ஆன்மிகம்

பந்தாடினாள் உமையவள்!

மருத்துவர் என். கங்கா

‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது மலர்த்தாள்: ஏழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!’

வானத் தேவர்களுக்கும் தெளியவொண்ணா தெய்வமான கங்கைச் சடையான், முப்புரம் எரித்தவன், ஹிமவான் மகளோடும் சஞ்சரிக்கும் திருக்கயிலாயம்! இந்த மலைகளின் நடுவே பாசாங்குசையான திரிபுரசுந்தரி தனது தோழிகளுடன் பந்து விளையாடுகிறாள்.

ஆம்! கயிலாயத்தில் பார்வதி தேவி பந்து விளையாடினார்! பூம்பாவை பந்து விளையாடுகிறார்! உலகையே ஆளும் நாயகி பந்து விளையாடுகிறார்! உற்சாகமாக விளையாடும் அன்னையை கண்டு வியந்த ஆதவன், அன்னை விளையாடும் இடத்தை இருள் சூழச் செய்ய விரும்பவில்லை. எனவே, ஆதவன் குறித்த நேரத்தில் மறையவில்லை! ஆதலால், தேவர்கள் மற்றும் முனிவர்களின் சந்தியாவந்தனம் போன்ற தினசரி மாலை சடங்குகள் தடைபட்டன. நேரம் தவறாமல் செய்யப்பட வேண்டிய சாங்க்யங்கள் அல்லவா அவை! கலங்கிய தவசிகள் கனகக்குன்றான மின்னா உருவ விகிர்தனான ஈசனிடம் சென்று முறையிட்டனர். இடரைக் களையும் எந்தையல்லவா அந்தப் பேரருளாளன்! பந்து விளையாடும் மென் விரலாளை நோக்கி வந்தான் மாதொருபாகன்! ‘இலங்கு சுடர் எம் ஈசா போற்றி; சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி’ என்று வணங்க வேண்டிய கொத்தலர் குழலி பார்வதி தேவி, நஞ்சணி கண்டனை கவனியாது மிக்க உவகையுடன் பந்தாடிக் களித்துக் கொண்டிருக்கிறாள்.

வெய்யாவும் தணியாயும் விளங்கும் கங்கைத் தலைவன் சினந்தார்! உமையவளின் பந்தினை அணை போட்டார். காலால் தட்டி விட்டார். ஜகத்ரஷகி லோக மாதாவான ஹிமாசலாசினியின் பந்து கயிலையிலிருந்து உருண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பந்தணைநல்லூரில் வந்து விழுந்தது. அந்த நகரமும் அங்கு வாழ்ந்த மக்களும் செய்த புண்ணியம் அல்லவா! ஆட்டம் நின்றது! சினத்தால் காலனை உதைத்தவரல்லவா! சினத்தால் இலங்கேஸ்வரனின் தோள் இருபதும் நெரிய விரல் வைத்தவரல்லவா! சினத்தால் காமனை எரித்தவரல்லவா! சினத்தால் படைப்பவனான நான்முகனின் சிரத்தை வெட்டிச் சிரித்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் அல்லவா! ஆணாகி பெண்ணாகி நின்றவன் பந்து விளையாடிய தன்னில் பாதியான சிவகாமசுந்தரியைப் பசுவாகும்படி சபித்தார்! கொண்டவனின் சீற்றத்தைக் கண்டு நடுங்கினாள் உமையவள்!

“பூலோகம் சென்று புற்றாகி நிற்கும் எனக்கு பால் சுரந்து வழிபாடு செய்! தவம் செய்! பிறகு உன்னை யாம் ஏற்போம்” என்றார். அபிராமவல்லி பசுவாகி பூலோகம் வந்தாள். சகோதரிக்கு துணையாக மாலவனும் இடையனாக பசுவினை ஓட்டி வந்தார். பந்தணைநல்லூரில் கொன்றை மரத்திற்குக் கீழ் புற்றாக விளங்கும் சுயம்பு லிங்கத்துக்கு பசு பால் சொரிந்து,

‘தீபம் ஆகிய சிவனே போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய போற்றி அமலா போற்றி’

என்று மனதுருகி வேண்டி வணங்கி வருகிறாள், பசுவான திருபுவனேஸ்வரி! அங்கிருந்த ஒரு முனிவரின் பூஜைக்கு தினமும் பால் குறைந்தது. முனிவர் மனம் நொந்து பசுவை மறைந்திருந்து கவனித்தார். பசு புற்றின் மேல் பால் பொழிவதைக் கண்டு சினந்து, வெகுண்டு கையில் இருந்த தடியால் சிவசாமி மகிழ்வாமியை, தேவியை அடித்தார். நிலை தடுமாறி நொடித்த பசுவின் கால் குளம்பு சிவன் மேல் பட்டு சின்னம் ஏற்படுத்தியது. புராதனி புரிந்தரி ஆகிய பார்வதி தேவி பசு உருவம் மாறி, தெய்வ உருவம் பெற்றார். சினம் அடங்காத விடமுண்ட கண்டன் “என்னை அடையும் காலம் இன்னும் கைகூடவில்லை! மேலும் சிறிது காலம் தவமிருந்து பிறகு மணாளனை அடைவாய் மலையாள் மடந்தையே” என்றார்! தவக்கோலம் கொண்டு வடக்கு நோக்கி இருந்தாள் முகுந்த சகோதரி பார்வதி தேவி.

இந்த தெய்வீக திருவிளையாடலின் கதைக் களம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்) தலைப் பாகத்தில் குளம்பு பட்ட அடையாளத்துடன் பசுபதிநாதர்! வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் தவரூபியாக வேணு புஜாம்பிகை! காம்பன தோளியம்மை! இன்றும் மாசி மகம் சமயம் 7ம் திருநாளில் பூப்பந்து உத்ஸவமும் பிறகு அம்மையப்பரின் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.

புற்று மண்ணிலிருந்து உருவான சுயம்பு லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்பு பதித்த வடு காணப்படுகிறது. தினமும் உமையவள் பசு வடிவில் பால் சொரிந்து வழிபட்டதால் லிங்கம் வெண்மையாகக் காணப்படுகிறது. காம்பீலி மன்னன் கோயிலை சீரமைத்ததாகத் தெரிகிறது. இந்திரன், திருமால், சூரியன் மற்றும் பரமன் வழிபட்ட இந்த சிவத் தலத்துக்கு தென்கயிலை, இந்திரபுரி, பானுபுரி என்றெல்லாம் பெயர்கள் விளங்குகின்றன. சுந்தரரும் அப்பரும் மனதார வழிபட்ட இந்த ஊருக்கு கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. பந்தநல்லூர் என்று பெயர் மருவி அழைக்கப்படும் பந்தணை நல்லூர் பசுபதீஸ்வரனை வணங்குவோம்!

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT