மங்கையர் மலர்

தூக்கி எறியப்படும் கொட்டங்குச்சி! மாற்றி யோசி... பலனை அனுபவி!

செப்டம்பர் 02 - உலக தேங்காய் தினம்!

சேலம் சுபா

யற்கை தந்த பெரும் கொடையான தென்னை மரத்தின் பெருமைகளை உணரவும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பயனளிக்கும் தென்னை சார்ந்த பொருள்களின் தேவைகளை நினைவு படுத்தும் விதமாகவும் இன்று (செப்டம்பர் 2) உலக தேங்காய் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

     ‘பெற்ற பிள்ளைகள் தராத பாதுகாப்பை வளர்க்கும் தென்னம் பிள்ளைகள் தரும்’ என்ற சொலவடையைக் கேட்டுள்ளோம். ஆம். தென்னை வளர்ப்போருக்கு என்றுமே இல்லாமை இருக்காது. காரணம் மனிதரின் அன்றாட உணவுக்கு முக்கியத் தேவையாக இருக்கும் தேங்காய்கள் தரும் தென்னையின் இளநீர், ஓலை, மட்டை, குருத்து போன்ற எல்லா பாகங்களும் பல்வேறு விதங்களில் உதவி தென்னையை வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. எனினும் இவற்றுள் உணவுக்கு ஆதாரமாக இருக்கும் தேங்காய்களே மதிப்பில் முதலிடம் பெறுகின்றன.

    தேங்காயில் உள்ள நீரை உயிர்சத்து தரும் அமிர்தமாகக் கருதுவதுண்டு. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுத்து, உடல் உற்சாகத்தை உடனடியாகத் தருகிறது. மேலும் தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால் ஜீரண சக்திக்கு உதவி உடலின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது. தேங்காய் மட்டுமின்றி இளநீர் மற்றும் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் நிறைந்த சத்துகளுடன் நம் உடல் நலம் ஆரோக்கியம் பெற உதவுகிறது. 

     சரி இவையெல்லாம் நாம் அறிந்த விஷயங்களே. எதற்குமே பயன்படாது என்று நாம் தூக்கி எறியும் ஒரு ‘தேங்காய் விஷயம்’ இருக்கே... அதைப்பற்றி சிந்திப்போமா? சந்திப்போமா?

     காலை அவசரத்தில் சட்னிக்குத் தேங்காயை உடைத்து பரபரவென்று அதைத் திருவி பின் அவசரமாக தேங்காய் ஓடுகளை குப்பையில் போடுவதே பெரும்பாலோரின் பழக்கம். ஆனால், அவற்றை கலைக் கண்ணுடன் பார்த்த கலைஞர் அந்த கொட்டாங்குச்சிகளை எடுத்து அதை அழகாக மாற்றி அதை விற்பனைக்கு வைக்கும்போது தூக்கி எறிந்த நாமே அதைக் கண்டு ஆஹா என வியந்து விலை தந்து வாங்கி வருவோம்.

    ஆம்... தற்போது சுற்றுச்சூழல் மாசு குறித்தான விழிப்புணர்வு பெருகி வரும் வேளையில் கொட்டாங்குச்சிகளையும் பயனுள்ள பொருட்களாக மாற்றி சமையறையிலும் அழகுப் பொருள்களாகவும் தருகின்றனர் சில இளம் தொழில்முனைவோர்.

     அதில் ஒருவர்தான் சேலத்தைச் சேர்ந்த ப்ரீத்தி மதன். இவர் செய்யும் கொட்டாங்குச்சியாலான கலைப் பொருள்கள் இந்தியா முழுவதும் பயணிக்கின்றன. கண்களை கொள்ளை கொள்ள வைக்கிறது இந்த மதிப்புக் கூட்டிய பொருள்கள். இதைப் பற்றி ப்ரீத்தி என்ன சொல்கிறார்? கேட்போம். 

      “இந்த உலக தேங்காய் தினத்தில் தென்னை விவசாயிகள் மற்றும் என்னைப் போல் தென்னைப் பொருள்கள் சார்ந்த தொழில் செய்வோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ப்ரீத்தி

     நானும் கோவையில் உள்ள என் அண்ணன் பாலாவும் இணைந்து இரண்டு வருடங்களாக இந்த தொழிலை நடத்துகிறோம். இருவருமே பி இ பட்டதாரிகள்தான். ஒரு கண்காட்சிக்கு சென்றபோது இந்தப் பொருள்களைப் பார்த்து இதை நாமும் முயன்றால் என்ன என்று நினைத்து இதற்கான தேடல்களில் இறங்கி அடிப்படையைக் கற்றோம். கொட்டாங்குச்சி மருத்துவ குணம் கொண்டது என்பதால் சமையல் அறைக்குத் தேவைப்படும் கரண்டிகள், பவுல்கள், கப்புகள் போன்றவற்றை அந்தந்த தேங்காயின் அளவுக்கேற்ற வகையில் உருவாக்குகிறோம்.

    ஒவ்வொரு பொருளுமே எங்கள் தனிக் கவனத்துடன் கைகளினால் மட்டுமே உருவாக்குகிறோம். முக்கியமான விஷயம் இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரே கொட்டாங்குச்சியில் மட்டுமே செய்யப்படுகின்றன. மேலும் எவ்விதமான கெமிக்கல்களும் இதில் பயன்படுத்துவதில்லை. இதற்கான கொட்டங்குச்சிகளை தேங்காய் பண்ணைகளுக்கு சென்று தகுந்த விலை தந்து சிறியது முதல் பெரியது வரை தேவையான அளவுகளில் உள்ளவற்றை தேர்ந்தெடுப்போம். இதனால் அவர்களுக்கும் லாபம். எங்களுக்கும் மதிப்புக் கூட்டி விற்கும்போது லாபம்.

பாலா

    இதை தொழில் என்று சொல்வதை விடக் கலை என்றே சொல்லவேண்டும். காரணம் இந்தப் பொருள்கள் செய்ய பொறுமையுடன் அவரவரின் கிரியேட்டிவ் முக்கியக் காரணம் ஆகிறது.

தற்போது நாங்கள் உருவாக்கிய ஹாண்ட் வாஷ் பாட்டில், ரக்ஷாபந்தன், குழந்தைகள் விரும்பும் பேனா ஸ்டாண்ட், பிரஷ் ஸ்டாண்ட் மற்றும் ஹோட்டல்களில் மிளகு உப்பு போடும் குப்பிகள் என்று பல பொருள்கள் எங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

     இந்தியாவில் மிகக் குறிப்பிட்ட சதவிகிதமே இந்தத் தொழிலில் இறங்கி உள்ளனர். இன்னும் இதைக் குறித்த விழிப்புணர்வு அதிகம் வரவேண்டும்.

     கீழே போட்டால் எளிதில் உடையும் என்ற அச்சத்தாலும் விலை அதிகம் என்பதாலும், மக்கள் இவற்றை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ குணம் அறிந்தவர்கள் நிச்சயம் இவற்றை வாங்கி உபயோகிப்பார்கள். வீசிங், மூச்சிரைப்பு போன்ற உடல் நலப் பாதிப்புகள் இவற்றை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தும்போது நிச்சயம் குணமாகும் என்று மருத்துவம் சொல்கிறது.

    தற்போது ஆன்லைன் மூலமாக மட்டுமே எங்கள் விற்பனை நடக்கிறது. விரைவில் இந்தக் கொட்டங்குச்சி பொருள்களின் மகத்துவம் புரிந்து இதற்கு பெரும் ஆதரவு கிடைக்கும். அப்போது இன்னும் பலரால் இத்தொழில் துவங்கப்பட்டு பொறலிவு பெறும்.”

     இளைஞர்கள் நினைத்தால் எதிலும் முன்னேறலாம் என்பதற்கு ப்ரீத்தியும் பாலாவும் சான்று. கொஞ்சம் மாற்றி யோசித்து தூக்கி எரியும் பொருளை மதிப்புக்குரிய பொருளாக உயர்த்தி, தொழில் செய்யும் இவர்களை வேலை தேடும் இளைய தலைமுறை பின்பற்றினால் தென்னை விவசாயம் மேலும் சிறக்கும்.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT