கல்கி

அறிவியல் நாயகனின் இலக்கியமும் சமூக அக்கறையும்!

ஜுலை 27 ஏ பி ஜே அப்துல்கலாம் நினைவு தினம்!

சேலம் சுபா

ந்தியாவின் ஏவுகணை நாயகன் ஏ பி ஜே அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று அவரின் எண்ணங்களை நினைவு கூர்ந்து பெருமிதம் கொள்வோம். தமிழகத்தில் பிறந்து கல்வி பயின்று விஞ்ஞானியாக ஏவுகணையை விண்ணில் ஏவி இந்தியாவை அணு ஆயுதத்தில் வல்லரசாக உலகுக்கு அடையாளப்படுத்தி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் பணியாற்றி இளைஞர்களின் எழுச்சி மிகு தன்னம்பிக்கை நாயகனாக அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து வாழ்பவர் அப்துல்கலாம் அவர்கள்.

மதம் இனம் பாகுபாடற்று இரக்க மனமும் மற்றவர் மீது நேயமும் உடைய இவர் கடும் உழைப்பாளியாக எடுத்த காரியத்தில் முழுமூச்சாக உழைக்கும் திறன் கொண்டவர். கலாம் சிறு வயதில் இருந்தே அறிவியலிலும், பொறியியலிலும் மட்டும் ஆர்வம் காட்டவில்லை. தாய்மொழியான தமிழிலும் தீவிர பற்றுக் கொண்டவராக இருந்தார். அதனால் படிக்கும் காலத்தில் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரது ஆர்வத்தைக் கண்ட பேராசிரியர்களும் இவருக்கு வெகுவாக ஊக்கம் தந்தனர். ஒருமுறை இவர் பொறியியல் பயின்ற எம் ஐ டி நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆகாய விமானம் கட்டுவோம் எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததுடன் மிகப் பிரபலமான வார இதழிலும் பிரசுரம் ஆகியுள்ளதைக் குறிப்பிட வேண்டும். இப்படி நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் தனது இரு கண்களாக பாவித்தவர் கலாம் அவர்கள் .

கலாம் அவர்கள் கட்டுரைகளை விட கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தாய்மொழியான தமிழிலும் படித்த மொழியான ஆங்கிலத்திலும் எழுதும் திறனைப் பெற்றவர். மனதில் எழும் கவிதையை இடம் பொருள் பார்காமல் இருக்கும் இடத்தில் கிடைப்பதை வைத்து எழுதுவார் .ஒரு சமயம் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது மனதில் கவிதை வலம் வர உடனே தன்னிடம் இருந்த விமான பயணச்சீட்டு பின்புறத்தில் அதை எழுதி உள்ளார். தான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.

எழுதுவதில் ஆர்வம் கொண்டவருக்கு படிப்பதில் ஆர்வம் இல்லாமலா இருக்கும்? ஆம். எந்நேரமும் புத்தகம் வாசிப்பதில் அலாதிப் பிரியம் கொண்ட இவர் புராணங்கள், இதிகாசங்கள், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், தமிழ் இலக்கியங்கள், பாரதியார் பாடல்கள், திருக்குறள் என அனைத்தையும் கரைத்துக் குடித்தவர். அறிவியல் நூல்களுடன் ஆன்மீக நூல்களும் வாசித்தவர்.

இவர் எழுதிய அனைத்து நூல்களும் புகழ்பெற்றவையே எனினும் அக்னி சிறகுகள், இந்தியா 20 20, எழுச்சி தீபங்கள் ஆகிய நூல்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இக்கால மற்றும் வருங்கால இளைஞர்களுக்கு உதவும் எழுச்சிமிகு கருத்துகளை அடக்கி மக்களைக் கவர்ந்தவை.

ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெற்ற பின் இந்தியாவின் வருங்காலத் தூண்களான பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியரிடம் கலந்துரையாடி அவர்களின் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து வருவதையே தனது கடமையாக எண்ணி வாழ்ந்தவர். இது போன்ற ஒரு தன்னம்பிக்கை உரையின்போது மயங்கி விழுந்து இன்னுயிரை நாட்டுக்காக அர்பணித்தவர். இவர் கலந்து கொண்ட கல்லூரி ஒன்றில் கனவு காண வேண்டும் என்று எப்போதும் சொல்லி வருகிறீர்கள் ஏன் கனவு காண வேண்டும் ? எதற்காக கனவு காண வேண்டும் ? என்று ஒரு மாணவி கேள்வி எழுப்ப அதற்கு கலாம் அவர்கள் “ கனவு காண்போம் , கனவுகள் எண்ணங்களாக மாறும் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் அதன் மூலம் முன்னேற்றங்கள் அடைய முடியும் என்று தெளிவு படுத்தியுள்ளார். இன்றும் கலாம் அவர்களின் வழியில் கனவு கண்டு அதை தினம் முயன்று சாதித்துக் கொண்டுள்ள பல இளைஞர்களை அறிவோம்.

இலக்கியம் மட்டுமல்ல, சமூகம் மீது அக்கறை கொண்ட கலாம் இயற்கையை பெரிதும் நேசிப்பவராக இருந்தார். அதற்கு காரணமாக அவர் சொல்வது இதுதான் தன் மீது கற்களை வீசினாலும் கிளைகளை வெட்டினாலும் அது பற்றிக் கவலைப்படாமல் தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வது போல தம்மை நோக்கி வரும் அனைவர்க்கும் நிழல் தந்து பசிப்போருக்கு பழங்கள் தரம் மாமரம் போல் எனக்குத் துணை நிற்கும் நண்பன் இயற்கைதான்”  இயற்கையை நண்பனாக நேசித்தவர் மரக்கன்றுகளை நடுவதில் பெரும் ஆர்வம் காட்டி தான் செல்லும் இடங்களில் எல்லாம் மரங்கள் நடுவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு தந்து தன்னைப் பலரும் பின்பற்றும்படி மாற்றினார்.

அக்னி ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபோது அப்போது மத்தியபாதுகாப்பு அமைச்சராக இருந்த கே சி பந்த் கலாமிடம் “நாம் இந்த வெற்றியை வெகு சிறப்பாக  கொண்டாட வேண்டும் அதற்காக உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் கேளுங்கள் தருகிறோம்” என்று கேட்க கலாம் “எங்கள் அறிவியல் ஆராய்ச்சி வளாகத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.

இப்படி இலக்கியம் அறிவியல் ஆன்மிகம் சமூகம் என அனைத்திலும் சிறந்து மனிதப் பண்பாளராக விளங்கிய கலாமிடம் ஒரு மாணவி கேட்ட கேள்வி “ மனிதன், விஞ்ஞானி, தமிழன், இந்தியன், இந்த அடிப்படையில் உங்களை நீங்களே வரிசைப்படுத்துங்களேன்” அதற்கு கலாம் அளித்த பதில் “மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி உள்ளனர்” என்பதே.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாதியுங்கள். ஆனால் மனிதத் தன்மையை இழந்து விடாதீர்கள் என்று இந்த பதில் மூலம் நமக்கு புரிய வைக்கும் மனிதரில் சிறந்த மாணிக்கமாக உலகப்புகழ் பெற்ற அப்துல் கலாமைப் போற்றி அவர் வழியில் இயற்கையையும், இலக்கியத்தையும் பேணுவோம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT