வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அது குண்டுமணியில்லை, குன்றின்மணி என்பதே மருவி காலப்போக்கில் குண்டுமணியாகி விட்டது.
குன்றின்மணி என்று சொல்லப்படும் விதையை பிள்ளையார் கண் என்றும் சொல்வார்கள். இது ஒரு கொடி வகையை சார்ந்ததாகும். இந்த குன்றின் மணி சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்பட்டது. நம் முன்னோர்கள் தங்கத்தை அளப்பதற்கு இதை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவாயூரப்பன் கோயிலில் குன்றின்மணி வைத்திருப்பார்கள். அதை அள்ளி கைகளில் வைத்து கொண்டு, கடவுளிடம் என்ன வேண்டுமோ அதை நினைத்து வேண்டிக்கொண்டு அவர் பாதத்தில் வைத்தால், நினைத்த காரியம் அப்படியே நடக்கும் என்று நம்பப்படுகிறது.
குன்றின்மணியை பீரோ, பணப்பெட்டி, பூஜையறையில் சாமிக்கு முன்பு வைக்கலாம். இது லட்சுமி கடாட்சம் கொண்டது என்பதால் பண வரவை கொடுக்கும். இது வீட்டில் இருந்தால் நெகட்டிவ் எனர்ஜியை நீக்கி, பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டுவரும். பில்லி, சூன்யம், ஏவல், தீயசக்தி ஆகியவற்றை போக்கக்கூடியதாகும்.
குன்றின்மணி நிறைய நிறங்களில் இருக்கிறது. அந்தக் காலத்தில் 12 வண்ணங்களில் குன்றின்மணி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் முக்கியமானது கருப்பு சிவப்பு சேர்ந்தது, சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை ஆகியனவாகும். இந்தக் கருப்பு சிவப்பு குன்றின்மணியில் மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.
கருப்பு குன்றின்மணி வடமாநிலத்தில் ராஜஸ்தான் போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இது கருப்பு நிறமாக இருப்பதால் காளியின் ரூபமாக நம்பப்படுகிறது. இது பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டியை போக்கக்கூடியது. சிலர் இதை பாக்கெட்டில் அல்லது பர்ஸில் வைத்துக்கொள்வார்கள். கெட்ட சக்திகள் வீட்டில் அண்டாமல் இருக்க சிவப்பு துணியில் கருப்பு குன்றின்மணியை போட்டு முடிச்சிட்டு வீட்டு வாசலில் கட்டிவிட்டால் கெட்டசக்திகள் நெருங்காது என்று நம்பப்படுகிறது.
வெள்ளை நிற குன்றின்மணி சரஸ்வதி தாயாருக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இது பணப்பிரச்னை, வறுமை, வியாபார பிரச்னை, படிப்பில் பிரச்னை போன்றவற்றை சரிசெய்யக் கூடியதாகும். தொடர் தோல்வியடைபவர்கள் இந்த வெள்ளை குன்றின்மணியை வைத்து அம்பாளை பூஜை செய்து வந்தால் வெற்றி கிடைக்கும்.
சிவப்பு நிற குன்றின்மணி எதிர்மறை எண்ணங்களை போக்கக்கூடியதாகும். தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்ற எண்ணம் சிலருக்கு எப்போதுமே இருக்கும். இந்தக் குன்றின்மணியை அவர்கள் வைத்திருந்தால் அந்தக் கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை குன்றின்மணி குபேரனுக்கு உகந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், இது மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடியதாகும். சந்தையில் போலியாக நிறமேற்றிய குன்றின்மணிகளை அதிக விலை சொல்லி விற்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, போலியைக் கண்டு ஏமாறாமல் நம்பிக்கையானவர்கள் மூலம் மட்டுமே இதை வாங்குவது சிறந்ததாகும்.
குன்றின்மணி பலவித நிறங்களில் உள்ளது. இது நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை குழந்தைகள் கையில் எட்டாத இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை தாயத்தாக செய்தும் அணிந்துகொள்ளலாம்.
எனவே, இதுபோன்ற அரிதான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து, நம் முன்னோர்கள் வழியில் நாமும் அவற்றைக் கடைப்பிடித்தும், பயன்படுத்தியும் நன்மை பெறுவோம்.