கல்கி

பாரத் கேசரி யார்? காந்திஜியின் அரசியல் குரு யார்? தெரிஞ்சுக்கலாமா?

77வது ஆண்டு இந்திய சுதந்திர தினம் - தெரிந்த பெயர்கள், தெரியாத தகவல்கள்!

கோவீ.ராஜேந்திரன்

ஆபத்து வந்த வழி

டெல்லியை அப்போது மொகலாய மன்னர் ஜஹாங்கிர் ஆண்டு கொண்டிருந்தார். 1615 ம் ஆண்டு லண்டனி லிருந்து தாமஸ் ரே என்ற பிரிட்டிஷ்காரர் டெல்லிக்கு வந்தார். ஜஹாங்கீரை சந்தித்து ஆங்கிலேயர் வியாபாரம் செய்ய அனுமதி பெற்றார். ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள்.  தங்கள் பாதுகாப்புக்கு  ஒரு ராணுவத்தை உருவாக்கினர். அப்போது இந்திய சமஸ்தானங்களுக்கு இடையே போரிட்டுக்கொண்ட மன்னர்களுக்கு அந்த ராணுவத்தை கொடுத்து உதவினர்.

அது, குரங்கு அப்பம் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. 1803ம் ஆண்டு டெல்லியும், ஆக்ராவும் ஆங்கிலேயர் வசமாயிற்று. அதுதான் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்க அவர்கள் போட்ட பிள்ளையார் சுழி. அதன்பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

 தண்டனை தந்த பாடல்

‘என்று தனியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடலை பாரதியார் தன்னுடைய ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டார். இதன் அரங்கேற்றம் சென்னை மூர் மார்க்கெட்டில் 1908ம் ஆண்டு நடந்தது. அப் பாடலுக்காக ஆங்கிலேய அரசு பாரதியாருக்கு தந்த பரிசு ஐந்து வருடக்கடுங்காவல் தண்டனை.

நேதாஜி வாள் உறையில் இருந்த மண்

ந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்த்து போராடி கையில் இந்திய மண்ணுடன் ரங்கூன் சிறையில் மரணமடைந்தவர் முகலாய மன்னர்களின் கடைசி வாரிசு டில்லி பகதூர் ஷா. 1826ல் அவருக்கு ரங்கூனில் கல்லறை எழுப்பப்பட்டு,  அதன் மீது அவர் வைத்திருந்த ஒரு பிடி இந்திய மண் தூவப்பட்டது.

ரங்கூன் வந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்த மாவீரன் கல்லறையை முத்தமிட்டு வணங்கினார். பின் அதன் அருகில் இருந்த ஒரு பிடி மண்ணையும் எடுத்தார். அதைத் தன் உறைவாளின் கைப்பிடியினுள்  வைத்து வாழ்நாளெல்லாம் பாதுகாத்துப் போற்றினார்.

பாரத் கேசரி யார் தெரியுமா?

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுருந்த லாலா லஜிபதிராய் முதன்முதலாக காந்திஜியை சந்திக்கச் சென்றார். ஏற்கனவே காந்தியடிகள் லாலா லஜிபதிராயின் வீர தீர செயல்களையும் அவரது நேர்மையை பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் தம் பேச்சின் இடையே "நீங்கள் பஞ்சாப் கேசரி அதாவது ‘பஞ்சாப் சிங்கம்'” என்றார்.

அதற்கு லாலா லஜிபதிராயோ "உங்கள் சொல்படி நான் பஞ்சாப் கேசரியாக இருந்தால்  நீங்கள் எங்கள் பாரத் கேசரி (பாரத் சிங்கம்)" என்றார்.

 ஒளிய பாதுகாப்பான இடம்

ந்தமான் சிறையிலிருந்து மெயின்லாண்டு சிறைக்கு மாற்றும்போது ஓடும் ரயிலில் இருந்து தப்பியவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பிரதிவி சிங் ஆசாத். இவர் தப்பியவுடன் நேராக மும்பை சென்று நாராயண் சாவர்க்கரை சந்தித்தார். அவர் உடனடியாக ஆசாத்யை தன்னுடைய  நண்பர் வீட்டில் மறைவாக தங்க வைத்து விட்டு "இனிமேல் உங்களை போலீஸ் பிடிக்காது. அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இதை விட பாதுகாப்பான இடம் உங்களுக்கு வேறு கிடையாது" என்றார். பின்னர்தான் தெரிந்தது அந்த இடம் ஒரு பெரிய போலீஸ் ஸ்டேஷன் மேலே இருந்தது என்று!

சரோஜினி நாயுடு வர்ணித்த மிக்கி மவுஸ்!

விக்குயில் சரோஜினி நாயுடு தமது 23ம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். அவர் எழுதிய விடுதலைக் கவிதைகளில் ‘எழுக அன்னையே....’  என்ற ஆங்கில கவிதை பிரசித்தி பெற்றது. மிக்கி மவுஸ் என்று காந்திஜியை செல்லமாக வர்ணித்தவர் சரோஜினி நாயுடு. ஏனெனில் மிக்கி மவுஸ் காதுகளை போல் காந்திஜியின் காதுகளும் அளவில் பெரியதாக இருந்ததால்தான். சுதந்திரத்திற்காக போராடிய சரோஜினி நாயுடுதான் காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர்.

 போலீசுக்கு லட்டு

ட மாநிலத்தில் சுதந்திரத்திற்காக போராடிய சந்திரசேகர் ஆசாத் அலகாபாத்தில் அவரது நண்பர் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிந்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். விபரீதத்தை உணர்ந்த நண்பரின் மனைவி தன் சேலையை கிழித்து ஆசாத்தை அப்படியே தலைப்பாகையாக கட்டிக்கச் சொல்லி அவர் கையில் ஒரு கூடையை கொடுத்து தன்னை பின்தொடர்ந்து வருமாறு கூறினார்.  இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்

போலீசார் வழிமறித்தனர். அப்போது அந்தப் பெண் "வேலைக்காரா! சீக்கிரம் லட்டுகளை எடுத்து வா. இன்று ரக்க்ஷாபந்தன். என் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும். சீக்கிரம் வா" என்றார். பின்னர் தன்னை சூழ்ந்த போலீசார்களுக்கும் லட்டுகளை கொடுத்து தப்பித்தார். அன்று தப்பிக்க வைத்த சந்திரசேகர் ஆசாத் தான் பிரிட்டிஷாருடன் நேருக்கு நேர் சண்டையிட்டு குண்டுகள் தீர்வது தெரிந்து கடைசி குண்டால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டவர்.

 காந்திஜியின் அரசியல் குரு

ந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கு செல்லாமல் போராடியவர்களில் ஒருவர் கோபால கிருஷ்ண கோகலே . இவரையே தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர் காந்திஜி. 1914 ம் ஆண்டு கோகலே மரணமடைந்தார். அந்த துக்கத்திற்காக 'ஒராண்டுக்கு காலில் செருப்பு அணிய மாட்டேன்' என்று சபதம் செய்து அதை நிறைவேற்றியும் காட்டினார் காந்திஜி.

 பெரியாருக்கு வந்த கடிதம்

ரோடு பெரியார் அருங்காட்சியகத்தில் ஒரு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. தன் மகன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும், மேற்கொண்டு படிக்க வைக்க இயலாது என்றும், போலீஸ் வேலையில் சேர்க்க யாரையேனும் சிபாரிசு செய்யச் சொல்லியும் பெரியாருக்கு 1936ம் ஆண்டு ஒருவர் எழுதிய கடிதம் அது.

கடிதம் எழுதியது யார் தெரியுமா? 1906 அக்டோபர் 16ம் தேதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை திருநெல்வேலியில் துவக்கிய வ. உ. சிதம்பரம்.

 கொடிகாத்த குமரன்

ந்திய விடுதலைப்போராட்டத்தில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று கொடி காத்த குமரன். அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை என்றாலும் இவர் திருப்பூர் குமரன் என்றே அழைக்கப்படுகிறார். காரணம்-இவர் திருப்பூர் தேச பந்து வாலிபர் சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் கலந்துகொண்டு தேசியக் கொடியை கையில் ஏந்தி வீருநடை போட்டுச் சென்றார்.  அப்போது போலீசார் தாக்கியதில் மரணமடைந்தார். ஆனாலும் தாய்நாட்டின் கொடியை தரையில் விழாமல் அவர் கையில் பிடித்திருந்ததுதான் அந்த பெயருக்கு வழி செய்தது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT