children story... 
கோகுலம் / Gokulam

திருடன் சன்னியாசி ஆன கதை!

கலைமதி சிவகுரு

ரு நாள் ஒரு திருடன் அரசனுடைய அரண்மனையில் திருடுவதற்காக நுழைந்தான். அப்போது இரவின் நடுஜாமப் பகுதி கழிந்து கொண்டிருந்தது. அரசன் தன் மனைவியிடம், “நம் மகளை ஆற்றங்கரையில் வசித்து கொண்டிருக்கும் சாதுக்களில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அரசன்  சொன்ன வார்த்தைகள் மறைந்திருந்த திருடனின் காதில் விழுந்தன. உடனே அவன், ‘ஆகா, பேஷ்! இப்போது ஒரு நல்ல அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருக்கிறது. நாளைக்கே நான் சாது வேஷம் போட்டுக்கொண்டு ஆற்றங்கரையிலுள்ள சாதுக்களில் ஒருவனாகப் போய் உட்கார்ந்து கொள்கிறேன். ஒருவேளை எனக்கே யோகம் அடித்து இளவரசியே எனக்கு மனைவியானாலும் ஆகலாம்’ என்று நினைத்து அரண்மனையை விட்டு  வெளியேறினான்.

மறுநாள் காலையில் திருடன் தான் திட்டமிட்டபடியே சன்னியாசிக் கோலத்தில் சாதுக்களில் ஒருவனாகப் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் கடந்தது. அரண்மனையை சேர்ந்த அதிகாரிகள் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அங்கே இருந்த சன்னியாசி ஒவ்வொருவரிடமும் மன்னரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கையை அந்தச் சாதுக்களில் ஒருவருமே ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை அரசனுடைய அதிகாரிகள் எவ்வளவோ மன்றாடினார்கள்;  கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்;  பிரார்த்தித்தார்கள். என்றாலும் சாதுக்களில் ஒருவருமே சம்மதிக்கவில்லை. அனைவருமே மறுத்து விட்டார்கள்

தங்களுடைய கோரிக்கையைச் சாதுக்கள் ஏகமனதாக முற்றிலும் நிராகரித்தவுடன், கடைசியில் அதிகாரிகள் சாதுவேஷம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த திருடனிடம் வந்தார்கள். அவனிடமும் தங்களுடைய கோரிக்கையை எடுத்துச் சொல்லிப் பிரார்த்தித்தார்கள். திருடன் பதில் பேசவில்லை; மௌனமாக உட்கார்ந்திருந்தான்.

அதிகாரிகள் அரண்மனைக்குத் திரும்பி, “ஒரு வாலிப சன்னியாசி அங்கே இருக்கிறார். ஒரு வேளை அவர் நமது கருத்துக்கு இணங்குவார் போலிருக்கிறது. அங்குள்ள மற்றச் சாதுக்கள் அனைவருமே நம் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்கள்” என்று அரசனிடம் செய்தியைத் தெரிவித்தார்கள்.

பிறகு அரசனே கபட சன்னியாசியிடம் நேரில் சென்றான். தன் மகளை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்; திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனப்பூர்வமாகவும், பணிவாகவும் அந்தக் கபட சன்னியாசியிடம் வேண்டினான்; பிரார்த்தித்தான்.

அரசனே நேரில் வந்ததையும், தன் முன்னால் பணிந்து நின்று உள்ளம் தோய்ந்து வேண்டியதையும் கண்டதும் திருடனின் மனம் மாறிவிட்டது. ‘ஆகா! நான் சாது அல்ல! சாதுவின் உடையை மட்டுமே அணிந்து கொண்டிருக் கிறேன். அது காரணமாக அரசனே என்னைத்தேடி நேரில் வந்திருக்கிறார். என் முன்னால்  பணிந்து நின்று வேண்டுகோள் விடுக்கிறார். நயந்து பிரார்த்திக்கிறார். நான் உண்மையிலேயே சாதுவாகி விட்டால் இதை விடவும் உயர்ந்தவை எனக்கு எவ்வளவோ காத்திருக்கும் அல்லவா?” என்ற சிந்தனைகள் திருடனின் உள்ளத்தில் உதயமாயின.

அந்தச் சிந்தனைகள் அவனது உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து அவனுடைய மனப்போக்கையே முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டன. போலி வேடம் பூண்டு மன்னன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அந்த நிமிடமே அவனது உள்ளத்தை விட்டு அகன்றது. அந்த நாள் முதற்கொண்டு தன் பழைய வாழ்க்கை முறைகளை அடியோடு நீக்கவும், உண்மையான சாதுவின் உயர்ந்த வாழ்க்கை வாழவும் அவன் கடுமையாக முயற்சி செய்தான். பிறகு அவன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவனுடைய உண்மையான முயற்சி நல்ல பலனை விளைவித்தது. பிற்கால வாழ்க்கையில் அவன் அக்காலத்தில் விளங்கிய உயர்ந்த தபஸ்விகளில் ஒருவன் ஆனான். மகானின் நிலையை அடைந்த அவனை உலகமே பாராட்டித் தலை வணங்கியது.

போலிவேடம் சில சமயங்களில் எதிர்பாராத நன்மையைத் தருகிறது.

பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளின் முழு விவரம்!

வேளாண் சுற்றுலாவின் அவசியம் அறிவோமா!

நம்மோடு சிறுகச் சிறுக இணைந்து விட்ட சின்னத்திரை! ஆனால்..!

The Amazing World of the Leafcutter Ants: A Kid’s Adventure!

விமர்சனம்: ‘மெய்யழகன்’ - இவனை ரசிக்க பொறுமை  வேண்டும்!

SCROLL FOR NEXT