தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூலை அனுமார் கோயில். இந்தக் கோயிலில் அருள்புரியும் அனுமனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணிக்கு மேல் பக்தர்கள் தேங்காய் துருவல் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அனுமனுக்கு இப்படி ஒரு அதிசய அபிஷேகம் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நடைபெறுகிறது. அனுமனுக்குச் செய்யப்படும் இந்த அபிஷேகத்தால் குடும்பத்தில் உள்ள வறுமை மற்றும் கடன்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கேரள மாநிலம், திருச்சூரின் அருகே உள்ள விரிஞ்சாலகுடா என்ற ஊரில் விசேஷமான மகாவிஷ்ணு கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமிக்கு தினமும் கத்தரிக்காய் பொரியல்தான் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இதையே தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது.
காஞ்சி காமாட்சி அம்மனை மகரிஷிகள் பூனை வடிவில் வந்து தினமும் வழிபடுவதாக ஒரு ஐதீகம் அந்தக் கோயிலில் நிலவுகிறது. எனவே, இந்தக் கோயிலில் அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்னர் அம்மனுக்கு நிவேதனம் செய்த பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பூனை ஒன்று அந்தப் பாலை பருகி விட்டுச் செல்கிறதாம். இப்போதும் கூட இந்த நடைமுறை இந்தக் கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அம்பிகையை தரிசிக்க பூனை வடிவில் வரும் மகரிஷிகளே அந்தப் பாலை பருகிச் செல்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
புதுக்கோட்டையில் இருந்து அடிமடம் வரும் சாலையில் உள்ளது சத்திரம் எனும் சிற்றூர். இந்த ஊரில் அருள்புரியும் காமாட்சி அம்மனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களைச் சமைக்க கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறதாம்.