Kambar and Avvaiyar 
மங்கையர் மலர்

கம்பர் ஆரம்பித்து அவ்வையார் முடித்து வைத்த பாடலின் சுவாரசிய பின்னணி தெரியுமா?

ராதா ரமேஷ்

'கம்பன் வீட்டுக்கட்டுத் தறியும் கவி பாடும்' என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அன்றைய காலகட்டங்களில் கம்பர் அந்த அளவுக்கு கவித்திறமையில் புலமை பெற்றவராக இருந்து வந்துள்ளார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கம்பர் ஒரு பாடலின் பகுதியை மட்டும் பாடிவிட்டு மீதியை பாடாமல் விட்டு விட்டாராம். அந்தப் பாடலின் மீதி  வரிகளை அவ்வையார் பாடியுள்ளார். அவ்வாறு இருவராலும் பாடப்பட்ட அந்தப் பாடல் பற்றியும் அந்த பாடலுக்கு பின் உள்ள சுவாரஸ்யம் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை அவ்வையார் தெருக்களின் வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்பொழுது ஒரு வீட்டின் வெளிப்புற மாதிரி சுவரில் ஏழு சீர்களால் அமைக்கப்பட்ட இரண்டு அடி பாடல் ஒன்று எழுதப்பட்டு இருந்ததாம். அப்பாடலை படித்த அவ்வையார் அப்பாடலின் சொற்சுவையும் பொருட்சுவையும்  கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம். எனவே அந்தப் பாடலின் மீதமுள்ள வரிகளையும் அதன் சுவையையும் அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த வீட்டின் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றாராம்.

அப்பொழுது அந்த வீட்டின் உள்ளே இளம் பெண் ஒருவர் சோகமான முகத்துடன் அமர்ந்திருந்தாராம். அதை கண்ட அவ்வையார், 'இளம் பெண்ணே! நீ ஏன் வாடிய முகத்துடன் இருக்கிறாய் உன்னுடைய சோகத்துக்கான காரணம் என்ன?' என்று கேட்டாராம். கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்று இருந்த இளம் பெண்ணை பார்த்து, 'இந்த வீட்டின் சுவரில் சொற்சுவை நிறைந்த பாடலின் இரண்டு அடிகள் எழுதி இருப்பதைக் கண்டேன். எனவே அதன் முழு சுவையையும் அறிந்து கொள்ளும் ஆவலில், உன் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டேன். மீதமுள்ள அந்த பாடலின் வரிகள் என்ன?' என்று கேட்டாராம்.

அதற்கு அந்த இளம் பெண்ணோ, 'அதை ஏன் கேட்கிறீர்கள் பாட்டி? அது  ஒரு பெரிய கதை' என்று கூறி தன் கதையை சொல்லத் தொடங்கினாராம். இந்த நாடெங்கும் கம்பரின் பெருமையும், அவர் பாடும் கவிதையின் பெருமையும் பரவி கிடக்கிறது. என் பெயர் சிலம்பி. ஏழைப் பெண்ணான எனக்கும்  கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் நான் அதை கற்றுக் கொண்டு வருகிறேன். இப்படி இருக்கும் சூழலில் கம்பரின் கவி பாடும் பெருமைகளை கேட்டு கேட்டு அவர் வாயால் என்னைப்பற்றி ஒரு செய்யுள் பாட வைத்து கேட்க வேண்டும் என்று எனக்குள் ஆசை உண்டாகி விட்டது. நாளடைவில் அது தீராத ஏக்கமாகவும் மாறிவிட்டது.

எனவே என்னிடமிருந்த பொன், பொருள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எப்படியாவது கம்பரின் வாயால் என்னைப் பற்றி ஒரு பாடல் பாடி கேட்டு விட வேண்டும் என்று பொன்னையும் பொருளையும் அவருக்கு காணிக்கையாக கொடுத்தேன். கம்பர் 1000 பொன்னுக்கு ஒரு பாடல் பாடுபவராம். ஆனால் என்னிடம் இருதோ 500 பொன்தான். அதனால் கம்பர் பாடலின் இரண்டு வரிகளை மட்டும் பாடி கொடுத்து விட்டு மீதமுள்ள 500 பொன்னை கொடுக்கும் போது மீதமுள்ள இரண்டு வரிகளை பாடி கொடுப்பதாக சொல்லிவிட்டார். எனக்கு இனிமேல் எங்கே 500 பொன் கிடைக்க போகிறது. எனவே என்னுடைய ஆசை, பகுதியிலேயே நிராசை ஆகிவிட்டது என்பதை எண்ணித்தான் நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்,' என்று கூறினாளாம்.

அதைக் கேட்ட அவ்வையார், 'அதனால் என்ன, மீதமுள்ள வரிகளை நானே பாடி பாடலை நிறைவு செய்து தருகிறேன்' என்று கூறி மீதமுள்ள இரண்டு வரிகளை  பாடினாராம். அப்படி முதல் 2 அடிகளை கம்பர் பாட, அடுத்து  வரும் 2  அடிகளை  அவ்வையார் பாடி முடிக்கப்பட்ட பாடல் தான் தண்ணீரும் காவிரியே எனத் தொடங்கும் இந்த பாடல்:

தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!

மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு!

தண்ணீரிலே சுவையானது காவிரி ஆற்றுத் தண்ணீர்!  அரசர்களிலே சிறந்தவன் சோழச் சக்கரவர்த்தி! மண்வளத்திலே சிறந்தது சோழர் தேசத்து மண்! பெண்கள் தங்களுடைய தாமரை போன்ற பாதங்களிலே அணியக்கூடிய சிலம்புகளிலே சிறந்தது சிலம்பியின் செம்பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு!

என்பதே  இப்பாடலின் பொருளாகும்.

சொல் நயமும் பொருள் நயமும் அமையப்பெற்ற இந்தப் பாடல் அவ்வையார் தனிப்பாடல்கள் என்ற நூலில் உள்ளது. பாடல்களுக்கு புலியூர் கேசிகன் உரை எழுதியுள்ளார். இது போன்ற பாடல்களை படிப்பதன் மூலம் நம் முன்னோர்கள் வாழ்க்கையில் நிறைந்திருந்த பல்வேறு விதமான சுவாரசியங்களையும், தாய்மொழியின் சிறப்பினையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

நேரம் கிடைக்கும் போது தமிழில் இருக்கக்கூடிய அரிய வகை பொக்கிஷமான நூல்களை வாசித்துப் பாருங்கள்! சிந்தனை விரிவடைந்து வாழ்வு வளம் பெறட்டும்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT