வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு ஓமன். அரேபிய வளைகுடாவின் தென்கிழக்கு முனையில் அரபிக் கடலையொட்டி இருக்கிறது. ஓமன் மனிதனால் பூமியில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இங்குள்ள மக்களின் எண்ணிக்கையைவிட அங்குள்ள பேரீச்சம் பழ மரங்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு 250க்கும் மேற்பட்ட வகையான பேரீச்சம் பழ மரங்கள் உள்ளன. இந்த நாட்டில் ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால், அங்கு அவர்கள் ஒரு பேரீச்சம் பழ மரத்தை நடுவது வழக்கம்.
ஓமன் நாட்டில் மஸ்கட் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது ‘பக்லா’ எனும் கோட்டை. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோட்டையை அந்நியர் படை அச்சுறுத்தல் காரணமாக ஆவியை ஏவி ஒரு நள்ளிரவில் பூதங்கள் கட்டியதாக அங்கு ஒரு கதை உண்டு. 12 கி.மீ. நீளமுள்ள சுற்றுச் சுவரைக்கொண்ட இந்தக் கோட்டை தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. ஓமன் நாட்டின் ‘பக்லா நகரம்' மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.
இங்கே உள்ள டேரேஜே (Dereaze) நகரம் 9000 ஆண்டுகள் பழைமையானது என்பதை தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள் உறுதிபடுத்தியுள்ளன.
ஓமன் நாட்டின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள ‘டோபர்’ பாலைவனத்தை விண்வெளியில் இருந்து பார்த்தால் பழுப்பு நிறத்தில் காணப்படும். இங்கே சில வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வாழ்கின்றன. 52 டிகிரி செல்சியஸ் (125 பாரன்ஹீட்) வெயில் கொளுத்தும். செவ்வாய் கிரகத்தின் பல்வேறு தகவமைப்புகள் இந்த பாலைவன சூழல்களுடன் ஒத்துப்போவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஓமன் நாட்டில் காபியில் சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். பிளைன் காபியை ஒரு உறிஞ்சு உறிஞ்சி கையிலுள்ள பேரீச்சம் பழத்தை ஒரு கடி கடிப்பார்கள். இதுதான் அங்கு வழக்கம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு சாப்பிட வேறெதுவும் அளிக்காவிட்டாலும், கண்டிப்பாக காபி கொடுத்துவிடுவார்களாம். நட்பை, இருவருக்குள் உள்ள உறவை வலுப்படுத்த காபி உதவுகிறது என்பதனால், இதை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றி வருகின்றனர். காபி கொட்டைகளை ஓமனிலேயே விளைவிக்கின்றனர். மேலும், காபியுடன் சிறிது குங்குமப்பூவும் சேர்க்கப் படுகிறது. இதனால் இவர்களின் காபியின் சுவையும் கூடுகிறது!
ஓமன் நாட்டில் கார்களை அழுக்காக வைத்திருந்தால் அதற்கு தண்டனை உண்டு. தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே இங்கு ஹாரன் அடிக்க வேண்டும். மற்ற சமயங்களில் வாகனங்கள் ஹாரன் அடிக்க இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாரன் சத்தம் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் என்பதனால் இது எழுதப்படாத விதியாக ஓமனில் பின்பற்றப்படுகிறது.
சாம்பிராணி வாசனைப் பொருள்உலகத்தரம் வாய்ந்த ‘சாம்பிராணி’ வாசனைப் பொருள் ஓமனில்தான் தயாராகிறது. அதை தங்களது பாரம்பரிய தொழிலாக செய்து வருகின்றனர். உலகிலேயே அதிகளவு சாம்பிராணி தயாராவதும் இங்குதான். ஓமனில் கிடைக்கும் வாசனை சாம்பிராணிகளுக்கு இன்றும் உலக சந்தையில் ஒரு தனி மதிப்பு இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று ஓமன் என்று அழைக்கப்படும் நாட்டுக்குள் இருக்கும் தோஃபர் (Dhofar) என்கிற பகுதியில்தான் மிகப்பெரிய அளவில் வாசனை சாம்பிராணிக்கான மூலப்பொருட்கள் கிடைத்தன. இன்றுவரை கிடைத்தும் வருகின்றன.
பூமிக்கடியில் சமைக்கப்படும் ‘ஷீவா உணவு’ ஓமன் நாட்டை பூர்வமாகக்கொண்டது. இந்த உணவுகளை அடுப்பில் வைத்து சமைக்க மாட்டார்கள். மாறாக பூமியில் குழிதோண்டி, மாமிச உணவுகளை மசாலாவுடன் இரண்டு நாள் புதைத்து வைத்து, பிரத்தியேகமாக குச்சிகள் மூலம் எரித்து சமைக்கும் முறைதான் ஷீவா முறை.
ஓமன் நாட்டில் உள்ள வீடுகள், கட்டடங்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும், வெள்ளையை தவிர வேறு நிற பெயிண்ட்டை அடிக்கவேண்டும் என்றால், அரசிடம் முறையான காரணத்தைக் கூறி அனுமதி பெறவேண்டும்.
ஓமன் நாட்டில் வருமான வரி கிடையாது. இங்கு பெண்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு மகப்பேறு சமயத்தில் 98 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை தரப்படும். பிறந்த குழந்தையை வளர்க்க ஒரு ஆண்டு சம்பளம் இல்லாத விடுமுறை அளிக்கப்படுகிறது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் கணவன் மார்கள்களுக்கு ஒரு வாரம் விடுமுறை தரப்படுகிறது.