மங்கையர் மலர்

துணிச்சல் மிகு தமிழகத்து வீராங்கனை!

77வது ஆண்டு இந்திய சுதந்திர தினம்

மும்பை மீனலதா

ந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும், தமிழகத்தின் அமைச்சர் பதவி வகித்த பெருமைக்குரிய முதல் பெண்மணி.

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு உப்புக் குவியலின் மீது படுத்து மறியல் செய்கையில், கைதாகி சிறைச் சாலைக்குச் சென்ற முதல் பெண்மணி.

அந்நியத்துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகையில், சிறைத்தண்டனை பெற்றதோடு அபராதமும் கட்டிய பெண்மணி.

சாதிமத வேறுபாடுகளைக் கடந்து, அன்றே மக்களுக்குத் தொண்டாற்றிய பெண்மணி.

தீண்டாமைக்கெதிராக புயலென புறப்பட்ட பெண்மணி.

இவர் உருவம் கொண்ட ரூபாய் இரண்டு பெறுமானமுள்ள தபால் தலை 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

எக்மோர் சென்னையிலுள்ள மார்ஷல் ரோடிற்கு இந்த முதல்பெண்மணியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

யார் இவர்?

வர்தான் தன்னம்பிக்கையும், தைரியும் பொதுநல நோக்கும் கொண்ட துணிச்சல் மிகுந்த ‘ருக்மணி லட்சுமிபதி’ இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்துப் பெண்மணிகளுள் மிகத் துணிச்சலான வீராங்கனை.

வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்த ருக்மணியின் தாத்தா ராஜா டி ராமராவ் பெரும் நிலச்சுவான்தார் ஆவார். வீணை தனம்மாளிடம் வீணை பயின்ற இவர் கோல்கொண்டா கோகினூர் எனக் கூறப்படுபவர்.

கல்வி – காதல் – திருமணம்

ருக்மணியின் தந்தையார் அவருக்கு பால்ய விவாஹம் செய்ய ஏற்பாடு செய்கையில், தந்தையின் நண்பராகிய தேசபக்த போராளி வீரேசலிங்கம் பந்துலு அதைத் தடுத்து நிறுத்தி ருக்மணியைப் படிக்க வைக்க வற்புறுத்த, பள்ளிக்கு அனுப்பப்பட்டார். திடீரென காலில் ஏற்பட்ட சொறி சிரங்கிற்கு வைத்தியம் செய்துகொள்ள குடும்பத்திற்கு நெருங்கிய டாக்டரான லட்சுமிபதி அவர்களின் மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

முதல் மனைவியை இழந்து குழந்தைகளுடன் வசித்து வந்த டாக்டரின் முற்போக்கான சிந்தனைகளில் கவரப்பட, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.

தந்தையாரின் எதிர்ப்பையும் மீறி காதல் தொடர்ந்தது. தந்தையாரின் மரணத்திற்குப் பின், தாயாரின் மறைமுக ஆதரவுடன் ருக்மணி, டாக்டரைத் திருமணம் செய்துகொண்டார்.

காதல் கணவர் அளித்த ஊக்கம் பாராட்டுக்குரியதாகும்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவோலங்கி இவ்வையம் தழைக்குமாம்!

பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் போந்து

நிற்பது தாய் சிவசக்தியாம்!”

என்கிற கவிபாரதியின் கூற்றுப்படி, டாக்டர் லட்சுமிபதி, அன்பு மனைவி ருக்மணியை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்ததோடு, போராட்டங்களில் பங்கேற்கவும் ஊக்குவித்து, உறுதுணையாக விளங்கினார்.

தீண்டாமையை விலக்கும் பொருட்டு, அரிஜனப் பெண்ணொருவருக்கு சமையல் செய்யக் கற்றுக்கொடுத்து, தனது வீட்டியேயே சமையல் வேலைகளுக்கு உதவியாக வைத்துக்கொண்டார் ருக்மணி. மேலும், மதம் மற்றும் கடவுளின் பெயரால், பெண்கள் சந்தித்து வந்த தேவதாசி முறையை எதிர்த்தார். இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் தொண்டாற்றி, அவர்களது அன்பையும், மரியாதையையும் பெற்றார்.

தனக்கென வாழாத தியாகி

ப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம், தனது குழந்தையின் உடல்நலம் சரியாக இல்லையென்று தகவல் வந்தபோது, போராட்டம் முடிந்தபிறகுதான் வீடு திரும்ப முடியும் என்று கூறியவர். விடுதலைப் போராட்டப் பணிகள் மற்றும் சமூக நலப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டு தன்னலமற்று செயலாற்றியவர். பல்வேறு பதவிகளை ஏற்று திறம்பட வகித்தபோதும், பணிவுடன் செயல்பட்டவர்.

‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற!’

எனும் திருக்குறளுக்கேற்ப தாய்நாட்டிற்கும், மற்றவர்களுக்கும் தன்னலம் பார்க்காது, முழுமையாக தன்னை அர்ப்பணித்து, இவ்வுலகினும், வானுலகிலும் நிலைத்து நிற்கும் பேறு பெற்ற ருக்மணி லட்சுமிபதி, போற்றுதற்குரிய முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவரை நாம் சுதந்திர தினமன்று நினைவு கூறுவோமாக! மேலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட அத்தனை வீரர்களையும், வீராங்கனைகளையும் வாழ்த்தி வணங்குவோம் இந்நன்னாளில்!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT