அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பல்வேறு வஸ்துக்களில் ஆலகால விஷமும் ஒன்று. தேவர்களைக் காக்கவும் உலகை ரட்சிக்கும் பொருட்டும் முக்கண் முதல்வனான சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தி, ‘நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். அப்படி சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த உபயோகப்படுத்திய சங்கு குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டி பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மந்தர் எனும் மலை. அமிர்தம் பெறுவதற்காக அசுரர்களும், தேவர்களும் வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்த இடம் இது என்று தல வரலாறு கூறுகிறது.
பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்று காட்சி தரும் இந்த மந்தார மலை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் மறைந்துள்ள சுவாரஸ்யங்கள் மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆம்… இந்த மலைப்பகுதியில் அழகிய சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் பெரிய சங்கு ஒன்று உள்ளது. அது, 'பாஞ்சஜன்ய சங்கு' என்று அழைக்கப்படுகிறது.
வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் இந்த சங்கு, சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி பொதுமக்களின் கண்களுக்குத் தென்படும் அதிசயம் வருடம்தோறும் நிகழ்ந்து வருகிறது. ஒரே நாளில் குளுத்தின் தண்ணீர் வற்றி, இந்த அதிசய சங்கு தென்படுவதும், மறுநாளே தண்ணீரில் சங்கு மூழ்கிப்போவதும் வியப்புரிக்குரிய விஷயமாக இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த மலை தலத்துக்கு ஒவ்வொரு பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள். ‘வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலை தலத்துக்குச் செல்ல, வனத்துறையின் அனுமதி பெற வேண்டியது அவசியம்’ என்கின்றனர் பக்தர்கள்.