* தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள அனுமார் கோவிலில் பத்து கரங்களுடன் அனுமன் காட்சி தருகிறார். அதோடு இவர் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்கள் கொண்ட ஆஞ்சநேயராகவும் விளங்குகிறார். மேலும் கோவில் கர்ப்ப கிரகத்தில் சஞ்சீவி மலையையும், கதையையும் கைகளில் தாங்கி, வீர ஆஞ்சநேயராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
* புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள அழகிய பெருமாள் கோவிலில், வட திசையில் அனுமன் சந்நிதி உள்ளது. இவரை கல்யாண அனுமனாக கொண்டாடுகிறார்கள். ஏனெனில் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு ரோஜா பூ மாலை சூட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கை.
* கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் ராமர் சன்னிதி முன்பு அனுமன் சிலை உள்ளது அவரது உயரம் 22 அடி எப்போதும் வெண்ணெய்க்காப்பில் இருப்பார். இவருக்கு சாற்றும் வடை மாலை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போவதில்லை. கூப்பிய கரங்களுடன் காட்சி தரும் இந்த விஸ்வரூப திருக்கோலம், சீதை அசோகவனத்தில் இருந்தபோது காட்டியதாம்.
* கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள மாருதி கஜானனன் கோவிலில் அனுமனுக்கும், விநாயகருக்கும் முதல் நாள் சூட்டப்படும் பூமாலையை உதிர்த்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
* கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ரயில்வே ஸ்டேஷன் ரோடில் உள்ள அனுமன் கோவிலில் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களின் நீரையும், தேங்காய் வில்லைகளையும் பிரசாதமாக வழங்குகின்றனர்.
* அயோத்தியில் உள்ள அனுமார் மந்திரில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* திண்டுக்கல் மாவட்டம் அனைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நவகிரகங்கள் வாயு வடிவில் உள்ளன. அனுமனின் வாலில் நவகிரகங்கள் ஐக்கியமானவை என்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சிலைகள் இல்லை.
* தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பீமாய் கோவிலிலும், ஜாவாவில் உள்ள பிரம்பானம் கோவிலிலும், கம்போடியாவில் உள்ள கோவில்களிலும் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. அங்கோலா பண்டேஸ்ரி கோவில் நுழைவு வாயிலில் அனுமன் சிலை உள்ளது.