இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இன்பம் வந்தால் துள்ளிக்குதித்து ஆனந்திப்பதும், துன்பம் வந்தால் துவண்டு சோர்ந்து போவதும் மனித சுபாவம். இரு நிலைகளிலும் தன்னிலை மாறாமல் சமநிலையில் உள்ளவரே வாழ்வில் நிம்மதி காண்கிறார். ஆனால். சமநிலையுடன் வாழும் மனத்துணிவு அனைவருக்கும் இருப்பதில்லை என்பதால்தான் முன்னோர்கள் ஆன்மிகம் எனும் அற்புதத்தின் மூலம் புன்னகைக்கும் தெய்வங்களை அறிமுகப்படுத்தி அவர்களை சரணடைந்து நம் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை நமக்கு அருளிச்சென்றுள்ளனர்.
அப்படி நம் துன்பங்களைத் துடைத்து நிம்மதி தரும் வழிபாடுகளுள் சிறப்பானது துர்கையம்மன் வழிபாடு. துர்கையின் சிறப்புகள் என்ன? எப்படி வழிபடலாம்?
துர்கை எனும் சொல்லில். த், உ, ர், க், ஆ எனும் ஐந்து அட்சரங்கள் உள்ளன. த் என்றால் அசுரனை அழிப்பவள், உ என்றால் இடையூறுகளை அகற்றுபவள், க் என்றால் ரோகத்தை விரட்டுபவள், க் என்றால் பாவத்தை நலியச் செய்பவள், ஆ என்றால் பயம் மற்றும் எதிரிகளை அழிப்பவள் என்பது பொருளாகச் சொல்கிறது சாஸ்திரம். துர்கையை குமாரி, த்ரிமுர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா என 9 திருநாமம் கூறி அழைக்கிறது சாஸ்திரம். சுவாசினி பூஜையிலும் துர்கையே ஒன்பது அம்பிகையரின் அம்சமாகப் போற்றப்படுகிறாள்.
நல்லெண்ணெய் தீபம் துர்கை வழிபாட்டுக்கு ஏற்றது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றி சண்டிகை தேவி சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால் நல்ல பலன்களைக் காணலாம். அஷ்டமி தினத்தில் துர்கைக்கு மிக உகந்ததான செவ்வரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களுடன் சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.
மனிதப் பிறவியின் துக்கங்களைப் போக்குபவள் துர்கை என்பதால் துர்கையின் மகிமையை விளக்கும் துர்கா சப்தபதி எனும் ஸ்லோகங்களை தியானிப்பது நல்ல மனநிலையைத் தரும். கோர்ட்டு விவகாரங்கள், சிறைவாசம் போன்றவற்றிலிருந்து விடுபடவும், சிறிய விஷயம் முதல் பெரும் பதவி வரை நினைத்த காரியங்கள் நிறைவேறவும் துர்கையை சரணடைந்தால் வெற்றி கிடைக்கும்.
பரசுராமருக்கு அமரத்துவம் அளித்த துர்கையை வணங்குவோரை பயமோ, மனத்தளர்ச்சியோ, துன்பமோ தாக்குவதில்லை. துர்கையின் வாகனம் சிம்மம். கோடி மயில்தோகை. பிடித்த மலர் நீலோத்பலம். இந்த மலர் மற்றவற்றை விட நூறு மடங்கு உயர்ந்தது. துர்கை என்ற பெயருடன் சதாக்சி என்ற பெயரையும் கூறுவோர் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவர்.