சித்தி விநாயகர்... 
பயணம்

ஆன்மிகப் பயணம்: மகாராஷ்டிரா மாநில கோவில்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சென்னையில் இருந்து ஒரு குழுவுடன் சேர்ந்து சுமார் 36 பேர்கள் விமானம் மூலம் மும்பைக்குச் சென்றோம். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலையும், மகாலட்சுமி கோவிலையும் தரிசித்து அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியா சென்று நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். 

சித்தி விநாயகர் கோவில்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பிரபா தேவி பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் 1801ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இக்கோவிலில் தரிசனம் செய்தோம். "சித்தி விநாயகர்" என்றால் வேண்டியதை வேண்டியபடி அருளும் விநாயகர் என்று பொருள்.

ஐஸ்வர்யம் அருளும் மகாலட்சுமி கோவில்: தெற்கு மும்பையில் புறநகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புலாபாய் தேசாய் சாலையில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோவில். அரபிக் கடலை ஒட்டி ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இக்கோவிலில் மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் மகாகாளி என முப்பெரும் தேவியரும் ஒரே இடத்தில் குடிகொண்டுள்ள விசேஷமான தலம் இது. இங்கு நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சித்தி விநாயகர் கோவிலிலும் மகாலட்சுமி கோவிலிலும் நிறைய கூட்டம். தரிசனம் முடிந்து வெளியில் வரவே நேரம் ஆகிவிட்டது. களைப்பு தீர ருசியான டீ அருந்தி பிறகு பயணத்தை தொடர்ந்தோம். இரண்டு ஏசி வேன்கள் ஏற்பாடாகியிருந்தது. உணவை முடித்துக் கொண்டு வண்டியில் அங்கிருந்து அவுரங்காபாத்திலுள்ள எல்லோரா குகைக்கும், கிர்ஷ்னேஸ்வர் ஜோதிர்லிங்கம் கோயிலுக்கும் சென்றோம்.

கிரிஷ்னேஷ்வர் கோவில்: 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான இக்கோவில் எல்லோரா குகைகளில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள வெருல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான சிவன் கோவிலாகும். அங்கு ஈசனை நாமே அபிஷேகம் செய்யலாம். எனவே இங்கிருந்து விபூதி, குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை எடுத்துச் சென்று மனம் குளிர அபிஷேகம் செய்து உலர் பழங்களை வைத்து நிவேதனம் செய்து மகிழ்ந்தோம்.

எல்லோரா குகைக் கோவில்கள்: அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளுக்கு செல்வதாக திட்டம். ஆனால் கடைசி சமயத்தில் நேரமின்மை காரணமாக எல்லோரா குகைகள் மட்டும் அழைத்துச் சென்றார்கள். எல்லோரா கைலாசநாதர் கோவில் மலையைக் குடைந்து சிவனின் கைலாசத்தைப் போல உருவாக்கப் பட்டுள்ளது. கோவிலின் கருவறையில் கைலாசநாதர் மேற்கு நோக்கி காணப்படுகிறார். 

சுல்தான்கள் கோவிலை அழிக்க பல முயற்சிகள் செய்தும் அவர்களால் சிலைகளின் சிறு பாகங்களை (மூக்கை) மட்டும்தான் உடைக்க முடிந்தது. இந்த கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் ஒன்றாக உள்ளது.

கேட் வே ஆஃப் இந்தியா ....

இக்கோவிலின் கற்கள் 6000 ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரிய மலையை உச்சியிலிருந்து குடைந்து உருவாக்கப்பட்ட ஒற்றைக்கல் கோவில் வகையைச் சேர்ந்தவை. இக்கோவிலை உருவாக்க நாலு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளது. 250 அடி நீளம் 150 அடி அகலம் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. 

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஷ்டிரகூட வம்ச மன்னர் கிருஷ்ணா என்பவரால் கட்டப்பட்டது. இவை சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்களுக்காக புகழ்பெற்றது. 1 முதல் 12 வரை பௌத்த குகைகள், 30 முதல் 34 வரை ஜைன குகைகள் என எங்கும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நுட்பமான சிற்பங்கள் உள்ள எல்லோரா குகைகள் மூன்று பெரிய மதங்களின் சகிப்புத் தன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது போற்றத்தக்கது.

சுகமான பயணம். நல்ல சாப்பாடு, வசதியான ஹோட்டலில் தங்குதல் என மகாராஷ்டிரா மாநில பயணம் மிகவும் நன்றாக இருந்தது.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT