சுனாமி, எரிமலை, நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி, புயல் போன்றவை மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய இயற்கைச் சீற்றங்கள் என்றால் காட்டுத்தீ மக்களை மறைமுகமாகப் பாதிக்கக்கூடியது. காட்டுவளம் அழிக்கப்படுவதும் விலங்குகள் கொல்லப்படுவதும் அதன் நேரடி பாதிப்புகள் என்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதும் மறைமுக பாதிப்புகள்.
மரங்கள் அடர்ந்த காடுகளில் திடீரென ஏற்படும் கட்டுக்கடங்காத தீப்பரவலைத்தான் காட்டுத்தீ என்கி றோம். அண்டார்டிகா தவிர அத்தனைக் கண்டங் களும் காட்டுத்தீயால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
காட்டுத்தீ ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இயற்கை, செயற்கை என்று பிரிக்கலாம்.
காட்டுப் பகுதிகளுக்குள் மிகையான வெப்பம் கொண்ட காற்று வேகமாக வீசும்போது காட்டில் கிடக்கும் காய்ந்த சருகுகள், மரங்கள் தீப்பிடித்துக் கொள்வதுண்டு.
மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று உராய்வதன் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவதுண்டு.
பெரிய பெரிய பாறைகள் கீழே கிடக்கும் மற்ற பாறைகள் மீது சரிந்து விழும்போது உராய்வு ஏற்படும். அதன் மூலம் தீ உருவாகி, அது காட்டுப் பகுதிக்குள் பரவி விடுவதுண்டு.
மின்னல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களும் காட்டுத்தீக்குக் காரணமாகிவிடுகின்றன.
ஊசியிலைக் காடுகளில் உள்ள மரங்களில் இருந்து பிசின் போன்ற பொருள்கள் கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த மரக்கிளைகளின் மீது விழுவது வழக்கம். அதன் காரணமாகவும் தீ ஏற்படுவதுண்டு.
விளைச்சலை அதிகப்படுத்தவேண்டும் என்பதற்காக மரங்களைச் சுற்றியிருக்கும் சின்னஞ்சிறு செடி, கொடிகளைத் தீவைத்துக் கொளுத்துவது காட்டு பகுதி விவசாயிகளின் வழக்கம். அந்தத்தீ சில சமயங்களில் பெரிய அளவில் பரவிவிடும்.
காட்டுப்பகுதிக்குள் சுற்றுலா செல்பவர்கள் புகைப் பிடித்துவிட்டு, நெருப்பை அணைக்காமல் தூக்கி வீசிவிடுவார்கள். அவை அருகில் உள்ள காய்ந்த சருகுகளின் மீது படும்போது தீ ஏற்படுவதுண்டு.
வன விலங்குகள் கிராமப் பகுதிக்குள் நுழை வதைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் தீயைப் பற்றவைப்பார்கள். அது சிலசமயங்களில் பெரிய தீயாகப் பரவிவிடுவதும் உண்டு.
இடமாற்று விவசாயத்துக்காகச் சில சமயங்களில் காட்டுப் பகுதிகளைத் தீவைத்து அழிப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கம். அந்தச் சமயங்களில் காட்டுத் தீ ஏற்படுவதுண்டு.
புவி சூடேற்றம் என்ற க்ளோபல் வார்மிங் காரணமாக வறண்டு போன கோடைக்காலத்தின் அளவு நீண்டுகொண்டே போகிறது. அதன் காரணமாகக் காட்டில் உள்ள மரஞ்செடி கொடிகள் தீக்கு இரையாகி விடுகின்றன.
காட்டுத்தீ ஏற்படுவதற்கு இத்தனைக் காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா, வடமேற்கு சீனா, கனடா போன்ற நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீக்கு மின்னல், எரிமலை வெடிப்பு போன்றவை காரணமாகின்றன. மெக்சிகோ, ஆப்பிரிக்கா, பிஜி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் காட்டுத்தீ ஏற்படு வதற்கு நில மீட்பு நடவடிக்கைகளே அதிகம் காரண மாகின்றன. அதாவது, குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க, காட்டுப் பகுதிகள் தீயைக்கொண்டு எரிக்கப்படுகின்றன. அப்போது ஏற்படும் விபத்துகளே அந்தப் பகுதிகளில் அதிகம்.
காட்டுத்தீ ஏற்படுவதன் காரணமாக ஏராளமான தாவரங்களும் மரஞ்செடி கொடிகளும் அழிக்கப் படுகின்றன. இதன் காரணமாக, இயற்கை உயிர்கள் வேரற்றுப் போகின்றன. குறிப்பாக, மதிப்பு மிக்க மரங்கள் அழிக்கப்படுகின்றன. காட்டில் மரங்கள் குறையும்போது மழைக்கான வாய்ப்புகள் குறைவது இயற்கையான எதிர்வினை. அது மக்களையே பாதிக்கிறது.
சில வீரியம் நிறைந்த காட்டுத்தீயானது மரங்களை அழிப்பதோடு, விதைகளைக்கூட அழித்துவிடக் கூடியதாக இருக்கிறது. காட்டுத்தீயின்போது மரங்கள் மட்டுமல்ல, அரிய விலங்குகள் தொடங்கி பெரிய விலங்குகள் வரை ஏராளமானவை அழிக்கப்படுகின் றன. இதன் மூலம் விலங்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோகிறது.
காட்டையும் காட்டில் கிடைக்கும் பொருள்களையும் நம்பியே வாழ்க்கையை நடத்திவருகின்ற காட்டுவாசிகள், பழங்குடி மக்கள் ஆகியோருடைய வாழ்வாதாரங்கள் காட்டுத்தீ காரணமாகச் சிதைக்கப் படுகின்றன.
ஓசோன் அடுக்கில் துளைகள் ஏற்பட்டு, அதன் காரணமாக கசிவுகள் ஏற்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் வளிமண்டலத்தில் கரியமில வாயு என்ற கார்பன் டை ஆக்சைடு பெருக் கமடைகிறது. அதன் காரணமாக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.
தட்பவெப்ப நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதால் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயிர்வாழ்வதற்கான சூழ்நிலைகள் மோசமடையும்.
காட்டுத்தீ காரணமாக தாவரங்கள் அழிக்கப் படுவது தீமைதான் என்றபோதும் சிலசமயங்களில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கும் காரணமாகி விடுகிறது. உதாரணமாக, காட்டுத்தீ ஏற்படுவதற்கு முன்புவரை பல செடிகொடிகளுக்குச் சூரிய வெளிச்சமே கிடைத்திருக்காது. ஆனால் காட்டுத்தீ காரணமாக நெருக்கடி குறையும். அப்போது சூரிய வெளிச்சம் கிடைக்கப்பெறாத தாவரங்கள் செழித்து வளர்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
காட்டுத்தீயின் காரணமாக காட்டில் உள்ள தேவை யற்ற, பலன் தராத ஊடு தாவரங்கள் அழிக்கப்படு கின்றன. இதன்மூலம் பலன் தரக்கூடிய மற்ற தாவரங்கள் வளர்வதற்கு வாய்ப்புகள் உருவாகின்றன.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தேர்ந்தெடுத்த மரம் அகற்றல் என்ற உத்தி கையாளப் படுகிறது. பழைய, பெரிய மரங்களுக்கு அருகில் இருக்கும் காய்ந்துபோன மரங்களை வெட்டி அகற்று வதன்மூலம், காட்டுத்தீ ஏற்படும்போது பெரிய மரங்கள் பாதிப்படையாது.
காட்டுத்தீயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று மலைவாழ் மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் உரிய விழிப்புணர்வுப் பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன.