கேட்டு வந்த இந்த நாராயணீயத்தை இன்று மனதில் நிறுத்தி தியானிப்போம்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT