Idli vs Dosa 
மங்கையர் மலர்

10 ருபாய் 100 ரூபாயாகும் தந்திரம்... என்ன மர்மம்னு தெரிஞ்சா சொல்லுங்களேன் பாஸ்!

தா.சரவணா

ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை நமக்கு விடை தெரியாத கேள்வி என்றால், இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதுதான்.

ஒரு கரண்டி மாவில் ஒரு இட்லி சாதாரண கடையில் 5 ரூபாய். பெரிய ஹோட்டல்களில் 10 ரூபாய். அதே மாவில் ஒரு தோசை சாதாரண கடையில் 40 to 50 ரூபாய். பெரிய ஹோட்டல்களில் 100 to 150 ரூபாய். அதாவது ஒரு கரண்டி மாவு இட்லியாகும் போது 10 ரூபாய் ஆகுது. அதே ஒரு கரண்டி மாவில் சுடுற தோசை 100 ஆக மாறும் தந்திரம் தான் பலருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.                           

சமீபத்தில் காணொளி ஒன்றில் பிரபல தனியார் டிவி ஆங்கர் ஒருவர் ஹோட்டல் முதலாளிகளுடன் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது இது தொடர்பாக பல்வேறு வழிகளில் மாற்றி மாற்றி அவர் கேள்வி கேட்டாலும், அவர்களில் ஒருவர் கூட சரியான காரணத்தை கடைசி வரை சொல்லவே இல்லை.

ஒரே பதில் ஹோட்டல் செலவு, ஆள் சம்பளம், கரண்ட் பில் இதைத்தான் திரும்பத் திரும்ப பதிலாக கூறினர். சாதாரணமா நம் வீட்டில் ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து போடுவோம். உதாரணத்துக்கு அரிசி 60 ரூபாய், உளுந்து 38 ரூபாய் ஆக மொத்தம் 98 ரூபாய். அதில் போடுற வெந்தயம் ஒரு 2 ரூபாய் என வைத்துக் கொள்வோம். மொத்தம் 100 ரூபாய். இத்துடன் தேங்காய் சட்னி, கொஞ்சம் தக்காளி சட்னி கொஞ்சம் சாம்பார் வைத்தால் அதற்கு ஆகும் செலவு  50 ரூபாய் என வைத்துக் கொள்வோம். எண்ணெய் ஒரு கால் லிட்டர் ஆகும் என்றாலுமே, எல்லாம் சேர்த்து 200 ரூபாய்.

இப்போது இந்த ஒரு கிலோ அரிசியில் நாம் எத்தனை தோசை ஊற்றுவோம்? எத்தனை பேர் சாப்பிடுவோம்? எத்தனை நாள் வைத்து சாப்பிடுவோம்? உங்க மனக்கணக்குக்கே விடுறேன். 

மேலும் அந்த முதலாளிகள் கூறியது ரோட்டு கடை நடத்துபவர்களுக்கு லாபம் கிடைக்குமாம். பெரிய ஹோட்டல்ல லாபமே பார்க்க முடியாதாம். அப்ப லாபம் தான் கிடைக்கலையே, நீங்க ரோட்டு கடையே நடந்தலாமே அதுல தான் லாபம் வருதில்ல? இப்படியும் ஒரு கேள்வி எழுந்தது . ஆனா சரியான பதில் இல்ல. எதுக்கு பெரிய ஹோட்டல் கட்டி லாபமே வராம வியாபாரம் பண்றீங்கன்னு நிகழ்ச்சியை பாத்துட்டிருந்த என் மனதில் லேசான கோபம் எழுந்தது. 

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. கண்டிப்பாக புத்திசாலிகள் பெரிய ஹோட்டலுக்கு போகப்போவதில்லை. ஆடம்பரத்துக்காக வாழ்கின்றவர்கள் மட்டும்தான் பெரிய ஹோட்டல் போகிறார்கள்.

ஆனாலும் கடைசியா ஹோட்டல் முதலாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி... இப்பவாவது அந்த ஒரு கரண்டி மாவு ரகசியத்தை சொல்லுங்க பாஸ்...                                     

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT