தீபம்

சென்னை மாநகரை கட்டிக்காக்கும் சித்தர் ஜீவ சமாதி ஆலயங்கள்!

Madras day 2023

அமிர்தம் சூர்யா
Madras Day 2023

லைநகர் சென்னையில் திரும்பும் திசையெல்லாம் ஆயிரமாயிரம் கோயில்கள் காணப்படுகின்றன. இக்கோயில்களின் இறைவனை தரிசித்த நாம், இறைவனுக்கு நிகராகப் போற்றப்பட்டு பக்தர்களின் குறை தீர்த்த சித்தர்கள் குடிகொண்ட ஜீவசமாதிகளை கண்டு தரிசித்திருக்கிறோமா? சென்னை நகரெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சித்தர் ஜீவசமாதிகள் ஏராளம் உண்டு. இன்றும் சென்னை நகரையும், நகர மக்களையும் கட்டிக்காப்பவைகளாக உள்ள இந்த ஜீவசமாதிகள். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் இந்த சென்னை தின நாளில் வலம் வருவோமா?

கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி - வியாசர்பாடி

‘காரியம்’ என்ற சொல் கரம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. கரம் என்றதும் நினைவுக்கு வருபவர், கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள். சொல்லினால் அறிய முடியாத அந்த சொரூபத்தின் ஜீவசமாதி, சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ளது. அம்பேத்கர் அரசு கல்லூரிக்கு எதிரே, கான்கிரீட் தோட்டங்களுக்கும் குடிசைகளுக்கும் இடையே நீண்ட மதில் சுவர்களுக்குள் மறைந்திருக்கும் பசுமை பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த ஜீவசமாதி.

சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருப்போரூரில், வீர சைவ மரபில் தோன்றியவர் சிவப்பிரகாசம். வெற்றிலை வியாபாரியான இவர், சென்னைக்கு இடம்  பெயர்ந்து பட்டினத்தார் கோயிலில் தாம் அணிந்திருந்த ஆடைகளை களைந்து கோவணம் அணிந்து துறவறம் பூண்டபோது வயது 19. உண்பதற்குக்கூட பாத்திரம் வைத்துக் கொள்ளாமல், மூன்று கவள சோற்று உருண்டைகளை தனது கரங்களிலே வாங்கி உண்டு, கரத்தையே பாத்திரமாக்கிக் கொண்டவர் என்பதால், இவருக்கு மக்கள் சூட்டிய பெயர் கரபாத்திர சுவாமிகள். தன்னிலிருந்து தன்னை விலக்கி இருந்தவர் கரபாத்திர சுவாமிகள். தன்னை ஒரு அஃறிணையாக கருதிக் கொள்வாராம். நான் நாளை வருகிறேன் என்பதை சொல்ல விரும்பினால், ‘அது நாளை வரும்’ என்பாராம். தலையணைக்கு பதில் தன் கையையே வைத்து தூங்கும் சுவாமிகள், சென்னை கடற்கரையில் இருந்த சவுக்குத் தோப்பைக் கண்டதும் (அப்போது மெரீனாவில் தோப்பு இருந்தது) தியானம் செய்ய ஆவல் கொண்டார். மனம் நிர்விகற்ப சமாதிக்கு போய்விட, மறுநாள் கண் விழித்து அப்படியே நடந்து வீடு போனாராம்.

1903ல், வள்ளலார் தங்கிய சென்னை வேப்பேரியில் செங்கல்வராயர் தோட்டத்தில் கிச்சலி மரத்தடியில் யோகமிருந்து திருப்பணிகள் செய்து இருக்கிறார். வேதாந்த சொற்பொழிவுகளும், திருநீராலேயே நோய் நீக்கும் சிகிச்சையையும், ஆன்மிகப் பெரியோர்களை கொண்டு சாது சங்கம் தோற்றுவித்து, மக்களுக்கு ஆன்ம பலம் அளித்தும், தனது இறையனுபவத்தை ‘மன சிந்தாமணி’ என்ற நூலாக வடித்தும் காரியமாற்றி இருக்கிறார். கரபாத்திர சுவாமிகள் 1918ல், ‘சம்போ சம்போ’ என்று மந்திரம் ஓதியபடியே மகேசனை அடைந்தாராம். ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சாமியார் தோட்டம் அவரின் பக்தர்களால் பிரகாசமாகிவிடும். சிவப்பிரகாச சுவாமிகளின் அருள் பிரகாசம் இந்த வடசென்னையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பறவை சித்தர் ஜீவசமாதி - திருவான்மியூர்

னைத்தையும் துறந்த சித்தர்கள், அம்மாவின் நினைவுகளை மட்டும் துறக்கவியலாமல், அம்மாவின் இறப்பில் கதறிக் கதறி அழுத சாட்சியங்கள் உண்டு. உதாரணம் பட்டினத்தார். அம்மா என்ற சொல்லோடு சர்க்கரையும் சேர்த்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு பஞ்சமேது? திருவான்மியூர் மருந்தீசர் ஆலயத்துக்கு இடப்புறம் செல்லும் சாலையில் கலாக்ஷேத்ரா ரோட்டில், உள்ளது, ‘பறவை சித்தர்’ எனும் ஸ்ரீசக்கரை அம்மா ஜீவசமாதி.

பறவை சித்தர் ஜீவசமாதி

பறவை சித்தர் என்று அழைக்கப்பட்ட அம்மாவின் இயற்பெயர் அனந்தாம்பாள். 1854ல் வட ஆற்காடு மாவட்டத்தி லுள்ள போளூரில் தேவிகாபுரத்தில் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே தியானத்திலும் பக்தியிலும் பரவசப்பட்டவர், தனது 20வது வயதில் கணவரை இழந்தார். கணவர் இறந்த 11வது நாள், பலர் தடுத்தும் கேட்காமல் தன் கூந்தல் களைந்து, தண்ணீர் கூட அருந்தாமல் வீட்டின் மொட்டை மாடியில் வெட்டவெளியில் தவம் செய்யத் தொடங்கிவிட்டார். ஒரு மாதம்  அல்ல; ஒரு வருடம் அல்ல; 10 வருடங் கள். பத்தாவது வருட இறுதியில் சூரிய சந்திரர்க்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பரவொளியை கண்டு பரவசமடைகிறார். அந்த தரிசனம் கிடைத்தபின், அஷ்ட மஹா சித்திகளுள் ஒன்றான ‘லஹிமா’ என்ற சித்தியை அடைகிறார். இந்த சித்தி காற்றைவிட லேசாக உடலை மாற்றி ஆகாயத்தில் பறக்க வைக்கும். அனந்தாம்பாள் அப்படி பறந்ததை பார்த்த மக்கள் ‘பறவை சித்தர்’ என்று இவரை அழைக்கத் தொடங்கினர். யாரையும் குருவாகக் கொண்டிராத அம்மா, பிரபஞ்ச குருவான சிவனையும் ஸ்ரீசக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீசக்கர அம்மா என்ற பெயர் தோன்றி, சக்கரை அம்மாவாக மனத்தின் இனிப்பு போல் மருவிவிட்டது.

சக்கரை அம்மாவின் வளர்ப்பு மகன் இறந்தபோது, அம்மா அவர் உடலைப் பார்க்க வராமல் மாடியிலேயே சிரித்துகோண்டே இருந்தாராம். “மகன் இறந்து கிடக்க துக்கமற்று இப்படி சிரிக்கலாமா?” என்று ஒருவர் கேட்க, “சாவே ஒரு மகா பொய். அந்த பொய் என்னைத் துக்கப்பட வைக்குமா? உங்கள் சாவு எனக்கு சிரிப்பை மூட்டுகிறது” என்றாராம். இந்த மனோபாவத்தை, ‘ஸ்தித ப்ரக்ஞ நிலை’ என்பர். இன்ப துன்பத்தை ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கும் சமத்துவ ஞானம் இது. இதே தாய்தான், தன் பக்தர்களை எல்லாம் மருந்தீசர் ஆலயத்துக்கு அழைத்துப் போய் கடவுளிடம் (மூல விக்ரகத்தைப் பார்த்து), “என்னோட வந்த இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று அதிகாரத்தோடு உரக்கச் சொன்னாராம். அப்படிச் சொன்ன பத்தாவது நாளில் பறவை சித்தரின் உடலை விட்டு ஆத்மா சிவனை நோக்கி பறந்தது.

சக்கரை அம்மா இடுப்பில் ஒரு நாகம் எப்போதும் சுற்றி இருக்குமாம். பக்தர்கள் பயப்படும்போது, “செல்லம் இறங்கிப் போடா. பிள்ளைங்க பயப்படுறாங்க” என்றதும், அது நகர்ந்துவிடுமாம். பாம்பு செல்லம்; பக்தர்கள் பிள்ளைகள். இதுதான் அம்மாவின் தாய்மை. இந்த ஆலயத்தில் (ஜீவ சமாதியில்) இங்குமங்கும் அவர் நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள். அவர் இன்னும் இங்கேயே வசிப்பதால், பிள்ளைகளின் குறையை காதுகொடுத்து கேட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறாள் என்பதுதான் இவ்விடத்துக்கு கூடும் பக்தர்கள் சாட்சியம்.

ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் ஜீவசமாதி - சைதாப்பேட்டை

சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகே, ரயில் நிலைய தண்டவாளத்தை ஒட்டியுள்ள தெருவில், சுமார் நூறாண்டுகளைக் கடந்து சூட்சுமமாய் அருள் பெருக்கிக்கொண்டிருக்கிறது சித்தர் ஸ்ரீகுருலிங்க சுவாமிகளின் ஜீவசமாதி. நீங்கள் உங்கள் மனக்குறையை இந்த சித்தரிடம்  சொல்லிவிட்டுபோனால், போகும் வழியிலோ அல்லது உங்கள் வீட்டிலோ திருநீறு வாசம் வந்தால் உங்களை  சித்தர் பின்தொடர்கிறார் அல்லது உங்கள் குறை நீங்கும் என்று பொருள். பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் ஜீவசமாதி

கன்னட தேசத்தில் விப்பிரர் குலத்தில் அவதரித்தவர் குருலிங்க சுவாமிகள் என்கிறது காரணீஸ்வரர் ஆலய தல வரலாறு குறிப்பு. அனைத்து லிங்கங்களையும் தரிசித்து முடித்த சித்தர், காரணீஸ்வரரின் அழகில் மனம் லயித்து இங்கேயே இருந்துவிட்டாராம். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு திருநீறையும் லிங்க வடிவங்களையும் வெறுங்கையில் வரவழைத்து கொடுத்து இருக்கிறார். “எல்லா வியாதிக்கும் ஒரே நிவாரணி திருநீறுதான்” என்பாராம் சுவாமிகள். இவர் தனது பக்தர்களையெல்லாம் அழைத்து, “யாம் 1887ம் வருடம் கார்த்திகை மாதத்தின் நான்காவது திங்கள் நள்ளிரவு 12 மணிக்கு ஜீவசமாதி அடை வோம்” என்று அறிவித்தார். சொன்னபடியே, அதேநேரம்  சிவனோடு சேர்ந்த சித்தர் குரு லிங்க சுவாமிகள்.

தான் சமாதி அடைய காரணீஸ்வரருக்கு எதிரே ஒரு இடம் வேண்டும் என்று, ஒரு செல்வந்தரிடம் பணிவோடு கேட்க, அவர் இந்த சித்தரை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். சில நாட்களில், செல்வந்தரின் குடும்பத்தினர் அனைவரும் வயிற்று வலியில் அவதிப்பட்டனர். எந்த மருத்துவமும் பயனளிக்காமல் போயின. அப்போது, ஒரு வேலைக்காரனிடம் திருநீறு கலந்த நீரை சொம்பில் கொடுத்தனுப்பி, ‘மனிதன் சக மனிதனை அவமானப்படுத்தலே மிகப்பெரிய தவறு. மனிதனுக்குள் இருக்கும் சிவனை நிந்திப்பது பாவமில்லையா? இனி வாழ்நாளில் எந்த, மனுஷனையும் அவமதிக்காதே என்று அவரிடம் சொல்’ என்று சொல்லி நோயைத் தீர்த்தாராம் இந்த சித்தர். சகலத்தையும் பெற முடிந்த சித்தரால், ‘தான் அடக்கமாக’ ஒரு இடத்தை சுலபமாக பெற முடியாதா என்ன? அதற்குள் ஒரு நீதியை, உண்மையை, இறைவன் நிலையைச் சொல்ல பக்தர்களுக்கு புரிய வைக்கத்தான் இந்த சித்து விளையாட்டு. லிங்கம் பிரதிஷ்டை செய்துள்ள ஜீவசமாதி முன்பு, சித்தரின் ஐம்பொன் விக்ரகமும், பின்புறம் அவரின்  கருங்கல் சிலா ரூபமும் அமைந்துள்ளன.

சட்டி சித்தர் -காவாங்கரை

சென்னை புழல் சிறைக்கு அடுத்துள்ள காவாங்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது ‘சட்டி சித்தர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமௌனகுரு கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதி. சட்டி சித்தரின் இயற்பெயர், ஊர் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. திருவொற்றியூர் கடற்கரையில் திசைகளையே ஆடையாகப் போர்த்திக்கொண்ட இந்த சித்தர், நிர்வாணமாகவே சென்னை முழுவதும் சுற்றியபடியே காவாங்கரை வந்திருக்கிறார். மௌனத்தை மொழியாகக் கொண்ட இவரைப் பார்த்துப் பதறிய ஓர் அம்மையார் தன் வீட்டிலிருந்த வேட்டியைக் கொண்டுவந்து அவர் இடுப்பில் சுற்றிய   போது அவர், ‘அம்மா’ என்று அழைத்து அங்கேயே தங்கிவிட்டாராம். எப்போதும் அவர் தனது கையில் ஒரு சட்டியை வைத்து  இருப்பாராம். அதில் தானம் வாங்கிய உணவை, தன்னை நாடி வருபவர்க்கெல்லாம் எடுத்துக் கொடுத்தபடியே இருப்பாராம். வேட்டி உடுத்திய அந்த அம்மையாரின் கணவர் செல்லமாக  ‘சட்டிசோறு கண்ணா’ என்றுதான் அழைப்பாராம். அந்த செல்லப் பெயரிலிருந்துதான் சட்டி சித்தர், கண்ணப்ப  சுவாமி என்று அவரவர் விருப்பம்போல இவரை அழைக்கலாயினர். மௌன குரு என்றும் அழைக்கப்பட்டார் கண்ணப்ப  சுவாமிகள்.

