ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி சிதம்பரத்தில் ஆலயம் அமைக்க எண்ணி காசியிலிருந்து பாண லிங்கம் எடுத்து வரும் வேளையில் பாலாற்றின் தென் கரையில் தங்கியுள்ளார். அச்சமயத்தில் ஆதிசேஷன் முதலான நாகங்கள் வந்து மஹரிஷி கொணர்ந்த லிங்கத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். அதே சமயம் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியை பணிந்து லிங்கத்தை இங்கேயே பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க வேண்டின.
அதோடு மஹரிஷியின் பூர்வ ஜென்ம பெயராகிய அனந்தன் என்ற திருநாமத்தோடு இறைவன் இங்கு எழுந்தருளவேண்டும் என்றும் ராகு, கேது தோஷ பரிகார ஸ்தலமாக விளங்கும் என்றும் சொல்லி மறைந்தனர். மகரிஷியும் மகிழ்ந்து, இறைவனை மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள எம்பெருமான் ஸ்ரீ அனந்தீஸ்வரர் மேற்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார்.
அருள் பொழியும் அன்னை ஸ்ரீ அனந்தநாயகி தென் திசை நோக்கி தரிசனம் அளிக்கிறாள். கம்பீரமான கொடி மரத்துடன் விளங்கும் இத்திருக்கோயிலில், கோஷ்ட மூர்த்திகளுடன், விநாயகர், வள்ளி தேவசேனா தேவிகளுடன் முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம் முதலிய சன்னதிகள் உள்ளன. சிவாலயத்தில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் அதோடு, பிரம்மோற்சவமும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், விநாயகர் ஆகியோரைக் காணலாம். தல விருக்ஷம் என்பது வில்வ மரம், இது கோவில் தீர்த்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது, இந்த கோவில் ராகு மற்றும் கேது பரிகார ஸ்தலம் ஆகும்.
ஆதியிலிருந்தே ராகு, கேது பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது இத்தலம். ராகு, கேது பரிகாரத்திற்கும், நாக தோஷங்களுக்கும் பரிகாரம் தேடி அலையும் மக்கள் இத்தலம் வந்து ஸ்ரீ அனந்தீஸ்வரரை வேண்டித்தொழுதால் நற்பயன் அடைவர். மெய்யூர் கிராமம் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.
கோவில் இருப்பிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்து பாலாறு தென்கரையில் வலது புறம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.