முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒரு நாள் திடீரென்று ஒரு உத்தரவை பிறப்பித்தார். அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களும் பெண்களும் அரசுக்கு சுமையாக இருக்கிறார்கள் என்றும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதுமே அந்த அநியாய உத்தரவு. அந்த உத்தரவைக் கேட்ட மக்கள் மிகவும் கவலைக்கு உள்ளானார்கள்.
அரசர் கொடுங்கோலராயிற்றே. அவரை எதிர்த்து யாராவது குரல் கொடுக்க முடியுமா என்ன? அவருடைய வீரர்கள் இந்த உத்தரவை அமல் படுத்த ஆரம்பித்தார்கள். மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர்களை கொல்லத் தொடங்கினார்கள்.
கொடுங்கோல் மன்னரிடம் ஒரு வீரன் பணியாற்றி வந்தான். அவனுக்கு வயதான ஒரு தந்தை இருந்தார். அந்த வீரனுக்கு தன் தந்தையைக் கொல்ல மனம் வரவில்லை. எனவே, அவரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டான்.
இவ்வாறு சில நாட்கள் சென்றன. ஒரு சமயம் பக்கத்து தேசத்து மன்னருடன் போர் மூண்டது. எனவே கொடுங்கோலன் தனது வீரர்களை அழைத்துக் கொண்டு பக்கத்து தேசத்து மன்னரை எதிர்க்கப் புறப்பட்டான்.
தந்தையை ஒளித்து வைத்திருந்த போர் வீரனும் மன்னருடன் பக்கத்து தேசத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. தந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் செல்ல முடியாது. எனவே, அவரையும் தன்னுடன் அழைத்துச் செல்வது என்று முடிவு செய்து ஒரு பையை தயாரித்து அதற்குள் தன் வயதான தந்தையை வைத்து, தனது முதுகில் சுமந்து கொண்டு புறப்பட்டான். போர்களத்தில் ஒரு மறைவிடத்தில் தந்தையை பாதுகாப்பாக இருக்கச் செய்து போர் புரிந்தான். இரண்டு நாட்களில் போர் முடிவிற்கு வந்தது.
அன்று இரவு ஒரு கடற்கரைப் பகுதியில் தங்கிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். மன்னர் உட்பட அனைவரும் அங்கேயே தங்கினார்கள். போரில் வெற்றிவாகை சூடியதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வயதான கிழவர் தனது மகனை அழைத்தார்.
“மகனே, பறவைகள் கடலின் எதிர் திசையில் பரபரப்புடன் பறக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படப்போகிறது. எனவே, இங்கிருக்கும் மன்னர் உட்பட அனைவரிடமும் உடனே பாதுகாப்பான இடத்திற்குச் செல்லச் சொல். இல்லையென்றால், அனைவரும் கடல் நீருக்கு இரையாவார்கள்.”
போர்வீரன் மன்னரைச் சந்தித்து “மன்னரே, இன்னும் சிறிது நேரத்தில் இந்த கடலானது பொங்கி எழப்போகிறது. எனவே, நாம் அனைவரும் இங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் செல்ல வேண்டும். இல்லையென்றால், நாம் அனைவரும் கடல் நீருக்கு இரையாகிவிடுவோம்,” என்றான்.
போர்வீரனின் பேச்சில் மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏனெனில், கடல் மிகவும் அமைதியாக இருந்தது. “கடல் அமைதியாகத்தானே இருக்கிறது. நீ இன்னும் சிறிது நேரத்தில் கடல் பொங்கப்போவதாகச் சொல்லுகிறாய்?”
“மன்னரே! நான் சொல்வது உண்மை. நேரமில்லை. உடனே நாம் புறப்பட்டாக வேண்டும்.”
மன்னரும் போர்வீரனின் பேச்சை நம்பி தளபதிக்கும் போர்வீரர்களுக்கும் கட்டளையிட, அனைவரும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் கடல் பொங்கி எழுந்தது. அந்த இடம் அனைத்தும் நீரில் மூழ்கிப் போனது.
இதை அறிந்த மன்னர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். “வீரனே, நீ எல்லோர் உயிரையும் காப்பாற்றி விட்டாய். உனக்கு கடல் பொங்கப்போவது எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
போர் வீரன் தன் தந்தை சொன்னார் என்பதை மன்னரிடம் சொன்னால் இருவரையும் உடனே கொன்று விடுவார் என்று எண்ணிக்கொண்டு உண்மையை மறைத்தான்.
“வீரனே, உண்மையை உடனே சொல். இல்லாவிட்டால் உனக்கு மரண தண்டனை கிடைக்கும். ” மன்னர் கோபத்தில் இருந்தார்.
வேறுவழியின்றி வீரன் மன்னரிடம் நடந்த உண்மையைச் சொன்னான்.
இதைக்கேட்ட மன்னர் ஆச்சரியப்பட்டார்.
முதியவர் ஒருவரால்தான் தாம் உயிர்பிழைத்தோம் என்பதை மன்னர் நினைத்துப் பார்த்தார். வயதானவர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களுடைய அனுபவ அறிவு நாட்டிற்கு பலவழிகளில் உபயோகப்படும் என்பதை மன்னர் உணர்ந்து, உடனே தன்னுடைய உத்தரவை திரும்பப் பெற்றார்.
வீரனையும் அவனுடைய வயதான தந்தையையும் அழைத்து பரிசுகளைக் கொடுத்து மரியாதை செய்து அனுப்பி வைத்தார். நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.