முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டவை. அத்தகைய முருங்கை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் முருங்கை எண்ணெயில் முதுமையை தள்ளிப்போடும் வகையில் பல்வேறு வகையான பயன்கள் உள்ளன. அவற்றை இப்பதிவில் காணலாம்.
முருங்கை காய்களை மரத்திலேயே நன்கு காயவிட்டு, அந்த காய்களை உரித்து எடுக்கப்படும் விதைகளில் உள்ள பருப்பை நன்கு காயவைத்து செக்கில் ஆட்டி எடுக்கப்படுவது தான் முருங்கை எண்ணெய்.
இத்தகைய முருங்கை எண்ணெய் தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
முருங்கை விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயில் அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் விட்டமின் ஈ மற்றும் சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் உள்ள ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடுகிறது. ஃப்ரீ ரேடிக்கல் என்பது ரத்தம் மற்றும் திசுக்களில் பரவக்கூடிய நிலையற்ற மூலக்கூறுகள். இது நம் உடலில் உள்ள திசுக்கள், சருமம், முடிக்கு தீங்கு விளைவித்து வயதை துரிதப்படுத்துவதால் வயதான தோற்றத்தை அளிக்கிறது. முருங்கை எண்ணெய் இந்த ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலை படுத்துவதன் மூலம் உடலில் தோன்றும் சுருக்கங்கள், நிறமி போன்றவற்றின் வெளிப்படை தன்மை தடுக்கப்படுகிறது.
முருங்கை எண்ணெயை சருமத்தில் தடவும் போது சருமத்தில் உள்ள சேதமடைந்த திசுக்களை சரி செய்து இளமையை மீட்டு தருகிறது. கண் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருவளையம் உள்ள இடங்களில் இதனை தொடர்ந்து தடவி வர கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.
30 வயதுக்கு மேல் முகத்தில் தோன்றும் மங்கு, தோல் சுருக்கம் போன்றவற்றை நீக்குவதற்கு முருங்கை எண்ணெய் மிகவும் பயன்படுகிறது.
மேலும் முருங்கை எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது தலைமுடி நன்கு வளர்கிறது.
முருங்கை எண்ணெயில் ஓலிக் அமிலம் உள்ளதால் இது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மிகவும் பயன்படுகிறது.
முருங்கை எண்ணெயில் அதிக கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனால் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவி செய்வதோடு, கோலஜன் உற்பத்தியும் அதிகரிக்கிறது. முருங்கை எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதோடு மிருதுவான தன்மை கொண்டதாக மாறுகிறது.
முருங்கை எண்ணெயில் உள்ள ஸ்டெரால் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு பயன்படுகிறது.
முருங்கை எண்ணெய் அழகு சாதன பொருட்களில் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தலையில் ஏற்படும் பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சியை சீராக்குவதில் முருங்கை எண்ணெயின் பயன்பாடு மிகவும் அதிகம். கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருங்கை எண்ணையை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும் முருங்கை எண்ணெய் கூந்தல் வறண்டு போவதை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. முருங்கை எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடியின் சுத்தம் நன்கு பராமரிக்கப்படுகிறது. தலையில் அழுக்கு அதிகமாக படிந்தால் அதனால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகும். முருங்கை எண்ணெயை பயன்படுத்தும் போது வேர்க்கால்கள் பலவீனமாவது தடுக்கப்பட்டு முடி உதிர்வு ஏற்படுவது குறைகிறது.
இவ்வளவு பயன்கள் நிறைந்த முருங்கை எண்ணெய் நம்மிடையே இன்னும் பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பல்வேறான நாடுகளில் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இதில் இருக்கும் மருத்துவ குணங்களை ஆராய்ந்து இப்பொழுது தான் மெல்ல மெல்ல இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை எண்ணெயை நாமும் தாராளமாக வாங்கி பயன்படுத்தலாமே!