விமானத்தில் புதிதாகப் பயணிக்கப் போகிறீர்களா? அப்போது உங்களுக்காகத்தான் இந்த கட்டுரை.
விமான பயணத்திற்கான பயணச்சீட்டை நீங்களே நேரடியாக இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கு இதில் சிரமம் என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் நிறுவனம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
விமானப் பயணத்தை திட்டமிடும்போது மூன்று மாதங்களுக்கு முன்னரே பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் விமானப் பயணம் மிகச் சிக்கனமாக அமையும். பயணத்தேதி நெருங்க நெருங்க பயணச்சீட்டின் விலை விமானத்தைப்போல உயரப் பறக்கத் தொடங்கும்.
சில விமான நிறுவனங்கள் குரூப் புக்கிங் என்றொரு வசதியைத் தருகின்றன. பத்து பேர்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து டிக்கெட்டை புக்செய்தால் நிறைய லாபம் கிடைக்கும். அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்னால் இந்த வசதியில் புக்செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். இதற்காக நீங்கள் திட்டமிடலாம்.
விமான பயணச் சீட்டை பதிவு செய்யும் முன்னால் அந்த தொகையிலேயே பயணத்தின் போது உணவையும் தருகிறார்களா என்பதை தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள். தற்போது பெரும்பாலான உள்நாட்டு விமான நிறுவனங்கள் உணவைத் தருவதில்லை. விமானங்களில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டிலின் விலை எக்கச்சக்கமாக இருக்கும். எந்த விமான நிறுவனத்தில் உணவோடு டிக்கெட் கிடைக்கிறது என்பதை பார்த்து உறுதி செய்து புக் செய்யுங்கள்.
பயணத் தேதியன்று விமான நிலையத்திற்கு பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகச் சென்று விட வேண்டும். மறக்காமல் ஆதார் கார்டினைக் கொண்டு செல்ல வேண்டும். வேறு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையும் கொண்டு செல்லலாம். உங்கள் பயணச்சீட்டையும் ஆதார் கார்டையும் சரி பார்த்த பின்னரே உங்களை விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிப்பார்கள்.
உள்ளே சென்று நீங்கள் பயணிக்க இருக்கும் விமான நிறுவனத்தின் கவுண்ட்டருக்குச் சென்று உங்கள் பயணச்சீட்டைக் காட்டினால் போர்டிங் பாஸைத் தருவார்கள். அதில் அனைத்து விவரங்களோடு உங்கள் இருக்கை எண்ணும் தரப்பட்டிருக்கும். நீங்கள் பறக்க இருக்கும் விமானத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டே போர்டிங் பாஸ் எனப்படுகிறது. தற்போது வெப் செக்இன் (Web Checkin) முறை வந்து விட்டது. உங்கள் வீட்டிலிருந்தே இணையத்தின் வாயிலாக வெப் செக்இன் செய்து போர்டிங் பாஸை நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போர்டிங் பாஸைப் பெற விமான நிலையத்தில் வரிசையில் காத்திருக்கும் நேரம் இதன் மூலம் மிச்சமாகும்.
விமானப் பயணத்தில் உங்கள் சூட்கேசில் ஷேவிங் பிளேடு, கண்ணாடி பாட்டில், கத்தரிக்கோல் முதலான பொருட்களை வைக்காதீர்கள். ஸ்கேனிங்கின் போது பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை சூட்கேசிலிருந்து வெளியே எடுத்துப் போடும்படி கூறி விடுவார்கள். கடைசி நேரத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு அடுக்கியவை எல்லாவற்றையும் இதனால் கலைக்க நேரிடும். விமானப்பயணமும் டென்ஷனில் தொடங்கும்.
விமானப்பயணத்தின் போது அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள், கேமிரா, லேப்டாப், செல்போன் போன்றவற்றை கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அனுமதி உண்டு. விமானத்தில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். இதுவும் உங்கள் பாதுகாப்புக்குக்காகத்தான்.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் பணிப்பெண்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி ஆங்கிலம் அல்லது இந்தியில் விளக்குவார்கள். நன்றாக கூர்ந்து கவனித்து அவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
புதிதாக விமானத்தில் பயணிப்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். விமானம் டேக் ஆஃப் ஆகும் போது காதை பஞ்சினால் நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். பலருக்கு காதில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மிக உயரத்தில் பறக்கும் விமானங்களால் இத்தகைய பிரச்சினை ஏற்படுவது சகஜம். இந்த பிரச்சினையைத் தவிர்க்கத்தான் விமானத்தில் காதில் வைத்துக் கொள்ள பஞ்சும் சாப்பிட சாக்லெட்டையும் தருகிறார்கள். சாக்லெட்டை வாயில் போட்டு மென்றபடி இருந்தால் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
விமானப் பயணத்தில் புதிய விலை அதிகமான பெரிய டிராலி பேகுகளைக் கொண்டு செல்லாதீர்கள். நீங்கள் உங்கள் டிராலி பேகை இறங்கும் விமான நிலையத்தில் பேகேஜ் கலெக்ட்டிங் பகுதியில் பெறும் போது டிராலி பேகுகள் உடைந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சற்று பழைய டிராலி பேகுகளைக் கொண்டு செல்லுங்கள். கூடுமான வரை அதிகமாக லக்கேஜ்களை கொண்டு செல்லாதீர்கள். இதனால் உங்களுக்கு சுற்றுலாவில் பெரும் சிரமங்கள் மட்டுமே பரிசாக கிடைக்கும்.