சட்டி சித்தர் -காவாங்கரை

‘சும்மாயிருப்பதே சுகம்.’ அப்படியே மௌனமாய் சும்மாயிருந்த சுவாமிகள், பக்தர்கள் குறையென்று தன்னிடம் முறையிடும்போது மட்டும் பேசி வரம்போல வார்த்தைகளை வழங்கியிருக்கிறார். சித்தத் தன்மையில் இருப்போர் பேசும்போது, ஒருமையில் உரிமையோடு பேசுவார்கள். இவர் ஒருபடி மேலே போய், பக்தர்களை ‘நைனா’ என்றுதான் கூப்பிடுவாராம். சட்டி சித்தரின் சித்து லீலைகளின் பட்டியல் மிக நீண்டது. தன்னைக் காண வந்த பக்தர்களுக்கு மீன் குழம்பு பரிமாறும்போது, சாப்பிட தயங்கிய ஒரு பிராமணரிடம், “நைனா உனக்கு எதுவோ, அதுவே உண்ணக் கிடைக்கும். எதிலும் திணிப்பு எமக்காகாது நைனா” என்றபோதே கத்தரிக்காய், முருங்கைக் காய் வாசம் வீசும்படி  சாம்பார் அவர் சாதத்தின் மீது இருந்ததாம். அதேபோல், நகை செய்ய தன்னிடம் கொடுத்த பணத்தை, வறுமையில் செலவு செய்து விட்ட ஒரு ஆசாரி, அதை திருப்பி தர முடியாமல் மானம் போய்விடுமே, என்று அஞ்சி தற்கொலைக்கு முடிவெடுத்து, கடைசியாக ஒருமுறை கண்ணப்ப சுவாமிகளை அழுதபடி பார்க்க வந்தபோது, “தப்புதான் நைனா... தப்புன்னு தெரிஞ்சி அழுதா, அது தப்பு இல்ல நைனா. இனி தப்பு இல்லாம பொழச்சுக்கோ நைனா” என்று சொல்லி கூழாங்கல் ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளார். அது தங்கமாக மாறியிருந்ததாம்.

இப்படி எண்ணற்ற லீலைகளைப் புரிந்த கண்ணப்ப சுவாமிகளுக்கு, சில மதவாதிகளின் தொல்லை இருந்ததாம். அவரை தீர்த்துக்கட்டப் பின்தொடர்ந்தபோது, சட்டியில் தலையும் மற்ற தனது உடல் பாகங்கள் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கும்படி மாற்றிக்கிடக்கும், ‘நவ கண்ட யோகம்’ கண்டு அவர்கள் அலறி ஓடினார்களாம். 1961ம் ஆண்டு மகாளய அமாவாசையன்று பக்தர்கள் அனைவரையும் அழைத்து, தான் சமாதி அடையப் போவதைப் கூறி, அப்படியே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதற்கு முன்பு, தான் ஜீவசமாதி அடையப்போகும் இடம் யாருக்கு சொந்தமானது; சர்வே எண்; ஆவணத்தில் எத்தனையாவது பக்கத்தில் எந்த குறியீடு போட்டிருக்கும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி, அன்பளிப்பாக நில தானம் வேண்டாம் என மறுத்து, தன் பக்தன் ஒருவன் பெயருக்கு நூறு ரூபாய்க்கு கிரயம் செய்துதரச் சொல்லி, பின்னரே இவ்விடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார் சட்டி சித்தர். இவரது ஜீவ சமாதியின் மீது விநாயகர் சிலை வைத்திருந்ததாகவும், காஞ்சிப் பெரியவரின் ஆலோசனைப்படியே, அச்சிலையை  நீக்கிவிட்டு, கண்ணப்ப சுவாமியின் திருவுருவச் சிலையை கிழக்கு முகமாக மீண்டும் பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாதனுடன் (இறைவனுடன்) சமமாக நாளும் (இன்றும்கூட) வாழ்ந்துக் கொண்டிருக்கும் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதியில், நினைத்த காரியங்கள் வெற்றியோடு முடிய, அவரின் காந்த அதிர்வுகளை கைப்பற்ற இன்றே புறப்படுங்கள்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT