இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்களின் ஆட்சியினின்று இந்தியா சுதந்திரம் அடைந்து ஆகஸ்ட் 15 அன்று 76 வருடங்கள் முடிவடைகின்றன. இந்த வருடம் ஆகஸ்ட் 15, இந்தியாவின் 77வது சுதந்திர தினம். இந்த நாளில் வேறு சில நாடுகளும் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. அந்த ஐந்து நாடுகள் எவை என்று பார்ப்போம்.
1.லிச்சென்ஸ்டீன் – ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய பணக்கார நாடு. இந்த நாடு ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்து, ஆகஸ்ட் 15, 1866 ஆம் வருடம் சுதந்திரம் அடைந்தது. ஆனால், 1940ஆம் வருடம் தான் ஆகஸ்ட் 15, “தேசிய நாள்” என்று அறிவித்துக் கொண்டாடி வருகிறார்கள்.
2. வடகொரியா,
3. தென்கொரியா – கொரியா முழுவதும் ஜப்பான் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் கூட்டமைப்பின் நேசநாடுகள் படையெடுப்பால், 1945ஆம் வருடம், ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் நேசநாடுகளிடம் சரணடைவதாக அறிவித்தது. இதனால் கொரியா ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. கொரியாவில் புகுந்த ரஷ்யப் படைகள் கொரியாவின் வடபகுதியை பிடித்துக் கொள்ள, அமெரிக்கப் படைகள் கொரியாவின் தென்பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கொரியா தென்கொரியா, வடகொரியா என்று இரு நாடுகளாகப் பிரிந்தது.
தென்கொரியா, இந்த நாளை, “ஒளி திரும்பிய நாள்” என்று கொண்டாடுகின்றது. வடகொரிய மக்கள், இந்த நாளை, “தந்தையர் நாட்டின் விடுதலை நாள்” என்று அழைக்கின்றனர். பல நாடுகள், இந்த நாளை “ஜப்பானிடமிருந்து விடுதலை அடைந்த நாள்” என்று அனுசரிக்கின்றனர்.
4. காங்கோ-பிரஸ்ஸாவில்லே என்ற காங்கோ குடியரசு 80 வருடமாக பிரான்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது. 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரான்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்த நாட்டின் அருகில், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளது.
5. பஹ்ரைன் – இந்த நாடு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்தது. ஐக்கிய நாடுகள் உத்தரவின் படி, இந்த நாட்டு மக்களிடம் கணக்கெடுப்பு நடந்தது. இரான், இதனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், மக்கள் விருப்பப்படி, 1971ஆம் வருடம், ஆகஸ்ட் 15 அன்று பஹ்ரைன், சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அமீர் என்று சொல்லப் படுகின்ற பஹ்ரைன் நாட்டின் முதல் சிற்றரசர் பதவியேற்றுக் கொண்ட டிசம்பர் 16, பஹ்ரைன் நாட்டின் “தேசிய நாள்” என்று அனுசரிக்கப்படுகிறது.